Last Updated : 28 Aug, 2017 04:34 PM

 

Published : 28 Aug 2017 04:34 PM
Last Updated : 28 Aug 2017 04:34 PM

‘பாகிஸ்தானுக்கு எதிராக என்றால் ஒரு காலில் கூட ஆடுவேன்’- தோனியின் உறுதி; எம்.எஸ்.கே. பிரசாத் நெகிழ்ச்சிப் பதிவு

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டிய நிலையில் காயமடைந்து நடக்கக் கூட முடியாத நிலையிலும் தோனி ஆடுவேன் என்று உறுதியாக இருந்த ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியுடன் கூறினார் தற்போதைய அணித்தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.எஸ்.கே. பிரசாத் அப்போது தனக்கும் தோனிக்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே தெரிவித்தார்.

அப்போது தோனி கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி எம்.எஸ்.கே.பிரசாத்...

“இந்த முக்கியப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக ஜிம்மில் வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட தோனி திடீர் முதுகுத் தசைப் பிடிப்பினால் அவதியுற்றார். வலுதூக்கும் கருவியுடன் கீழேயே விழுந்து விட்டார். உடனே மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டது. அவர் ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களமாகவும் இருந்தது. உடனே நான் தோனியின் அறைக்குச் சென்று என்னதான் ஆயிற்று என்று பார்க்கச் சென்றேன். அவர் என்னிடம், ‘கவலை வேண்டாம் எம்.எஸ்.கே பாய்” என்றார்.

மாற்று வீரர் வரவழைக்கலாமா என்றேன், அதற்கும் தோனி, ‘டோன்ட் ஒரி’ என்றார். ஆனால் எனக்கு திருப்தியளிக்கவில்லை, நான் தலைமைத் தேர்வாளர் சந்தீப் பாட்டிலிடம் தெரிவிக்க அவர் பார்த்திவ் படேலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அன்று மாலையே பார்த்திவ் படேல் அணியுடன் இணைந்தார்.

ஆசியக் கோப்பை விதிமுறைகளின் படி நாம் 24 மணி நேரம் முன்னதாக அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். நான் தோனி நிலை என்னவென்று மீண்டும் பார்க்கச் சென்றேன். அப்போதும் தான் விளையாடுவதாகவே அவர் கூறினார். அப்படி தோனி கூறும்போது தோனியினால் நடக்கக் கூட முடியவில்லை என்பதே எதார்த்த நிலை.

மீண்டும் இரவு 11 மணிக்கு தோனியின் அறைக்குச் சென்றேன், அவர் அங்கு இல்லை. நான் விடுதியின் டாப் புளோருக்குச் சென்றேன், அங்கு அவர் நீச்சல் குளம் நோக்கி நடக்க முடியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். நடக்கக் கூட முடியாத நிலையில் எப்படி விளையாட முடியும் என்று கூறுகிறார் என்று நான் ஆச்சரியமடைந்தேன்.

அப்போது தோனி என்னிடம் கூறினார், “கவலை வேண்டாம், என்னிடம் கூறாமலேயே பார்த்திவ்வை அழைத்து விட்டீர்கள். எனவே நீங்கள் பாதுகாப்பு அடைந்து விட்டீர்கள்” என்றார்.

ஆட்டம் ஆட வேண்டிய நாளில் தோனி சீருடையுடன் ஆடத் தயாராக இருந்தார். அப்போது என்னை அவர் தன் அறைக்கு அழைத்து, ஏன் இவ்வளவு கவலை அடைந்து விட்டீர்கள்? என்றார். பிறகு கூறினார், பாகிஸ்தானுக்கு எதிராகவென்றால் நான் ஒரு காலுடன் கூட ஆடிவிடுவேன். தோனி ஆடினார், இந்தியாவை வெற்றிக்கு அன்று இரவு இட்டுச் சென்றார்.

இதுதான் தோனி!

தோனி வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட்டுக்குள் வந்தவர். வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் ஒருவரது உள் ஆற்றல் அடுத்தக் கட்டத்துக்கு ஒருவரை அழைத்துச்செல்லும்”

இவ்வாறு கூறினார் பிரசாத்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x