Last Updated : 14 Jul, 2017 02:56 PM

 

Published : 14 Jul 2017 02:56 PM
Last Updated : 14 Jul 2017 02:56 PM

ரவி சாஸ்திரி மீது திணிக்கப்பட்ட நியமனமா திராவிட், ஜாகீர் கான்?: கிரிக்கெட் நிர்வாகக் குழு மறுப்பு

அனில் கும்ப்ளேவுக்கும் கேப்டன் விராட் கோலிக்கும் இடையே கசப்புணர்வு ஏற்பட்டு கும்ப்ளேயின் பயிற்சியாளர் பொறுப்பு முடிவுக்கு வந்ததையடுத்து ‘விராட் கோலிக்கு இணக்கமான’ ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதால் இந்த இணைக்கு ஒரு ‘செக்’ வைப்பதற்காக ராகுல் திராவிட், ஜாகீர் கான் ஆகியோரும் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டதாக செய்திகள் எழுந்ததை சச்சின், கங்குலி, லஷ்மண் அடங்கிய கிரிக்கெட் நிர்வாகக் குழு மறுத்துள்ளது.

அதாவது தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துடன் திராவிட், ஜாகீர் கான் ஆகியோரையும் சேர்த்து நியமித்ததன் மூலம் கிரிக்கெட் நிர்வாகக் குழு தனது அதிகாரத்தை நீட்டியியுள்ளது என்று பலதரப்பிலிருந்தும் குரல்கள் எழுந்தன.

இதனையடுத்து கிரிக்கெட் நிர்வாகக் குழு, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக் கமிட்டியின் தலைவர் வினோத் ராய்க்கு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது.

அதாவது இந்த விஷயம் ஊடகங்களில் இவ்வாறாக சித்தரிக்கப்படுவது வலியையும் ஏமாற்றத்தையும் தருகிறது என்று கடிதத்தில் கிரிக்கெட் நிர்வாகக் குழு குறிப்பிட்டுள்ளது, அதாவது ரவி சாஸ்திரி மீது திராவிட், ஜாகீர் கான் ஆகியோர் திணிக்கப்பட்டதாக ஊடகங்களில் ஒரு சித்திரம் காட்டப்படுவதை சிஏசி தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

அதாவது ரவி சாஸ்திரியிடம் கலந்தாலோசித்த பிறகே திராவிட், ஜாகீர் கான் ஆகியோரை நியமித்துள்ளோம் என்று கூறியுள்ளனர். ஆனால் ஊடகங்கள் சிலவற்றில் சாஸ்திரி பாரத் அருணைத்தான் விரும்புகிறார் என்ற செய்திகள் எழுந்தன. அனில் கும்ப்ளே தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பாரத் அருண் தன் பொறுப்பை இழந்தார்.

இதனையடுத்து கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் விருப்பத்துக்கிணங்க பிசிசிஐ அக்குழுவுக்கு நன்றி தெரிவித்ததோடு, பேட்டிங், பவுலிங் ஆலோசகர்களை நியமிப்பதில் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x