Published : 27 Jul 2017 06:28 PM
Last Updated : 27 Jul 2017 06:28 PM

இலங்கையில் அதிகபட்ச ரன்களான 600-ஐ எட்டிய பிறகு இந்தியா அபாரப் பந்து வீச்சு

கால்லே டெஸ்ட் போட்டியில் இந்தியா தன் முதல் இன்னிங்சில் 600 ரன்களைக் குவித்த பிறகு இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது.

2-ம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஆஞ்சேலோ மேத்யூஸ் 54 ரன்களுடனும் பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர், அசேலா குணரத்னே களமிறங்க முடியாத நிலையில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்ததாகவே அர்த்தம்.

முன்னதாக 399 ரன்களில் தொடங்கிய இந்திய அணி அறிமுக வீரர் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதம் மூலம் 600 ரன்களை எட்டியது. அதன் பிறகு பந்து வீச்சில் இந்திய அணி இலங்கை மீதான தன் பிடியை இறுக்கியது.

அஸ்வின் அபாரமாக வீசினார் 1 விக்கெட் என்பது குறைவுதான். 18ஓவர்களை அவர் தொடர்ச்சியாக வீசியதில் இந்தப் பிட்சில் எங்கு, எந்த ஸ்பீடில் பந்தைவிட வேண்டுமென்பதை அபாரமாகக் கணித்து இலங்கை பேட்ஸ்மென்களை திணறடித்தார். ஷமி, உமேஷ் யாதவ் தொடக்கத்தில் அற்புதமாக வீசினர். தரங்கா மிகப் பிரமாதமான ஆஃப் திசை ஷாட்களை ஆடி அரைசதம் கண்ட போதிலும் சிலி மிட் ஆஃபில் அபினவ் முகுந்தின் அபார பீல்டிங்கில் ரன் அவுட் ஆனார்.

அஸ்வின் வீசிய பந்தை அவர் சிலி மிட் ஆஃபில் ஆட அங்கு முகுந்த் வெகு விரைவில் பந்தைப் பிடித்து விக்கெட் கீப்பருக்கு அடிக்க அவர் பைல்களை அகற்றினார், முதலில் கச்சிதமாக க்ரீஸுக்குள் மட்டையைக் கொண்டு வந்த தரங்கா பிறகு மட்டையின் ஒரு பகுதி எழும்பியதால் ரன் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். 93 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்த அவர் நூதனமாக ஆட்டமிழந்தார்.

அதே போல் அபினவ் முகுந்த், டிக்வெல்லாவுக்கு ஜடேஜா பந்தில் அதே சிலி மிடாஃபில் வலது புறம் டைவ் அடித்து ஒரு கையில் பிடித்த கேட்சும் அபாரமானது.

பொதுவாக அஸ்வினையும் ஜடேஜாவையும் கால்களைப் பயன்படுத்தி நன்றாக ஆடிய மேத்யூஸ், சில அரிய வேளைகளில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆக்ரோஷமும் காட்டினார். ஆனால் 32 ரன்களில் அஸ்வின் பந்தில் வலுவான எல்.பி. முறையீட்டில் 3-வது நடுவர், கள நடுவரின் நாட் அவுட் தீர்ப்பை ஆமோதித்தார்.

முன்னதாக கருணரத்னே 2 ரன்களில் உமேஷ் யாதவ்வின் இன்ஸ்விங்கருக்கு பிளம்ப் எல்.பி.ஆனதோடு, ரிவியூ ஒன்றையும் விரயம் செய்து வெளியேறினார்.

குணதிலக 16 ரன்களில் மொகமது ஷமியின் ஓவர் த விக்கெட் ஷார்ட் பிட்ச் பந்தை கட் செய்ய முயன்று ஸ்லிப்பில் தவணிடம் பிடிபட்டார்.

பிறகு அதே ஓவரில் குசல் மெண்டிஸுக்கு ஒரு மெக்ரா ரக ஆஃப் ஸ்டம்ப் பந்தை வீசினார் ஷமி, எட்ஜ் எடுத்து தவண் கையில் சிக்கியது. மெண்டிஸ் ஸ்கோரர்களை தொந்தரவு செய்யவில்லை.

மேத்யூஸ் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்களுடனும் பெரேரா 6 ரன்களுடனும் களத்தில் நிற்க இலங்கை அணி 154/5 என்று ஃபாலோ ஆனைத் தவிர்க்கவே இன்னமும் 247 ரன்கள் தேவைப்படும் நிலையில் போராடி வருகிறது. இந்திய அணியில் ஷமி 2 விக்கெட்டுகளையும், உமேஷ், அஸ்வின் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஹர்திக் அதிரடி, நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகள்!

முன்னதாக 399 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணி புஜாராவை 153 ரன்களிலும் ரஹானேயை 57 ரன்களிலும் இழந்தது. நுவான் பிரதீப், குமாரா இருவரது விக்கெட்டையும் வீழ்த்தினர். பிறகு 6-வது விக்கெட்டுக்காக அஸ்வின் (47), சஹா (16) ஆகியோர் 59 ரன்களைச் சேர்த்தனர். அஸ்வின், ஹெராத் பந்து வீச்சில் 3 பவுண்டரிகளை அடித்தார். 60பந்துகளில் 47 ரன்களை அவர் எடுத்ததில் 7 பவுண்டரிகள் அடங்கும். ஆனால் இருவரும் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே வீழ்ந்தனர். உணவு இடைவேளைக்குப் பிறகு நுவான் பிரதீப், ஜடேஜாவின் ஸ்டம்ப்களைப் பெயர்த்தார்.

பிறகு பாண்டியா, ஷமி இணைந்தனர், கடைசி 2 விக்கெட்டுகளுக்காக இந்திய அணி 71 பந்துகளில் 83 ரன்களை வெளுத்தது. சிக்சர்கள் பறந்தன. மொகமது ஷமி ஹெராத் பந்துவீச்சில் 3 சிக்சர்களை விளாசினார். பாண்டியாவும் 3 சிக்சர்களை விளாசினார். ஆனால் பாண்டியா அடித்தது நுவான் பிரதீப் பந்துகளில் 2ஹுக் ஷாட்களில் சிக்ஸ், பிறகு மிட்விக்கெட்டில் ஒரு சிக்ஸ். ஷமி 30 ரன்களில் குமாரா பந்தில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார்.

உமேஷ் யாதவ் இறங்கி தன் பங்குக்கு நுவான் பிரதீப்பை நேராக ஒரு மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார். பிறகு ஹெராத்தை தூக்கி அடித்து பவுண்டரிக்கு விரட்ட 600 ரன்கள் வந்தது.

48 பந்துகளில் அறிமுக டெஸ்டில் அரைசதம் கண்ட பாண்டியா 49 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 50 ரன்கள் எடுத்து குமாராவின் ஷார்ட் பிட்ச் பந்தில் அவுட் ஆனார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x