Published : 17 Nov 2013 13:33 pm

Updated : 06 Jun 2017 14:43 pm

 

Published : 17 Nov 2013 01:33 PM
Last Updated : 06 Jun 2017 02:43 PM

நெகிழவைத்த நாயகன்! - சச்சினின் இறுதி உரை

சர்வதேச கிரிக்கெட்டில் தன் வாழ்நாளின் இறுதிநாள் ஆட்டத்தை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர். மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றதற்குச் சற்று நேரத்திற்குப் பிறகு ரசிகர்கள் மத்தியில் உணர்ச்சிமயமான இறுதி உரையுடன் சச்சின் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார்.

“நண்பர்களே! சற்று அமைதி காத்து என்னைப் பேச விடுங்கள்; இல்லையென்றால் நான் மேலும் உணர்ச்சிவயப்பட நேரிடும் (ரசிகர்களின் ஆரவாரம் விண்ணைப் பிளக்கிறது). 22 கஜங்கள் மற்றும் 24 ஆண்டுகளுக்கிடையிலான என் அற்புதமான (கிரிக்கெட்) வாழ்க்கை இன்று முடிவுக்கு வந்து விட்டது என்று நம்புவது கடினமாகத்தான் இருக்கிறது; இத்தருணத்தில் என் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றியவர்கள் அனைவருக்கும் நான் நன்றி கூற விரும்புகிறேன். மேலும், அனைவரது பெயர்களையும் நான் மறந்துவிடக் கூடாது என்பதற்காக வாழ்க்கையில் முதன்முறையாகக் கையில் ஒரு பட்டியலையும் கொண்டுவந்துள்ளேன். உணர்ச்சிகள் என்னைப் பேச விடாமல் தடுத்தாலும் அதையும் மீறி இப்போது நான் பேச வந்துள்ளேன்.


தந்தையை புகழ்ந்த சச்சின்

என் வாழ்க்கையிலேயே மிக முக்கிய மனிதராகிய என் தந்தை 1999ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். அவரது இழப்பை என்னால் தாங்கவே முடியவில்லை. இன்று நான் உங்கள் முன் நின்று இவ்வாறு உரையாற்றுவதற்கு அவரது வழிநடத்துதல்தான் காரணம். எனக்கு 11 வயது ஆகும்போதே, 'நீ விரும்பியதைக் குறுக்குவழியில் செல்லாமல் நேர்வழியில் சென்று அடைய வேண்டும்' என்று அவர் அனுமதியளித்தார். அவர் சொன்னது போல் நல்வழியில் நடந்தேன்; இனிமேலும் அதுபோலவே இருப்பேன். ஏதாவது ஒரு சாதனையைச் செய்தபின் நான் என் பேட்டை உயரத் தூக்கியபோதெல்லாம் அதை அவருக்காகவே தூக்கிப் பிடித்தேன்.

தாயின் பிரார்த்தனை

என்னை மாதிரி ஒரு குறும்புக்கார மகனை எப்படி வளர்த்தார் என்பது என் தாய்க்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம். தன் மகன் ஆரோக்கியமாகவும் எவ்விதக் குறைபாடுமின்றியும் இருக்க வேண்டும் என்பதுதான் எந்த ஒரு தாயின் வேண்டுதலாகவும் இருக்கும். என்னைப் பற்றியும் என் உடல்நலம் பற்றியும் மிகவும் கவலைப்படுவது என் தாய்தான். கடந்த 24 ஆண்டுகளாக நாட்டுக்காக நான் ஆடியபோது என்னைக் கவனித்துக் கொண்டது அவர்தான்; அதற்கு முன்பிருந்தே நான் ஆடும்போதெல்லாம் பிரார்த்தனை செய்துகொண்டிருப்பது அவரது வழக்கம். அவரது பிரார்த்தனைகளின் மூலம் எனக்குக் கிடைத்த தெம்பினால்தான் இத்தனை நாள் என்னால் விளையாட முடிந்தது; அவரது தியாகங்களுக்கெல்லாம் மிகப்பெரிய நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளி நாட்களின்போது நான் என் அத்தை வீட்டில் தங்கிப் படித்தேன். நீண்ட நேரம் விளையாடி விட்டு வந்து நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது என்னை எழுப்பி மறுநாள் விளையாடத் தெம்பு வேண்டுமென்பதற்காக எனக்கு அவர் சோறூட்டுவார். அதையெல்லாம் என்னால் மறக்கவே முடியாது. இன்று வரை என்னை ஒரு மகனாகவே அவர் பாவிக்கிறார்.

