Published : 07 Nov 2014 06:53 PM
Last Updated : 07 Nov 2014 06:53 PM

கிரெக் சாப்பல் பற்றிய சச்சின் கருத்தை மறுக்கிறார் ஆஸி. கிரிக்கெட் எழுத்தாளர்

2007 உலகக் கோப்பைக்கு முன் தன்னை கேப்டன்சி பொறுப்பை ஏற்குமாறு கிரெக் சாப்பல் வலியுறுத்தியதாக சச்சின் தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார். அதனை மறுத்து சாப்பல் தரப்புக்காக வாதாடுகிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் எழுத்தாளர் மால்கம் நாக்ஸ்.

சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் மால்கம் நாக்ஸ் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது:

“டான் பிராட்மேன் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் சச்சின் இணைக்கப்படுவதற்காக அருமையாக அன்று போவ்ராலில் வரவேற்கப்பட்டார். ஆனால் சச்சின் சுயசரிதையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பற்றிய கூறியிருக்கும் எதிர்மறைக் கருத்துகள் அப்போது வெளியாகியிருந்தால், சச்சின் இந்த நிகழ்ச்சியில் தடுமாறியிருப்பார். ஆனால் சுயசரிதை இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியானதால் சச்சினின் தர்மசங்கடம் காப்பாற்றப்பட்டுள்ளது.

2005 முதல் 2007ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தார் கிரெக் சாப்பல், மூத்த வீரர்கள் மீது அவர் கவனம் சென்றது உண்மைதான்.

சச்சின் தன் சுயசரிதையில் சாப்பல் தன் வீட்டிற்கு 2007 உலகக் கோப்பை போட்டிகளுக்கு சில மாதங்கள் முன் வந்திருந்தார் என்று கூறியுள்ளார். சாப்பல் அதே நிகழ்வு பற்றி கூறுகையில் சில மாதங்கள் அல்ல 12 மாதங்களுக்கு முன்னதாக சச்சின் வீட்டிற்குச் சென்றதாகக் கூறியிருந்தார்.

ஒரே நிகழ்வு பற்றி இந்த இரண்டு வேறுவிதமான பதிவுகள் உருவாகியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு முன்பு கிரெக் சாப்பலின் ஃபியர்ஸ் ஃபோகஸ் என்ற அவரது நூலுக்காக அவருடன் சேர்ந்து நான் பணியாற்ற வேண்டியிருந்தது. அப்போது அவரது டைரியை நான் படிக்க நேர்ந்தது. அதில் மிக விவரமாக இந்த விஷயம் எழுதப்பட்டிருந்தது. சாப்பல் இதனை தனக்காக எழுதிக் கொண்டார். வெளியிடுவதற்காக அல்ல. நான் இப்போது அது பற்றி எழுதுவது கூட அவரது சம்மதம் இல்லாமல்தான். அவரது டைரியைப் படித்த நான் அவரை சச்சினின் தாக்குதலிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

சாப்பலின் டைரியில் ஒரேயொரு முறை சச்சின் வீட்டிற்கு சென்றதன் குறிப்பு இருக்கிறது. சச்சின் கூறுவது போல் அல்லாமல் உலகக் கோப்பை போட்டிகளுக்கு ஓராண்டுக்கு முன்னால் சாப்பல் சச்சின் வீட்டிற்குச் சென்றார். அதாவது அந்தத் தேதி 2006, மே 9. அதாவது மறுநாள் இந்திய அணி திராவிட் தலைமையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்காக மே.இ.தீவுகள் செல்கிறது.

காயம் காரணமாக அந்தத் தொடருக்கு சச்சின் இல்லை. சச்சின் வீட்டிற்கு சாப்பல், உடற்பயிற்சியாளர் ஜான் குளோஸ்டர், கிரண் மோர் (அணித் தேர்வுக்குழுவில் இருந்தவர் சச்சின் குறிப்பிட்டுள்ளது போல் உதவிப்பயிற்சியாளர் அல்ல) ஆகியோர் சென்றனர். அஞ்சலி டெண்டுல்கரும் உடனிருந்தார்.

