Last Updated : 13 Apr, 2017 06:20 PM

 

Published : 13 Apr 2017 06:20 PM
Last Updated : 13 Apr 2017 06:20 PM

நடுவர்களைக் கேலி செய்யும் விதமாக கைதட்டல்: பிரேசில் நட்சத்திரம் நெய்மருக்கு 3 போட்டிகளில் ஆடத் தடை

லா லிகா போட்டியில் பார்சிலோனா அணியின் மலாகாவுக்கு எதிரான போட்டியில் 2 முறை விதிமீறலில் ஈடுபட்டதற்காக நெய்மருக்கு 3 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனா அணிக்கு நெய்மர் ஆடியதில் முதன் முதலாக சிகப்பு அட்டைக் காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார் நெய்மர். ஆனால் இதற்காக ஒரு போட்டித் தடைதான் உள்ளது, ஆனால் மைதானத்தை விட்டு வெளியே போகும்போது நடுவர்களைப் பார்த்து கேலி செய்யும் விதமாக கைதட்டிச் சென்றார், இதனால் கூடுதலாக 2 போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் பார்சிலோனா அணி மலாகா அணியிடன் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியதோடு அடுத்து முக்கியமான ரியால் மேட்ரிட் போட்டியில் நெய்மர் ஆட முடியாமல் போனது என்ற இரட்டை அதிர்ச்சி பார்சிலோனாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த முடிவை எதிர்த்து பார்சிலோனா மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்றைய மலாகா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மலாகா அணிக்கு வழங்கப்பட்ட ஃப்ரீகிக் ஷாட்டை தாமதப்படுத்தும் விதமாக நெய்மர் தனது ஷூ லேஸ்களை வேண்டுமென்றே கட்டிக் கொண்டிருந்ததாக புக் செய்யப்பட்டார். பிறகு ஆட்டம் முடிய 25 நிமிடங்கள் இருந்த போது மலாகா வீரர் ரொபர்ட்டோ ரொசாலேஸை ஃபவுல் செய்தது சிகப்பு அட்டைக்கான குற்றமாக மாற வெளியேற்றப்பட்டார்.

ஷூ லேசை முக்கியக் கட்டத்தில் கட்டுவது நெய்மருக்கு இந்தத் தொடரில் புதிதல்ல, கிரனடா, செவில்லா அணிகளுக்கு எதிராகவும் அவர் இவ்வாறு செய்து பார்சிலோனா அணி இருமுறையும் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதாவது நைகே நிறுவனத்துடன் மிகப்பெரிய தொகையில் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நெய்மர் தனது ஷூ லேசை அடிக்கடி சரி செய்வது கேமராக்களின் கவனத்தை நைகே ஷூ மீது திருப்பும் விதமாக முறையற்ற செயலில் ஈடுபடுகிறார் என்று நெய்மர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x