Published : 04 Dec 2013 21:48 pm

Updated : 06 Jun 2017 15:40 pm

 

Published : 04 Dec 2013 09:48 PM
Last Updated : 06 Jun 2017 03:40 PM

முதல் ஒரு நாள் போட்டி: இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் தீவிரம்

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே முதல் ஒரு நாள் போட்டி, வியாழக்கிழமை ஜோகன்னர்ஸ்பர்கில் நடைபெறுகிறது.

சாம்பியன்ஸ் ட்ராபியிலிருந்து, சமீபத்தில் நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் வரை நடந்த 6 ஒரு நாள் தொடர்களிலும் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. இப்போது, 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பலமான தென் ஆப்பிரிக்காவை அவர்களின் சொந்த மண்ணிலேயே இந்தியா சந்திக்கவுள்ளது.


பேட்டிங்

தென் ஆப்பிரிக்க அணி, டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தாலும், சர்வதேச ஒரு நாள் அணிகள் தரவரிசை பட்டியலில் அந்த அணி 5வது இடத்தில்தான் உள்ளது. இந்தியா முதல் இடத்தில் உள்ளது. முதல் முறையாக ஒரு இளம் இந்திய அணி, வெளிநாட்டிற்கு சென்று ஆடுகிறது.

இந்திய அணியைப் பொருத்த வரை அணியின் பேட்டிங்தான் மிகப்பெரிய பலம். அணியில் விராத் கோலி, ஷிகர் தவாண், ரோஹித் ஷர்மா ஆகியோர், இந்த ஆண்டில் 1000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளனர். மிடில் ஆர்டரில் ஆடும் யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோரது ஆட்டம், கடந்த சில போட்டிகளில் சரியில்லை என்றாலும், இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவர்களோடு, அணியின் நம்பிக்கை நட்சத்திரமான தோனியும் இருப்பது, மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும். இந்த ஆண்டு மட்டும் தோனி ஆடிய போட்டிகளில் அவரது சராசரி 66.90 சதவீதமாக உள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியும், ஹசிம் ஆம்லா, குயின்டன் டி காக், கிரீம் ஸ்மித், அணியின் கேப்டன் டிவில்லியர்ஸ், காலிஸ், ஜே.பி.டுமினி, டேவிட் மில்லர் என பேட்டிங்கில் திறமையான வீரர்களைக் கொண்டுள்ளது. அந்த அணியிலும், ஒரு சிலரைத் தவிர, மற்றவர்கள், சமீபத்திய ஆட்டங்களில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள, அனைத்து பேட்ஸ்மேன்களும் முனைப்போடு இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

பந்துவீச்சு

இரு அணிகளுமே பேட்டிங்கில் வலுவாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்காவில் ஆடும் களங்கள் எல்லாம், வேகப்பந்து வீச்சிற்கே சாதகமாக இருக்கும். அந்த அணியின் முண்ணனி பந்து வீச்சாளர்களான ஸ்டெயின், மோர்கல் மற்றும் ஃபிலாண்டர் ஆகியோரது பந்துவீச்சை சமாளிப்பது இந்தியாவிற்கு பெரிய சவாலாக இருக்கும். இவர்களோடு, காலிஸும் சிறப்பான பந்து வீச்சாளர் என்பதால், அவருக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்படும். ஆனால், சுழற்பந்து வீச்சில், இம்ரான் தாஹிரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது. மற்றவர்கள் பகுதி நேர பந்து வீச்சாளர்களே.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், இஷாந்த் ஷர்மா , உமேஷ் யாதவ் ஆகியோர் எப்படி இந்த களங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சுழற்பந்து வீச்சை அஸ்வினோடு சேர்ந்து, ஜடேஜா, ரெய்னா, யுவராஜ் சிங் ஆகியோர் கவனித்துக் கொள்வார்கள்.

