Published : 26 Aug 2016 09:31 AM
Last Updated : 26 Aug 2016 09:31 AM

ஓய்வு பெறுகிறார் தில்ஷான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக வலம் வந்த தில்ஷான் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் 39 வயதான தில்ஷான் வரும் 28-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அதேபோல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 போட்டியோடு சர்வதேச டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1999-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான திலகரத்னே தில்ஷான் ஆரம்ப காலத்தில் நடுவரிசையில் களம் இறங்கினார். குறுகிய ஓவர்கள் போட்டியில் சிறப்பாக ஆடியதை தொடர்ந்து 2009-ம் ஆண்டு முதல் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார்.

தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட பிறகு ஒரு ஆண்டில் ஆயிரம் மற்றும் அதற்கு மேலாக ரன் எடுத்த சாதனையை 4 முறை தில்ஷான் நிகழ்த்தினார். இதுவரை 329 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷான் 22 சதங்கள் உட்பட 10,248 ரன்கள் குவித்துள்ளார். 106 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். டி 20 போட்டிகளில் 78 ஆட்டங்களில் 1884 ரன்கள் குவித்துள்ளார் தில்ஷான்.

விக்கெட் கீப்பருக்கு பின்னால் பந்தை லாவகமாக அடிப்பதில் வல்லவராக தில்ஷான் திகழ்ந்தார். தில்ஷானின் இந்த பிரத்யேக ஷாட் 'தில் ஸ்கூப்' என்ற பெயரிலும் அழைக்கப்பட்டது. ஓய்வு அறிவிப்பின் மூலம் தனது 17 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கைக்கு தில்ஷான் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

2019-ம் ஆண்டு உலகக் கோப் பைக்கு அணியை தயார் செய்யும் நடவடிக்கைகளில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் இதுதொடர்பாக தில்ஷானிடம் வாரியம் பேச்சு வார்த்தை நடத்தியது. இதை தொடர்ந்து தேர்வுக்குழு தலைவர் ஜெயசூர்யாவிடம் தில்ஷான் ஆலோசனை நடத்தினார்.

எனினும் ஓய்வு முடிவு எடுப்பதில் தில்ஷான் தயக்கம் காட்டி வந்தார். இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் 22 ரன்களும், 2-வது ஆட்டத்தில் 10 ரன்கள் மட்டுமே தில்ஷான் சேர்த்தார். மேலும் அணியின் தொடக்க வீரர்களாக குணதிலகா, கவுசல் பெரேரா ஆகியோர் சீரான முன்னேற்றம் கண்டு வருவதால் தற்போது தில்ஷான் ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளார்.

இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, சங்ககரா ஆகியோருக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்த 4-வது வீரர் என்ற பெருமைக்கும் தில்ஷான் சொந்தக்காரராக உள்ளார். இவர் தனது வாழ்நாள் சராசரியாக 39.26 வைத்துள்ளார்.

2009-ம் ஆண்டில் டி 20 போட்டிகளின் சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வென்றார்.

2014-ல் ஐசிசி டி 20 உலகக் கோப்பையை இலங்கை அணி வென்றதில் தில்ஷானின் பங்கு அதிகம் இருந்தது. மேலும் 2009, 2012 டி 20 உலகக் கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்ற இலங்கை அணியிலும் தில்ஷான் இடம் பெற்றிருந்தார். 2007, 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையில் இலங்கை அணி இறுதிப்போட்டி வரை கால் பதித்திலும் தில்ஷான் முக்கிய பங்காற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x