Published : 03 Jul 2019 02:14 PM
Last Updated : 03 Jul 2019 02:14 PM

அடுத்து வரும் போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கு நானே பொறுப்பு: கோலியின் வாக்குறுதியால் மகிழ்ந்த சாருலதா பாட்டி

இந்தியா- வங்கதேசம் இடையே நேற்று நடந்த போட்டியில் இந்திய அணியை மைதானத்தில் இருந்து விசில் அடித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த பாட்டி சாருலதாவுக்கு அடுத்துவரும் போட்டிகளுக்கான டிக்கெட் பொறுப்பு தன்னுடையது என்று இந்திய கேப்டன் கோலி தெரிவித்துள்ளார். இதனால் சாருலதா பாட்டி மகிழ்ச்சி அடைந்தார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியா - வங்கதேசத்துக்கு இடையேயான போட்டி நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 314 ரன்கள் குவித்தது.

ஆட்ட விறுவிறுப்புக்கு இடையே மைதானத்தின் முன்வரிசையில் அமர்ந்து இந்திய வீரர்களை உற்சாகப்படுத்திய 87 வயது ரசிகை சாருலதா படேல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தியா 4, 6 விளாசும் போதெல்லாம் தன் கையிலிருந்த சிறிய பிளாஸ்டிக் ட்ரம்பட்டை வைத்து ஓசை எழுப்பி உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார் சாருலதா.

இவரது புகைப்படங்களும், வீடியோவும் வைரலாகப் பகிரப்பட்டது.  போட்டி முடிந்த பின்னர் கேப்டன் கோலியும், ரோஹித்தும் சாருலதா பாட்டியைச் சந்தித்தனர்.

இதுகுறித்து சாருலதா படேல் கூறும்போது, ''கோலி போட்டி முடிந்த பிறகு என்னைப் பார்க்க வந்தார். அவர் என் காலைத் தொட்டு வணங்கினார். நான் அவருக்கு ஆசிர்வாதம் செய்தேன்.  சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையை வெல்லுங்கள் என்று கூறினேன். 

நான் எப்போதும் இந்திய அணியின் வெற்றிக்காக எனது அடி மனதிலிருந்து பிரார்த்திப்பேன்.

விராட் கோலி அடுத்து வரும் போட்டிகளிலும் என்னை எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஆனால், என்னிடம் அதற்கான டிக்கெட் இல்லை என்று அவரிடம் கூறினேன். அதற்கு அதனைப் பற்றி கவலைப்படாதீர்கள். நான் தருகிறேன்'' என்றார்.

சாருலதா பாட்டியின் கிரிக்கெட் ஆர்வத்தை உணர்ந்து யாராவது அவரின் விவரத்தைக் கொடுத்தால், நான் அவருக்கு அடுத்த போட்டிகளைப் பார்ப்பதற்கு டிக்கெட் அளிக்கத் தயார் என்று மகேந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x