சொதப்பி வரும் தென் ஆப்பிரிக்கா

இந்த ஆண்டு, தென் ஆப்பிரிக்க அணிக்கு இறங்குமுகமாகவே உள்ளது. 2013 ஆண்டு பங்குபெற்ற எந்தத் தொடரிலுமே அந்த அணியினர் பெரிதாக சோபிக்க தவறிவிட்டனர். அதோடு, ஏற்கனவே இலங்கை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த தொடர்களில் தொல்வியடைந்துள்ளனர். இக்கட்டான போட்டிகளை கையாளும் திறன் இல்லை என அணியோடு சேர்த்து, அணியின் கேப்டன் டிவில்லியர்ஸும் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். இருந்தும், புது உற்சாகத்தோடு, தாய் மண்ணில் நடக்கும் தொடரை அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வான்டரர்ஸ் மைதானம்

ஜோகன்னஸ்பர்கில் உள்ள இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா 6 போட்டிகளில் ஆடி, 3ல் வெற்றி பெற்றுள்ளது. தென் ஆப்பிரிக்காவுடன் 4 போட்டிகளில் இந்தியா இங்கு ஆடியுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்கா 2 போட்டிகளிலும், இந்தியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி கைவிடப்பட்டது.

இந்த மைதானத்தில் தான், பிரசித்த பெற்ற, தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெற்றது. அந்த போட்டியில், ஆஸ்திரேலியா 434ரன்கள் குவிக்க, அதை தென் ஆப்பிரிக்கா சேஸ் செய்து சாதனை படைத்தது. அதுவே இம்மைதானத்தில் அதிகபட்சமான ஸ்கோரும் கூட.

கடந்த 3 வாரங்களாக, இந்தப் பகுதியில் மழை பெய்து வருவதால், ஆட்ட நாள் அன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆட்டம் பாதிப்படையலாம்.

உடையும் சாதனைகள்

முதல் போட்டியில், இந்தியா ஒரு ரன்னை எடுக்கும் போதே முக்கியமான சாதனை ஒன்றை கடந்திருக்கும். அது, 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களைக் குவித்த அணி என்கிற பெருமையே. 841 போட்டிகளில், 1,82,881 ரன்கள் எடுத்து, ஆஸ்திரேலியாவொடு முதல் இடத்தை இதுவரை இந்திய பகிர்ந்து கொண்டுள்ளது.

அதே போல, இந்திய அணியின் கேப்டன் தோனி, இதுவரை இந்திய அணிக்காக 151 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். இந்த 151 போட்டிகளில் 5213 ரன்களைக் குவித்துள்ளார். இதுவரை அதிக ரன்கள் குவித்த இந்திய கேப்டன் என்கிற பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முன்னாள் கேப்டன் அசாருதீனின் சாதனையான 5239 ரன்களைக் கடக்க, தோனிக்கு இன்னும் 26 ரன்கள் மட்டுமே தேவை. அதை இப்போட்டியில் அவர் எடுப்பார் என நம்புவோமாக.

அடுத்து, தோனி தலைமையிலான இந்திய அணி, இதுவரை 88 ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெல்லும் பட்சத்தில், அதிக ஒரு நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன் என்கிற சாதனையையும் தோனி அடைவார். இதிலும், முன்னாள் கேப்டன் அசாருதீன், 90 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

காத்திருக்கும் சாதனை

சில நாட்களுக்கு முன் தான், பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்று சாதனை படைத்தது. இது நாள் வரை, இந்திய அணி, அங்கு ஒரு நாள் தொடரை வென்றதில்லை. பல சாதனைகளை படைத்து வரும் தோனி தலைமையிலான இளம் இந்திய அணி, இத் தொடரை வென்று, தென் ஆப்பிரிக்காவில் ஒரு நாள் தொடரை வென்ற இரண்டாவது ஆசிய அணி என்ற பெயரைப் பெரும் என்று அனைத்து இந்திய கிரிக்கெட் ரசிகர்களுமே ஆவலாக உள்ளனர்.

போட்டி நேரம்: மாலை 5

நேரடி ஒளிபரப்பு: டென் கிரிக்கெட், தூர்தர்ஷன்.


இந்திய தென் ஆப்பிரிக்க தொடர்தோனிதென் ஆப்பிரிக்க சுற்று பயணம்ஒரு நாள் தொடர்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x