Published : 31 Aug 2017 09:50 AM
Last Updated : 31 Aug 2017 09:50 AM

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஏஞ்சலிக் கெர்பர் அதிர்ச்சி தோல்வி- 5 செட்களில் போராடி வெற்றி பெற்றார் பெடரர்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறினார். சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 5 செட்களில் போராடி தோல்வியில் இருந்து தப்பித்தார்.

நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆடவர்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் 3-ம் நிலையில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 70-ம் நிலை வீரரான அமெரிக்காவை சேர்ந்த 19 வயது வீரரான பிரான்செஸ் டியாபோவை எதிர்த்து விளையாடினார். 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ள பெடரருக்கு, டியாபோ கடும் நெருக்கடி கொடுத்தார்.

முதல் செட்டை பெடரர் 4-6 என இழந்த நிலையில் அடுத்த இரு செட்களையும் 6-2, 6-1 என கைப்பற்றினார். 4-வது செட்டை டியாபோ 6-1 என கைப்பற்ற வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பானது. இந்த செட்டை பெடரர் 6-4 என தனதாக்கினார். இதனால் முதல் சுற்றுடன் வெளியேறுவதில் இருந்து அவர், தப்பித்தார். கடைசியாக பெடரர், 2003-ம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரில் முதல் சுற்றில் வீழ்ந்திருந்தார்.

டியாபோவுக்கு எதிராக சுமார் 2 மணி நேரம் 37 நிமிடங்கள் நடைபெற்ற ஆட்டத்தில் பெடரர் 4-6, 6-2, 6-1, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் 3-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்துக்கு குறிவைத்துள்ள 36 வயதான பெடரர், தனது 2-வது சுற்றில் ரஷ்யாவின் மிஹைல் யுஸ்னி அல்லது சுலோவேனியாவின் பிளஸ் காவிச்சை எதிர்கொள்வார்.

கெர்பர் தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால் 7-6 (8-6), 6-2, 6-2 என்ற நேர் செட்டில் 85-ம் நிலை வீரரான செர்பியாவின் டசன் லஜோவிக்கை வீழ்த்தி 2-வது சுற்றில் நுழைந்தார். நடால், 2-வது சுற்றில் ஜப்பானின் டரோ டேனியல் அல்லது அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொள்வார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியனும் 6-ம் நிலை வீராங்கனையுமான ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 19 வயதான நவோமி ஒசாகாவை எதிர்த்து விளையாடினார். ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஒசாகா 6-3, 6-1 என்ற நேர் செட்டில் கெர்பரை எளிதாக வீழ்த்தினார். தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் உள்ள வீராங்கனையை ஒசாகா வீழ்த்துவது இதுவே முதன்முறை.

முதல் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-2, 6-1 என்ற நேர் செட்டில் 72-ம் நிலை வீராங்கனையான போலந்தின் மேக்டா லினெட்டையும், 23-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைகோவா 6-1, 6-3 என்ற நேர் செட்டில் ஜப்பானின் மிசாகி டுவையும், 15-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸ் 6-3, 7-6 (8-6) என்ற நேர் செட்டில் பெல்ஜியத்தின் மெர்டென்ஸையும், 12-ம் நிலை வீராங்கனையான லத்வியாவின் ஒஸ்டபென்கோ 6-2, 1-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் லாரா அராபரேனாவையும் வீழ்த்தி 2-வது சுற்றில் கால்பதித்தனர். 2-வது நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் 55 ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x