Last Updated : 03 Jul, 2019 03:25 PM

 

Published : 03 Jul 2019 03:25 PM
Last Updated : 03 Jul 2019 03:25 PM

இந்த முறைதான் கடைசி: உலகக் கோப்பையுடன் தோனி ஓய்வு?- மறக்க முடியாத பிரியாவிடை இருக்குமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, இந்த உலகக் கோப்பைப் போட்டியுடன் ஓய்வு பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றால், இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்புதான் என்றாலும், அடுத்து வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு கதவுகள்திறக்கும்.

உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிக்கு இந்தியஅணி தகுதிபெற்றுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வெல்லும் அசாத்திய திறமை இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால், தோனி ஓய்வு பெறும்போது அவருக்கு அளிக்கும் மிகச்சிறந்த பரிசாகவும், பிரியாவிடையாகவும் இருக்கும்.

இந்திய அணிக்கு ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற கோப்பைகளைப் பெற்றுக்கொடுத்தவர் தோனி. 2007 முதல் 20016-ம் ஆண்டுவரை இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாகவும், 2008 முதல் 2014-ம் ஆண்டுவரை டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருந்தார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்ற தோனி, தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும், டி20 போட்டிகளிலும் மட்டுமே ஆடி வருகிறார். 2007-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் இருந்து தற்போது இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பை வரை 4-வதுமுறையாக தோனி  பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் வயது மூப்பு, முன்புபோல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாதது போன்றவற்றால் அவ்வப்போது விமர்சனங்களை தோனி சந்தித்து வருகிறார். ஆதலால், இந்த உலகக் கோப்பையோடு தோனி ஓய்வு அறிவிப்பார் என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " தோனி இந்த உலகக் கோப்பைப் போட்டிக்குப் பின் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வகையான போட்டிகளிலும் கேப்டன் பதவியை திடீரென உதறியவர் தோனி. ஆனால், தோனியைப் பற்றி யாருக்கும் ஏதும் தெரியாது. ஆதலால், எந்த நேரத்தில் எந்த முடிவை எடுப்பார் எனத் தெரியாது" எனத் தெரிவித்தார்.

இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில் இப்போது பிசிசிஐ நிர்வாகமோ அல்லது, அணிநிர்வாகமோ தோனி குறித்து பேசவிரும்பவில்லை. தற்போதுள்ள தேர்வுக்குழு வரும் அக்டோபர் மாதம் வரை தொடரும். அதன்பின் புதியத் தேர்வுக்குழு பதவிஏற்று, அடுத்தஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கான முடிவுகளை எடுக்கும். அப்போது, தகுந்த முடிவுகளை வாரியம் எடுக்கும்.

உலகக் கோப்பைப் போட்டியில் 7ஆட்டங்களில் ஆடியுள்ள தோனி இதுவரை 223  ரன்கள் சேர்த்து, 93 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். அவரின் அதிரடி ஆட்டம் , பேட்டிங், ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகியவை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தபோதிலும் அவரின் ஆட்டத்தில் அது பிரதிபலிக்கவில்லை.

முன்னாள் இந்திய வீரர் ஒருவர் கூறுகையில், " 2017-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணி நிர்வாகம் ஏதாவது முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால், கூடுதலாக 2 ஆண்டுகள் தோனி மீது எதிர்பார்ப்புகளையும் முதலீட்டையும் வைத்துள்ளது. இப்போது இந்திய அணியும் உலகக் கோப்பைப் போட்டியில் அரையிறுதிவரை வந்துவிட்டது. யாரும் தோனியிடம் சென்று ஓய்வு குறித்து பேச முடியாது. ஆனால், உலகக் கோப்பை முடிந்தபின் இப்போதுள்ள சூழல் ஒரேமாதிரியாக இருக்காது" எனத் தெரிவித்தார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x