Published : 29 Aug 2017 11:58 AM
Last Updated : 29 Aug 2017 11:58 AM

கேட்ச்களைப் பிடித்திருந்தால் மே.இ.தீவுகள் இங்கிலாந்தை வீழ்த்தியிருக்கும்!

லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் படுமோசமான பீல்டிங்கினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை மிகவும் கடினமாக்கிக் கொண்டது என்றால் அது மிகையான கூற்றல்ல.

இந்த டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணியினர் சுமார் 7-8 கேட்களை கோட்டை விட்டதால் மட்டும் இங்கிலாந்துக்கு கூடுதலாக 238 ரன்களை விட்டுக் கொடுத்தது, இதனால் வெற்றி இலக்கு 322 ரன்களாக அதிகரித்தது. இதன் விளைவாக, இன்று 5-ம் நாள் ஆட்ட முடிவில் மே.இ.தீவுகள் தோற்றுப்போகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பகலிரவு முதல் டெஸ்ட் போட்டியில் படுமோசமான ‘ஆல்ரவுண்ட்’ ஆட்டத்துக்குப் பிறகு முற்றிலும் வேறு ஒரு மே.இ.தீவுகள் அணியாக எழுச்சி பெற்று இந்த டெஸ்டில் இங்கிலாந்தை முதல் இன்னிங்சில் 258 ரன்களுக்குச் சுருட்டி, பிறகு இரு சதங்களுடன் 427 ரன்களைக் குவித்து அருமையான வெற்றி வாய்ப்பைப் பெற்று கடைசியில் மோசமான பீல்டிங், இந்திய நடுவர் எஸ்.ரவியின் மிகவும் கொடூரமான பழைய பாணி அம்பயரிங் ஆகியவற்றினால் தோல்வியைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மே.இ.தீவுகள்.

முதல் இன்னிங்ஸில் பென் ஸ்டோக்ஸ் சதம் எடுத்தார், இல்லையெனில் இங்கிலாந்து 200 ரன்களுக்குள் அம்பேல் ஆகியிருக்கும், ஆனால் ஸ்டோக்ஸ் சதம் எடுக்க யார் காரணம், மே.இ.தீவுகள் பீல்டர்களே. ஸ்டோக்ஸுக்கு 2 கேட்ச்களைக் கோட்டை விட்டனர்.

169 ரன்கள் முன்னிலை பெற்று 2-வது இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கி விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஜோ ரூட்டுக்கு கேட்சை விட்டனர், முதல் இன்னிங்சிலும் ரூட்டுக்கு கேட்சை விட்டனர். டெஸ்ட் போட்டியில் 50 ரன்களுக்கும் அதிகமாக சராசரி வைத்திருக்கும் ஒரு நடப்பு கால சிறந்த வீரருக்கு கேட்சை விட்டால் என்ன ஆகும் என்பதை அவர் நிரூபித்தார். அவரை அவுட் ஆக்கிய கேட்சும் நம்பிக்கையுடன் பிடிக்கப்பட்ட கேட்ச் அல்ல, இரண்டாவது முயற்சியில் பிடிக்கப்பட்ட கேட்சே.

சரி ரூட் அவுட் ஆகி விட்டார், இனி இங்கிலாந்து அவ்வளவுதான் என்று நினைத்த போது டேவிட் மலானுக்கு உடனடியாக கேட்சை விட்டனர். முதல் ஸ்லிப்பில் கேட்ச் பிடிக்க வேண்டியதற்கு டவ்ரிச் டைவ் அடித்து முயற்சி செய்து கடைசியில் கைவிட, போவெலும் பிடிக்க முடியாமல் போனது, இதனால் மலான் ஒரு அறுவையான அரைசதம் எடுத்தார், இவரது இன்னிங்ஸ் டெஸ்ட் போட்டிக்கு எதிர் விளம்பரமாகும் காரணம் இவர் ஆட்டத்தில் லாவகம் எதுவும் இல்லை. அழகான கிரிக்கெட் ஆட்டத்தைப் பார்க்க விரும்புவோர் டேவிட் மலான் பேட்டிங்கை பார்க்காமல் இருப்பதே நல்லது. கேட்சை விட்டதால் ஒரு அறுவை அரைசதம் எடுத்து இங்கிலாந்தை நிலைநிறுத்தினார்.

திடீரென ஹோல்டர் கேப்டன்சி திறமையுடன் பேசுகிறாரே என்று பார்த்தால் தேவேந்திர பிஷூவை கொண்டு வரவேயில்லை, அவர் கூறினார், இடது கை பேட்ஸ்மென்களை அச்சுறுத்தும் ஸ்பாட் இருப்பதால் ஆஃப் ஸ்பின்னர் ராஸ்டன் சேஸை பயன்படுத்துவோம் என்றார், ஏன் அதே ஸ்பாட்டில் லெக் ஸ்பின்னர் பிஷூ பயன்படமாட்டாரா? அதே ஸ்பாட்டில் பிஷூவின் பந்துகள் எழும்பி உள்ளே வரும்போது இன்னும் கூடுதல் அபாயமாக இருந்திருக்கும், ஆனால் தோனி போல் பேசுகிறாரே ஹோல்டர் என்று பார்த்தால் கடைசியில் தோனி போலவே கேப்டன்சி செய்தார், பிஷூவை கொண்டு வராமலேயே இருந்தார் பிறகு 2-வது புதிய பந்தை நேரடியாக எடுக்காமல் தாமதப்படுத்தியதிலும் தோனி ஜாடை ஹோல்டரிடம் காணப்பட்டது. கடைசியில் புதிய பந்தை எடுத்த போது பவுலர்கள் விரயம் செய்தனர்.

ஹோல்டரின் கேப்டன்சி ஆங்காங்கே நன்றாக இருக்கிறது, பிறகு ஒரு மணி நேர இடைவெளியில் படுமோசமாக மாறிவிடுகிறது. அவரை வழிநடத்தவும் அங்கு ஆளில்லை. இங்கிலாந்தில் இந்தியா படுமோசமாகத் தோல்வியடைந்த போது தோனி என்னென்ன தவறுகளைச் செய்தாரோ அத்தனையும் செய்கிறார் ஹோல்டர். களவியூகத்தில் ஆக்ரோஷம் இல்லவேயில்லை. எளிதான ரன்களுக்கு வழிவகை செய்தார் ஹோல்டர். அப்படித்தான் பிராத்வெய்ட்டை நேற்று பந்து வீச அழைத்து மோசமான பவுலிங்கினால் இங்கிலாந்துக்குச் சாதகமாகத் திருப்பு முனை ஏற்பட்டது.

பேர்ஸ்டோவுக்கும் கேட்ச் விட்டனர், ஆனால், இதன் காரணமாக கூடுதலாக இங்கிலாந்துக்கு 5 ரன்களே கிடைத்தது. அதன் பிறகுதான் தவறான நோ-பால் விவகாரங்கள் எழுந்தன.

கேட்ச்களை விட்டதனால் இங்கிலாந்துக்கு மே.இ.தீவுகள் கூடுதலாக 238 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெற்றி இலக்கு 322 ரன்களாக அதிகரித்துள்ளது. ஒருவேளை இந்தக் கேட்ச்களை பிடித்திருந்தால் நேற்று 4-ம் நாளிலேயே மே.இ.தீவுகள் வெற்றி பெற்றிருக்கக் கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x