Published : 01 Nov 2014 06:53 PM
Last Updated : 01 Nov 2014 06:53 PM

தோனி இல்லாத இந்தியா; மலிங்கா இல்லாத இலங்கை: வெற்றி யாருக்கு?

கட்டாக் மைதானத்தில் நாளை இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது. தோனி இல்லாத இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார்.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 4-1 என்று வெற்றி பெற்றால் தென் ஆப்பிரிக்காவுடன் 115 புள்ளிகள் பெறும். தசம புள்ளிக்கு அப்பால் கணக்கிடப்பட்டால் இந்தியா நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும்.

5-0 என்று இலங்கை வீழ்த்தினால் தென் ஆப்பிரிக்காவைக் காட்டிலும் 2 புள்ளிகள் கூடுதல் பெற்று தெளிவாக நம்பர் 1 இடத்திற்கு முன்னேறும்.

மாறாக இலங்கை அணிக்கும் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது ஆனால் 5-0 என்று அந்த அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும். இது கடினம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளுக்கும் ஒரு விதமான பகைமை இருக்கிறது என்றே கூற வேண்டும். வெளிப்படையாக அல்ல. வீரர்களின் மனதளவில் கூட இது இருக்கலாம்.

2011 உலகக் கோப்பை இறுதியில் நுவன் குலசேகரா பந்தை சிக்சர் அடித்து தோனி வெற்றி பெறச் செய்தது இலங்கை வீரர்களிடத்தில் காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதேபோல் உலக டி20 இறுதிப் போட்டியில் திசர பெரேரா, அஸ்வின் பந்தை நேராகத் தூக்கி அடித்து வெற்றிபெறச் செய்தார். இதுவும் இந்திய வீரர்கள் மறக்க வாய்ப்பில்லாத இறுதிப் போட்டியாகும்.

ஆனால், தோனியின் தலைமையில் இலங்கையை நிறைய இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இந்தியா வீழ்த்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கையைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு சமீபமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத அல்லது தெரிந்தாலும் அவ்வளவாக தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியாத ஒரு விஷயம் இலங்கை கேப்டன் அஞ்சேலோ மேத்யூஸின் எழுச்சியாகும். அவர் சிறந்த உத்திகளை வகுக்கும் சிறந்த கேப்டனாக உருவாகியுள்ளதை விராட் கோலியும் இந்திய வீரர்களும் மறக்கலாகாது.

ஆனாலும், இலங்கை கடந்த 2 மாதங்களாக போதிய வலைப்பயிற்சி செய்யாமல் திடீரென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த தொடரில் பங்கேற்கிறது. அது அன்று இந்தியா ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத் தோல்வியில் வெளிப்பட்டது. இந்தியா எடுத்த 382 ரன்களை இலங்கையால் துரத்த முடியாது என்று அர்த்தமல்ல, சரியான வலைப்பயிற்சி இல்லாத போது, பேட்டிங் பயிற்சிக்கான களமாக பயிற்சிப் போட்டியில் அந்த அணி விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சி ஆட்டத்தில் சதம் எடுத்த ரோகித் சர்மா முதல் 3 போட்டிகளுக்கு இல்லை. அதே போல் பந்து வீச்சில் மொகமது ஷமி, புவனேஷ் குமார் இல்லை. எனவே இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், வருண் ஆரோன் ஆகியோரிடையே போட்டி நிலவும் என்பது இயற்கை.

ரெய்னாவின் 200வது ஒருநாள் போட்டி:

தோனி இல்லாத நிலையில் பினிஷிங் பொறுப்பு தலையில் விழுந்துள்ள சுரேஷ் ரெய்னா 200வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்குகிறார். இவர் 44 ரன்களை எடுத்தால் 200வது போட்டியில் 5000 ஒருநாள் போட்டி ரன்களை எட்டுவார்.

சங்கக்காரா:

இலங்கை அணியில் மேட்ச் வின்னர் சங்கக்காரா என்றால் மிகையாகாது. இந்த ஆண்டில் 18 ஒருநாள் போட்டிகளில் 728 ரன்களை குவித்து சரியான பார்மில் உள்ளார். ஆனால்.. இவர் இந்த அவசரத் தொடர் குறித்து விமர்சனன் வைத்ததும் அவர் ஆட்டத்தைப் பாதிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணியில் மலிங்கா இல்லை. எனவே பந்து வீச்சு நுவன் குலசேகரா, திசர பெரேரா, தம்மிக பிரசாத் ஆகியோர் கையில் உள்ளது. மேத்யூசும் சிக்கனமாக வீசுபவரே.

புள்ளி விவரங்கள்:

இந்தியாவில் இதுவரை 8 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் இலங்கை விளையாடியுள்ளது. இதில் 1997-98- தொடரில் 1-1 என்று டிரா செய்ததே அதன் சிறப்பான தொடர். மீதி 7 தொடர்களில் இந்தியா இலங்கையை வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக இந்தியாவில் நடந்த இருதரப்பு ஒரு நாள் தொடர்களில் இந்தியா எந்தத் தொடரிலும் 1 போட்டிக்கு மேல் தோற்றதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x