Published : 08 Apr 2017 03:14 PM
Last Updated : 08 Apr 2017 03:14 PM

ஜேசன் மொகமதுவின் அதிர்ச்சிகர அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தியது மே.இ.தீவுகள்

மே.இ.தீவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் மொகமதுவின் கடைசி நேர அதிர்ச்சிகர அதிரடியில் பாகிஸ்தானை வீழ்த்தி தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது மே.இ.தீவுகள்.

பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமத் டாஸில் தோற்றார், ஆனால் ஜேசன் ஹோல்டர் பாகிஸ்தான் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஷெசாத் (67) கம்ரன் அக்மல் (47), மொகமது ஹபீஸ் (88), ஷோயப் மாலிக் (53) ஆகியோரது பங்களிப்பினால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் வலுவான 308 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 33.4 ஓவர்களில் 158/4 என்று இருந்தது. பிறகு 13 ஓவர்களில் 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாத்தியம் குறைவான நிலையில் இருந்தது. ஆனால் 58 பந்துகளில் 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 91 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்த ஜேசன் மொகமது மற்றும் அவருக்கு உறுதுணையாக 15 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 34 என்று நாட் அவுட்டாகத் திகழ்ந்த ஆஷ்லி நர்சும் ஒரு அதிர்ச்சிகரமான வெற்றியை மே.இ.தீவுகள் அணிக்குப் பெற்றுத்தந்தனர். 49 ஒவர்களில் 309/6 என்று மே.இ.தீவுகள் அபார வெற்றியை ஈட்டியது.

ஜேசன் மொகமதுவின் திடீர் அதிரடி எழுச்சி:

35 ஓவர்கள் முடிவில் மே.இ.தீவுகள் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்களை எடுத்திருந்தது, 15 ஒவர்களில் வெற்றிக்குத் தேவை 141 ரன்கள். ஜேசன் மொகமது 5 ரன்களில் இருந்தார் இவருடன் கார்ட்டர் 6 ரன்களில் இருந்தார். அதுவும் வஹாப் ரியாஸ், மொகமது ஆமிர் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போது சாத்தியமா? ஆனால் அவர்களையும் என்ன சேதி என்று புரட்டி எடுத்தார் ஜெசன் மொகமது. மே.இ.தீவுகள் இனி எங்கு வெற்றி பெறப்போகிறது என்று பாகிஸ்தான் நினைத்திருக்கலாம், அப்போதுதான் ஜேசன் மொகமது வேடிக்கையாக சில பவுண்டரிகளை அடித்துக் கொண்டிருந்தார், ஆனால் அவர் மனதில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உறுதி இருந்த ரகசியத்தை பாகிஸ்தான் கேப்டன், பவுலர்களால் உணர முடியவில்லை.

39வது ஓவரை இமாத் வாசிம் வீச தேவை ரன் விகிதம் 10 ரன்களை எட்ட ஜேசன் மொகமது இமாத் வாசிமை இரண்டு பவுண்டரிகளை அடித்தார். மே.இ.தீவுகள் இப்போதுதான் 200 ரன்களை எட்டியது.

ஆனால் 40வது ஓவரில் ஹசன் அலி வீச மிட் ஆஃபில் ஒரு பவுண்டரி அடித்த ஜேசன், அடுத்த பந்தை லாங் ஆஃபுக்கு மேல் சிக்சர் தூக்கினார், மீண்டும் அடுத்த பந்து கவர் திசையில் பறந்தது. 41-வது ஓவரை வஹாப் வீச மிகவும் ஷார்ட் பிட்சாக வீசினார். அப்போது டீப் ஸ்கொயர் லெக்கில் ஒரு புல் ஷாட்மூலம் பவுண்டரி பறக்க விட்ட ஜேசன் 31 பந்துகளில் அரைசதம் கண்டார், பாகிஸ்தானுக்கு எதிராக மே.இ.தீவுகள் வீரர் ஒருவரின் 2-வது அதிவேக அரைசதம் இதுவே. மீண்டும் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசி சீண்டவே ஒதுங்கிக் கொண்டு பளார் என்று அறைந்தார் ஜேசன் பாயிண்டில் தெறித்தது.

இந்நிலையில் கார்ட்டர் ஆமிர் பந்தில் 14 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். 43 ஓவர்களில் 236/5 என்ற நிலையில் 42 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 73 என்று இன்னமும் கூட பாகிஸ்தானுக்குச் சாதகமாகவே இருந்த்து.

இந்நிலையில் 44-வது ஓவரை மொகமது ஆமிர் வீச, ஜேசன் மொகமது நம்ப முடியாத அதிரடியை வெளிப்படுத்தினார். ஷார்ட் பிட்ச் பந்தை ஒதுங்கிக் கொண்டு அடித்த புல் லாங் ஆன் பவுண்டரியை வெகுதூரம் கடந்து சிக்ஸ் ஆனது. அடுத்த பந்து யார்க்கர் ரன் இல்லை. ஆனால், மிடில் அண்ட் லெக்கில் ஆமிர் புல் லெந்த் பந்தை வீச முன்காலை விலக்கிக் கொண்டு பேரடி அடிக்க ஆன் திசையில் மிகப்பெரிய சிக்ஸ். அடுத்த பந்து மிஸ்பீல்டில் ஃபைன்லெக்கில் 4 ரன்கள். மொத்தம் அந்த ஓவரில் 17 ரன்கள் வந்தது. அடுத்த ஓவரில் ஹோல்டர் ஒரு சிக்ஸ் அடித்து பிறகு ஷாதப் கானிடம் வெளியேறினார்.

45 ஒவர்கள் முடிவில் 262/6 என்ற நிலையில் ஜேசன் 79 ரன்களுடனும் ஆஷ்லி நர்ஸ் 1 ரன்னுடனும் சேர்ந்தனர். 30 பந்துகளில் வெற்றிக்குத் தேவை 47 ரன்கள்.

அப்போது வஹாப் ரியாஸ் பந்து விச வர மொகமது முதலில் அவரை ஒரு பவுண்டரியும் சிங்கிளும் எடுத்து நர்சிடம் ஸ்ட்ரைக் கொடுக்க நர்ஸ் ஒரு எட்ஜ் பவுண்டரியும் பிறகு கவருக்கு மேல் தூக்கி அடித்து இன்னொரு பவுண்டரியும் விளாசினார். இந்த ஓவரில் வஹாப் 15 ரன்களைக் கொடுத்தார். அதன் பிறகும் நர்ஸ் 2 பவுண்டரிகள் 1 சிக்சர் விளாசினார். ஆமீர ஒரே ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்தார் நர்ஸ். கடைசியில் வஹாப் ரியாஸை மண்டியிட்டு மிட்விக்கெட்டில் அடித்த பவுண்டரி வெற்றிக்கான ஷாட்டாக அமைய மே.இ.தீவுகள் குழாமில் மகிழ்ச்சித் தாண்டவம் பாகிஸ்தான் குழுவில் படு அதிர்ச்சி.

முன்னதாக மே.இ.தீவுகள் அணியில் லூயிஸ் 47 ரன்களையும், போவெல் 61 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மே.இ.தீவுகள் 1-0 என்று முன்னிலை பெற்றது. ஆட்ட நாயகனாக ஜேசன் மொகமது தேர்வு செய்யப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x