அண்ணனின் அர்ப்பணிப்பு

அவ்வளவாகப் பேசாத என் அண்ணன் நிதின், 'எதைச் செய்தாலும் 100% அர்ப்பணிப்புடன் செய்' என்று எனக்கு அறிவுரை கூறுவார். என் முதல் பேட்டை எனக்குப் பரிசளித்த என் அக்கா சவிதாவும் அண்ணனும் கொடுத்த ஊக்கம் அளவில்லாதது. நான் விளையாடும்போதெல்லாம் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்யும் பலரில் சவிதாவும் ஒருவர்.

இன்னொரு அண்ணன் அஜித் எனக்காகவே வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்து என்னுடன் இந்தக் கனவு வாழ்க்கையில் கூடவே பயணித்திருக்கிறார். என் குரு அச்ரேகர் அவர்களிடம் 11 வயதில் என்னை அஜித் கூட்டிக் கொண்டு போனவுடன் என் வாழ்க்கையே மாறத் தொடங்கியது. மீண்டுமொரு முறை என்னால் பேட்டிங் செய்ய முடியாது என்று தெரிந்திருந்த போதிலும் நேற்று நான் அவுட்டானதைப் பற்றி நேற்றிரவும் நாங்கள் விவாதித்தோம்; இத்தகைய விவாதம் நான் ஓய்வு பெற்ற பின்னரும் தொடரும் என்று நான் நினைக்கிறேன். என் பேட்டிங் ஸ்டைல் பற்றி அவருடன் விவாதித்திருக்காவிடில் நான் பல சாதனைகளைச் செய்திருக்க மாட்டேன்.

அஞ்சலியின் தியாகம்

என் வருங்கால மனைவி அஞ்சலியை 1990-ல் சந்தித்ததை என் வாழ்க்கையிலேயே அழகான தருணம் என்று நான் கூறுவேன். டாக்டராகிய அஞ்சலி திருமணத்திற்குப் பின் என் கிரிக்கெட் வாழ்க்கைக்காகவும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவும் தன் டாக்டர் தொழிலுக்கே முழுக்குப் போட்டுவிட்டார். அஞ்சலியின் தியாகத்தினால்தான் என்னால் கிரிக்கெட்டில் முழுக்கவனம் செலுத்த முடிந்தது. எனது அனைத்து விருப்பு வெறுப்புக்களையும் தாங்கி, என் வெற்றி தோல்விகளின்போது என் கூடவே இருந்து துணை நின்ற, நிற்கப்போகும் அஞ்சலிக்கு என் நன்றி. என் வாழ்வின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் அஞ்சலியுடன் அமைந்த பார்ட்னர்ஷிப்தான் (சச்சின் பேசும்போது அஞ்சலியால் தன் கண்ணீரை அடக்க முடியவில்லை).

16 வயதாகும் என் மகள் சாராவும், 14 வயதாகும் என் மகன் அர்ஜுனும் விலைமதிப்பற்ற என் இரு வைரங்கள் . பலமுறை அவர்களது பிறந்த நாள், பள்ளி ஆண்டு விழா நாட்களின் போதெல்லாம் என்னால் அவர்களுடன் இருக்க முடிந்ததில்லை; இதுவரை என் செல்வங்களுடன் நான் அதிக நேரம் செலவழிக்கவில்லை என்றாலும், இனி வரும் காலம் முழுதும் அவர்களுடன் இருந்து அவர்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுவதே என் தலையாய கடமை (சாரா, அர்ஜுன் இருவரது கண்களிலும் கண்ணீர் பொங்குகிறது).

