Published : 15 Jun 2017 10:03 PM
Last Updated : 15 Jun 2017 10:03 PM

ரோஹித் சர்மா அபார சதம்: கோலியின் அதிவேக 8,000 ரன்கள் சாதனையுடன் இறுதியில் இந்தியா

எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் வங்கதேசம் நிர்ணயித்த 265 ரன்கள் வெற்றி இலக்கை இந்திய அணி வெகு எளிதில் எடுத்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிக்கு முன்னேறியது.

ரோஹித் சர்மா 129 பந்துகளில் 15 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ கேப்டன் விராட் கோலி 78 பந்துகளில் 13 ராஜபவுண்டரிகளுடன் 96 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 40.1 ஓவர்களில் இந்தியா 265/1 என்று 9 விக்கெட்டுகளில் வங்கதேசத்தை நொறுக்கியது.

தவண் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 46 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார், தவண், ரோஹித் ஜோடி முதல் விக்கெட்டுக்காக 14.4 ஓவர்களில் 87 ரன்களைச் சேர்க்க, விக்கெட் அதோடு முடிந்தது, ரோஹித் சர்மா, விராட் கோலி ஜோடி 25.3 ஓவர்களில் ஆட்டமிழக்காமல் 178 ரன்களை வெற்றிகரமாகச் சேர்த்தனர். யுவராஜ் சிங்கின் 300-வது ஒருநாள் போட்டியில் அவருக்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. ரோஹித் சர்மா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஞாயிறன்று மோதுகின்றன, விராட் கோலி இந்தியா, இங்கிலாந்து இறுதிப் போட்டியை அனைவரும் எதிர்நோக்குகின்றனர் என்ற கருத்தை பாகிஸ்தான் முறியடித்தது.

இன்று வங்கதேசம் இந்திய அணிக்குச் சவால் அளிக்கும் என்று எதிர்பார்த்தது, ஆனால் வழக்கம் போல் அதன் பவுலிங் பலவீனம் சிறந்த பேட்டிங் வரிசைக்கு எதிராக அம்பலமாகிப்போனது. பந்தை ஆடப்போய் பந்து கடந்து சென்ற தருணங்களே மிகக்குறைவு, ரோஹித் சர்மா ஒரு முறை தூக்கி அடித்த போது பந்து இருவீரர்களுக்கு இடையில் ஆஃப் திசையில் விழுந்ததைத் தவிர தவறற்ற இன்னிங்ஸ்தான் அதுவும்.

விராட் கோலி அதிவேக 8,000 ரன்கள் சாதனை

விராட் கோலி இலங்கைக்கு எதிராக ஆட்டமிழந்ததை மனதில் கொண்டு தேர்ட்மேனில் ரன் எடுக்கும் முயற்சியையே மேற்கொள்ளவில்லை, மற்றபடி வங்கதேச பந்து வீச்சுடன் அவர் வாள் சுழற்றி விளையாடினார் என்றே கூற வேண்டும், அருமையான ராஜ கவர் டிரைவ்கள், அருமையான நேர் டிரைவ்கள், பிளிக் ஷாட்கள், கட் ஷாட்கள், ’பச் பச்’ என்று அறைந்த புல்ஷாட்கள் என்று தனது எம்.ஆர்.எஃப் மட்டையை வங்கதேச பீல்டர்களுக்கும் பவுலர்களுக்கும் காட்டி வெறுப்பேற்றினார், முழுநிறைவான இன்னிங்ஸ், முழுநிறைவான விரட்டல் மற்றும் வெற்றி. கோலி தனது 88-வது ரன்னை எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் 8,000 ரன்களை அதிவேகமாக எடுத்த சாதனையை எட்டினார்.

கடைசியில் சதம் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அவர் கவலைப்படவில்லை, சபீர் ரஹ்மான் பந்தை மீண்டும் ஒரு ராஜகவர் டிரைவ் பவுண்டரி மூலம் வெற்றி ஷாட்டை அடித்தார் கோலி.

தொடக்கத்தில் ஷிகர் தவண், முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 2-வது ஓவரில் பேக்புட்டில் ஆஃப் திசையில் முதல் பவுண்டரியை அடிக்க அடுத்த பந்தே மீண்டும் பாயிண்ட் திசையில் அடி இடிபோல் இறங்கியது மீண்டும் பவுண்டரி. ரோஹித் சர்மாவும் முஸ்தபிசுர் பந்தை பவுண்டரிக்கு விரட்டி தன் முதல் பவுண்டரியை அடித்தார். பிறகு அதே ஓவரில் ஒரு ஸ்கொயர் டிரைவ், மீண்டும் ஒரு அருமையான மிட் ஆன் டிரைவ் பவுண்டரி என்று முஸ்தபிசுர் ரஹ்மான் 2 ஓவர்களில் 21 ரன்கள் விளாசப்பட்டார்.

தஸ்கின் அகமதுவும் ஒரு ஓவரில் ஷிகர் தவணிடம் வாங்கினார், முதலில் ஒரு அரக்க பஞ்ச் பாயிண்டில் பவுண்டரி, பிறகு ஷார்ட் பிட்ச் பந்தை லெக் திசையில் பவுண்டரி விரட்ட, அடுத்து தஸ்கின் பவுன்சரை வீச ஸ்கொயர் லெக் மேல் ரசிகர்கள் மத்தியில் போய் விழுந்தது சிக்ஸ்.

தஸ்கின் அகமதுவும் 2 ஓவர்களில் 21 ரன்கள் கொடுக்க, முஸ்தபிசுர், தஸ்கின் அகமது 4 ஓவர்கள் 42 ரன்கள் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என்று இந்திய அணி அபாரமாகத் தொடங்கியது. கடைசியில் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்து மோர்டசா பந்தை மேலேறி வந்து வெளுக்க வந்தார், ஆனால் ஷாட் சரியாகச் சிக்காமல் மிட் ஆஃபுக்குச் செல்ல வேண்டிய பந்து பாயிண்டில் கேட்சாக முடிந்தது.

அதோடு விக்கெட்டுகள் சரி. ரோஹித் சர்மா 57 பந்துகளில் அரைசதம் எட்ட, விராட் கோலி 42 பந்துகளில் ரிஸ்க் இல்லாமல் தன் அரைசதத்தை எட்டினார்.

இருவரும் சேர்ந்து 89 பந்துகளில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இந்திய அணி 31.4 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது. ரோஹித் சர்மா பவுன்சரை டீப் ஃபைன் லெக்கில் சிக்ஸர் தூக்கி தனது சதத்தை 111 பந்துகளில் சதம் கண்டார்.

கடைசியில் மேலும் சேதமேற்படாமல் இருவரும் வங்கதேச பந்து வீச்சுடன் விளையாடி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் புவனேஷ், பும்ரா முக்கியமாக கேதார் ஜாதவ் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் என்று வங்கதேசத்தை 264 ரன்களுக்கு மட்டுப்படுத்த, பேட்டிங்கில் சவாலின்றி இந்திய அணி 9 விக்கெட்டுகளையும், 59 பந்துகளை மீதம் வைத்தும் வெற்றி பெற்றது.

ஆட்ட நாயகன் ரோஹித் சர்மா. ஞாயிறன்று இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x