Last Updated : 29 Aug, 2017 09:33 AM

 

Published : 29 Aug 2017 09:33 AM
Last Updated : 29 Aug 2017 09:33 AM

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தோல்வியடைந்தது வருத்தமாக உள்ளது: மனம் திறக்கும் பி.வி.சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தது வருத்தமாக உள்ளதாக இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதி ஆட்டத்தில் அவர், சுமார் 1 மணி நேரம் 49 நிமிடங்கள் போராடி ஜப்பானின் நொசோமி ஒகுஹராவிடம் தோல்வியடைந்தார். இதுதொடர்பாக பி.வி.சிந்து கூறியதாவது:

தோல்வியால் நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். 3-வது செட்டில் ஆட்டம் 20-20 என சமநிலையில் இருந்த போது யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. எல்லோருமே தங்கப் பதக்கத்தையே இலக்காக கொண்டிருப்பார்கள். நான், அதை நெருங்கிய நிலையில் கடைசி தருணங்கள் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

ஒகுஹரா எளிதான வீராங்கனை கிடையாது. நாங்கள் விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் எளிதானது இல்லை. கடினமாகவே இருந்துள்ளது. நான், எப்போதும் அவரை எளிதாக எடுத்துக்கொண்டது இல்லை. நீண்ட நேர ஆட்டத்துக்காக தயாராகியிருந்தேன், ஆனால் போட்டியின் தினம் எனக்கானதாக அமையவில்லை. நீண்ட நேர ஆட்டம் என்பது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் கடினமானது.

ஒவ்வொரு ரேலியும் நீண்ட நேரம் சென்றது. நாங்கள் இருவருமே கடுமையாக போராடினோம். இதனால் தான் 14-14, 18-18, 20-20 என மூன்று முறை ஆட்டம் நெருக்கமாக அமைந்தது. இது ஒரு பெரிய போட்டியாகவும், சிறந்த ஆட்டமாகவும் அமைந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாச என்னால் வெற்றி பெற முடியாமல் போனது.

சாய்னாவும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடினார். நாங்கள் இந்தியர்களாக, நாட்டுக்காக இரு பதக்கங்கள் வென்றதில் பெருமிதம் அடைகிறோம். நாட்டுக்காக நான், வெள்ளிப் பதக்கம் வென்றதில் பெருமைப்படுகிறேன். இது எனக்கு அதிக நம்பிக்கையை கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் அதிக பட்டங்களை வெல்வதற்காக மீண்டும் வருவேன்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

வீழ்த்தியது எப்படி?

பி.வி.சிந்துவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் கடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் அடைந்த தோல்விக்கு ஒகுஹரா பதிலடி கொடுத்ததாகவே கருதப்படுகிறது. ஒலிம்பிக் அரை இறுதியில் ஒகுஹராவை, பி.வி.சிந்து வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒகுஹரா கூறும்போது, “ஒலிம்பிக் ஆட்டத்தில் இருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டேன். இதனால் எனது திட்டங்களை மாற்றிக் கொண்டு செயல்பட்டேன். 3-வது செட் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஆட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றே நினைத்தேன். ஆனால் முயற்சி செய்ய முடிவு செய்தேன். அது மகிழ்ச்சியாகவும் இருந்தது. மேலும் சிந்து மிகவும் சோர்வாக இருந்ததையும் பார்த்தேன். இதனால் சரியான முறையில் ஆட்டத்தை அணுகினேன்” என்றார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற முதல் ஜப்பான் வீராங்கனை ஒகுஹரா என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத் தொகை

இதற்கிடையே உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு ரூ.10 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா நெவாலுக்கு ரூ.5 லட்சமும் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய பாட்மிண்டன் சங்க இடைக்காலத் தலைவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, “முன்னெப்போதும் இல்லாத வகையில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் முதல் முறையாக ஒரே தொடரில் இந்தியா இரு பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. இது நமது வீரர்களால் தான் சாத்தியப்பட்டுள்ளது. பதக்கங்கள் வென்ற சாய்னா, சிந்து ஆகியோருக்கும், அவர்களது பயிற்சியளார்களுக்கும் எனது வாழ்த்துகள்” என்றார்.

வாழ்த்து மழையில் சிந்து

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் : சாய்னா, சிந்துவுக்கு வாழ்த்துகள். உங்களாலும், நீங்கள் வென்ற பதக்கத்தாலும் நாடு பெருமைகொள்கிறது. நம்பமுடியாத வெற்றியை பெற்ற ஜப்பானின் ஒகுஹராவுக்கும் வாழ்த்துகள்.

பிரதமர் நரேந்திர மோடி : சிறப்பாக விளையாடினீர்கள் சிந்து. உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் உங்களது ஆட்டத்தால் நாங்கள் பெருமைகொள்கிறோம்.

மத்திய அமைச்சர் விஜய் கோயல் : எதுவாக இருந்தாலும் சரி, சிந்து எங்களது தங்க மங்கை. உங்களால் நாடு பெருமை அடைகிறது.

லியான்டர் பயஸ் : பதக்க மேடையில் நமது இரு சாம்பியன்களை பார்த்தது சிறந்த உணர்வு.

சச்சின் டெண்டுல்கர் : இந்தியாவின் சிறந்த பாட்மிண்டன் வீராங்கனைகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை நாட்டுக்காக கொண்டு வந்துள்ளனர். சிந்து, சாய்னாவுக்கு வாழ்த்துகள்.

சேவக் : பி.வி.சிந்து பெயரை நினைவில் கொள்ளுங்கள். 22 வயதான அவர், இந்த தலைமுறைக்கு முன் மாதிரி. சிந்துவால் நாடு பெருமை அடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x