Published : 11 Aug 2017 05:05 PM
Last Updated : 11 Aug 2017 05:05 PM

டி20-யில் டிவைன் ஸ்மித் 7000 ரன்கள்; பொலார்ட், டேரன் சமி காட்டடி தர்பார்: கரீபியன் பிரிமியர் லீக் துளிகள்

கரீபியன் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி வீரர் டிவைன் ஸ்மித் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்தார், பொலார்ட் 35 பந்துகளில் 83 ரன்கள் விளாச எதிரணியினரான செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி தோல்வி கண்டது.

முதலில் பேட் செய்த பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுக்க, செயிண்ட் லூசியா ஸ்டார்ஸ் அணி 15.2 ஓவர்களில் 129/6 ரன்களையே எடுக்க முடிந்தது. டக்வொர்த் லூயிஸ் முறைப்படி பார்படாஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

லூசியா ஸ்டார்ஸ் அணி ஜெசி ரைடரை இழந்த போது 8.5 ஓவர்களில் 64/6 என்று இருந்தது, ஆனால் கேப்டன் டேரன் சமி கன்னாபின்னாவென்று அடித்து நொறுக்கி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 ரன்களையும் மேயர்ஸ் 8 ரன்களையும் எடுக்க ஸ்கோர் மேலும் விக்கெட் இழக்காமல் 129/6 என்று வந்தது. ஒருவேளை ஆட்டம் 20 ஓவர்கள் நடைபெற்றிருந்தால் டேரன் சமி இலக்கை எட்ட முயற்சி செய்திருந்தாலும் செய்திருப்பார்.

முன்னதாக, கெய்ரன் பொலார்ட், 32 பந்துகளில் 63 ரன்கள் விளாசிய ஜமைக்கா அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு அடுத்த இந்த ஆட்டத்தில் 35 பந்துகளில் 83 ரன்கள் என்று அடித்து நொறுக்கினார். இதில் 5 பவுண்டரிகள் 6 மிகப்பெரிய சிக்சர்கள் அடங்கும்.

ஸ்மித் 7,000 ரன்கள்:

டிவைன் ஸ்மித் டி20 கிரிக்கெட்டில் 7,000 ரன்களைக் கடந்து சாதனை புரிந்துள்ளார், பார்படாஸுக்காக அவர் தொடக்கத்தில் நேற்று கேன் வில்லியம்சுடன் இறங்கினார். இருவரும் இணைந்து பவர் பிளேயில் 42 ரன்களையும் 9 ஓவர்களில் 72 ரன்களையும் சேர்த்தனர், கைல் மேயர்ஸை நேர் சிக்ஸ் அடித்த ஸ்மித், பாயிண்டில் மேலும் ஒரு பவுண்டரி விளாசினார். இந்நிலையில் புல்ஷாட் சிக்ஸ் மற்றும் கட் ஷாட் பவுண்டரிகளில் 7,000 ரன்களைக் கடந்தார். டி20-யில் 7,000 ரன் மைல்கல்லை எட்டிய 7-வது வீரர் ஆவார் டிவைன் ஸ்மித். கிறிஸ் கெய்ல், மெக்கல்லம், வார்னர், ஹாட்ஜ், பொலார்ட் ஆகியோர் உள்ளனர். வில்லியம்சன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஸ்மித் 3 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 36 ரன்களில் வீழ்ந்தார்.

பொலார்ட் அதிரடி:

மேயர்ஸ் ஹேட்ரிக் பந்தை எதிர்கொள்ள களமிறங்கிய பொலார்ட் ஹூக் ஷாட்டுடன் தொடங்கினார், அதன் பிறகு அடிதான். ஆஃப் ஸ்பின்னர் ஷேன் ஷில்லிங்போர்டை 3 சிக்சர்கள் விளாசினார். வேகப்பந்து வீச்சிலும் அசத்தினார் பொலார்ட், குறிப்பாக ஜெரோம் டெய்லரின் 8 பந்துகளில் 36 ரன்களை அடித்து நொறுக்கினார் பொலார்ட். இதனையடுத்து 14 ஓவர்களில் 96/3 என்ற நிலையிலிருந்து கடைசி 6 ஓவர்களில் பாரபடாஸ் 100 ரன்களை விளாசி 196 என்று அதிகபட்ச ஸ்கோரை எட்டியது. கடைசி ஓவரில் 28 ரன்கள் விளாசப்பட சிபிஎல் கிரிக்கெட்டில் பார்படாஸ் அணி அதிகபட்ச ஸ்கோரை எட்டியது.

ஸ்டார்ஸ் அணியில் டேரன் சமி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 60 நாட் அவுட். பார்படாஸ் அணியில் தென் ஆப்பிரிக்க இடது கை வேகப்பந்து வீச்சாளர் வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளை 28 ரன்களுக்குக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக கெய்ரன் பொலார்ட் தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x