சாப்பலின் டைரியின் படி, லஞ்ச் எடுத்துக் கொண்டு சச்சினின் உடல் நிலை பற்றி விவாதித்தனர். சச்சினுக்கு மிக ஆதரவாக இருந்தார் சாப்பல். கேப்டன்சி பற்றி எந்த வித பேச்சும் எழவில்லை. எதற்கு எழ வேண்டும்? கங்குலிக்கு பதிலாக திராவிட் கேப்டன்னாக்கப்பட்டதில் சாப்பல் பங்கு இருக்கிறதே.. பின் எதற்கு அவர் கேப்டன்சி பற்றி பேசியிருக்கப் போகிறார்.

தனிப்பட்ட முறையிலும், பொதுவிலும் திராவிட் மீது அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்தார் சாப்பல். அந்த ஒரே வருகைதான் சாப்பல் டைரியில் இருக்கிறது. பிற்பாடு அதே டைரியில் அவர், திராவிடின் கேப்டன்சியை மதிக்காது நடந்து கொள்ளும் வீரர்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர சச்சின் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவர் கருதியிருந்தார். ஆனால் சச்சின் மீண்டும் கேப்டனாக வரவேண்டும் என்பதை சாப்பல் கற்பனையில் கூட விரும்பவில்லை. 2,000 ஆம் ஆண்டே சச்சின் கேப்டன்சி பதவி தனக்கு ஒத்து வராது என்று உதறிவிட்டார்.

ஆகவே, என்ன நடக்கிறது? இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்ததா? சதிக்கோட்பாட்டாளர்கள் கூறலாம், சச்சின் குறிப்பிட்ட அந்த சந்திப்பை சாப்பல் தனது டைரியிலிருந்து நீக்கியிருக்கலாம் என்று.

ஆனால் நான் சாப்பல் டைரியை பார்த்த ஆண்டு 2011.

டைரி எழுதுபவராக சாப்பலை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு சந்திப்பு, ஒவ்வொரு பயிற்சி முகாம் என்று அனைத்தையும் துல்லியமாக அவர் பதிவு செய்பவர். எனவே இப்போது அந்தச் சந்திப்பை பற்றி இப்படியொரு அவதூறு கிளம்பலாம் என்று அவர் அப்போதே அந்தப் பக்கங்களை நீக்கியிருக்கலாம் என்று கூற முயன்றால் அது நம்பிக்கைச் சார்ந்ததாகவே இருக்கும்.

மேலும், சச்சின் இந்தச் சந்திப்பு பற்றி கூறியதில் துல்லியமில்லை. அவர் தவறாக நினைவு கொண்டிருக்கலாம், அல்லது அவரது கோஸ்ட் எழுத்தாளர் அவர் கூறியதை தவறாக மேற்கோள் காட்டியிருக்கலாம். ஆனால் அவரும் இதுவரை இது பற்றி ஒன்றும் கூறவில்லை.

ஆகவே நான் ஒரே ஒரு முடிவுக்கு மட்டும்தான் வர முடிகிறது. சச்சின் வேண்டுமென்றே இப்படி எழுதியுள்ளார். அவர் ஏன் இப்படி எழுத வேண்டும்? காரணம் உள்ளது. திராவிடின் சாதகத்தை வென்றெடுக்கவே சச்சின் இப்படிக் கூறியுள்ளார். டெண்டுல்கர் போன்று ‘கடவுள் அந்தஸ்து’ திராவிடிற்குக் கிடையாது. அவர் பிற நாட்டு வீரர்கள் மீது பாராட்டுதலும், அபிமானமும், மரியாதையும் உள்ளவர், அவரது நேர்மைக்கு நிகர் அவரே.

2007 உலகக்கோப்பைக்குப் பிறகே இந்திய அணியின் பிரச்சினைகளுக்கு கிரெக் சாப்பல் காரணமாகக் காட்டப்படுகிறார்.

என்று மால்கம் நாக்ஸ் தனது பத்தியில் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x