Published : 13 Aug 2017 06:12 PM
Last Updated : 13 Aug 2017 06:12 PM

பாண்டியா அதிரடி, குல்தீப் அபாரம்; இலங்கை பாலோ ஆன்: 3-வது டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்

பல்லகிலே டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 487 ரன்களை எதிர்த்து இலங்கை தன் முதல் இன்னிங்சில் 135 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட முடிவில் இலங்கை அணி பாலோ ஆனில் தரங்கா விக்கெட்டை இழந்து 19 ரன்கள் எடுத்துள்ளது.

காலையில் 329/6 என்று களமிறங்கிய போது 1 ரன்னில் இருந்த ஹர்திக் பாண்டியா அதிரடி சதம் விளாசி 86 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து பிறகு 96 பந்துகளில் 8 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். குல்தீப் யாதவ் தன் பேட்டிங் திறமைகளை வெளிப்படுத்தி 26 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 122.3 ஓவர்களில் 487 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நல்ல வேளையாக ஆல் அவுட் ஆனது, இல்லையெனில் விராட் கோலி நிச்சயம் 600 ரன்கள் அல்லது பாண்டியா 200 என்று டிக்ளேருக்கு காத்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அணி தன் முதல் இன்னிங்ஸை தொடங்கிய போது மொகமது ஷமி அபாரமாக வீசினார், உமேஷ் யாதவ்வும், இவரும் தொடர்ந்து இலங்கை தொடக்க வீரர்களான கருண ரத்ன, தரங்காவை அதிகபந்துகளை மட்டையில் விளையாடச் செய்தனர், நன்றாக ஸ்விங் செய்தனர், பந்துகளை மட்டையில் ஆடிக் கொண்டேயிருந்தால் ஒரு பந்தை வெளியே போடும்போது பந்தை ஆட வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதுபோல்தான் தரங்கா 5 ரன்களில் ஷமி வீசிய உள்ளே வந்த பந்தை அதிக ஸ்விங்குக்காக எதிர்பார்த்து ஆடினார் எட்ஜ் ஆனது சஹா வலது புறம் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். ஆனால் இதைப்போய் தரங்கா ரிவியூ செய்து இலங்கை அணிக்கு ஒரு ரிவியூவையும் காலி செய்தார், மிக மோசமான ரிவியூ.

ஷமி தொடர்ந்து பேட்ஸ்மென்கள் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக வீசினார், கருணரத்ன 4 ரன்களில் இருந்த போது தரங்கா போலவே கூடுதல் ஸ்விங்குக்காக எதிர்பார்த்து வெளியே சென்ற பந்தை ஆட முற்பட்டார், ஆனால் அது அவ்வளவாக ஸ்விங் ஆகவில்லை, எட்ஜ் ஆனது மீண்டும் சஹா. கிட்டத்தட்ட தரங்காவும் இவரும் ஒரே பாணியில் ஷமியிடம் வீழ்ந்தனர், ஷமி அபாரமாக அவர்கள் அணுகுமுறையை தன்வசமாக்கினார் என்றே கூற வேண்டும்.

மெண்டிஸ் 4 பவுண்டரிகளுடன் 19 பந்துகளில் 18 ரன்கள் என்று நம்பிக்கையுடன் ஆடிவந்த தருணத்தில் அஸ்வினின் அருமையான பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார். அதாவது லெக் திசையில் அஸ்வின் முதலில் நன்றாக பீல்ட் செய்து த்ரோ செய்தார் பந்து ஸ்டம்பில் படாமல் தாண்டிச் சென்றது, ஆனால் கவரில் பந்தைப்பிடித்த குல்தீப் யாதவ் ரன்னர் முனையில் அடிக்க மெண்டிஸ் ரீச் ஆகவில்லை.

அஞ்சேலோ மேத்யூஸ் தன் எண்ணிக்கையைத் தொடங்க்கும் முன்னரே இன்றைய நாயகன் பாண்டியாவின் இன்ஸ்விங்கரில் பீட் ஆகி கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார். ஆனால் இவர் ரிவியூ செய்யவில்லை, செய்திருந்தாலும் பயனில்லாமல் போயிருக்கும், இது பிளம்ப் எல்.பி. இலங்கை 38/4 என்று சரிந்தது.

அதன் பிறகு சந்திமால், டிக்வெல்லா இணைந்து ஸ்கோரை 101 ரன்களுக்குக் கொண்டு சென்றனர். டிக்வெல்லா 31 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் என்று நன்றாகவே ஆடினார், ஆனால் குல்தீப் யாதவ் வீசிய கூக்ளியை இறங்கி வந்து அடிக்க முயன்றார் பந்து திரும்பியதால் மட்டையில் சிக்கவில்லை, மட்டைக்கும் கால்காப்புக்கும் இடையே புகுந்தது சஹா சம்பிரதாயத்தை முடித்து வைத்தார். 101/4 என்ற நிலையிலிருந்த் டிக்வெல்லா விக்கெட்டுடன் சரிவு தொடங்க அடுத்த 34 ரன்களுக்கு இலங்கை 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களுக்குக் காலியானது. அதிகபட்ச ஸ்கோரை எடுத்த சந்திமால் 87 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வினின் பந்தை சரியாக ஆடாததால் பந்து மட்டையில் பட்டு, கால்காப்பில் பட்டு லெக் கல்லியில் கேட்ச் ஆனது.

பெரேரா ஷார்ட் பிட்ச் பந்தை குல்தீப் யாதவ் வீச மிட்விக்கெட்டில் நேராக பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, புஷ்பகுமாரா 10 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மிகவும் ஸ்மார்ட் கேப்டன்சியில் குல்தீப் யாதவ்வுக்கு சிலி பாயிண்டைக் கொண்டு வர கவர் திசை காலியானவுடன் குல்தீப் பந்தை டிரைவ் ஆட முயன்றார், பந்து கூக்ளி ஆனது ஸ்டம்பை பதம் பார்த்தது, இது அருமையான கேப்டன்சி, அதைப் புரிந்து கொண்ட சமயோசித பந்து வீச்சு. 37.4 ஓவர்களில் இலங்கை அணி 135 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

352 ரன்கள் முன்னிலை பெற்றதால் இலங்கை அணியை பாலோ ஆன் ஆடப் பணித்தார் விராட் கோலி. ஆட்ட முடிவில் உமேஷ் யாதவ் பந்தில் தரங்கா (7) பவுல்டு ஆக கருணரத்ன 12 ரன்களுடனும், இரவுக்காவலன் புஷ்பகுமாரா ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர், இலங்கை 19/1 என்று இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க கடுமையாக போராடும் நிலையில் உள்ளது. 3 நாட்களில் டெஸ்ட் முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் இன்னிங்சில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் 40 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும் அஸ்வின், ஷமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற பாண்டியா 1 முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x