மாமனார்-மாமியாராகிய ஆனந்த் மேத்தா, அன்னபெல் ஆகிய இருவரும் மிகவும் உறுதுணையாக இருந்ததுடன் அக்கறையும் காட்டிவருகின்றனர். நம்மை வழிநடத்த வலுவான ஒரு குடும்பம் இருப்பது மிக அவசியம் என்று நான் கருதுகிறேன். அஞ்சலியைத் திருமணம் செய்ய அனுமதி அளித்ததற்கு அவர்களிருவருக்கும் என் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

பள்ளி நாட்களிலும் நாட்டுக்காக விளையாடிய இந்த 24 ஆண்டுகளிலும் எனக்கு நண்பர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் என் வாழ்க்கையில் எனக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. நண்பர்களுடன் பழகிய நாட்களை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்கள் என்னுடன் இருந்திருக்காவிட்டால் என் வாழ்க்கை ஒருபோதும் முழுமையடைந்திருக்காது. அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

குருவுக்கு நன்றி

11, 12 வயதில் குரு அச்ரேகர் அவர்கள் என்னை அவருடைய வண்டியில் மும்பையில் இருக்கும் சிவாஜி பார்க், ஆசாத் மைதானம் உள்ளிட்ட பல இடங்களுக்குக் கூட்டிச் சென்று விளையாட வைப்பார். இப்போது அவர் இங்கு அமர்ந்திருப்பது எனக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. நான் விளையாடும்போதெல்லாம் ஒரு மேட்ச் விடாமல் அவர் தொலைக்காட்சியில் பார்ப்பார் என்று எனக்குத் தெரியும். கடந்த 29 ஆண்டுகளில் ஒரு முறை கூட 'நன்றாக விளையாடினாய்' என்று அவர் என்னைப் பாராட்டியதில்லை (சிரிக்கிறார்); ஏனெனில் அவ்வாறு சொன்னால் ஒரு வேளை அடுத்த முறை நான் சரியாக விளையாமல் போய்விடுவேனோ என்று அவருக்குள் ஒரு பயம். இப்போது அவர் முழு மனதுடன் எனக்கு வாழ்த்துக் கூறுவார் என்று நினைக்கிறேன்; இனி என் வாழ்வில் கிரிக்கெட்டை நான் பார்க்க மட்டும்தான் செய்வேனே தவிர விளையாட மாட்டேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத பங்காற்றியதற்காக என் குருவுக்கு மீண்டுமொரு முறை என் நன்றிகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

16 வயதிலேயே என் திறமையை மதித்து என்னை நாட்டுக்காக ஆடுவதற்குத் தேர்ந்தெடுத்தற்காக பி.சி.சி.ஐ.க்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காக ஆடும் கனவை நான் இன்று வரை என் நெஞ்சுக்குள் வைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறேன். என் பிரிவுபசார உரையை இந்த அளவுக்கு சுதந்திரமாக பேசும்படி எனக்கு அனுமதி அளித்ததற்காக கிரிக்கெட் வாரியத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நான் அடிபட்டு ஓய்வெடுத்தபோது எனக்குச் சிகிச்சை அளித்து என்னை மீண்டும் ஆடவைத்ததற்காக வாரியத்துக்கு நான் நன்றி கூறாமல் இருக்க முடியாது.

நன்றி மறவாத சச்சின்

24 ஆண்டுகளாக என் நெடிய, சிறப்பான பயணத்தில் என்னுடன் விளையாடியுள்ள பல மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் பள்ளிப்பருவத்தில் நான் பிரமிப்புடன் பார்த்து வளர்ந்த மூத்த கிரிக்கெட் வீரர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள். இங்கு இத்தருணத்தில் வந்திருக்கும் சௌரவ் (கங்குலி), ராகுல் (திராவிட்) மற்றும் (வி.வி.எஸ்.) லட்சுமண் ஆகியோருக்கும் இங்கு வர முடியாத அனில் கும்பிளேவுக்கும் நன்றி. அவர்களனைவரும் என் இன்னொரு குடும்பத்தாரைப் போன்றவர்கள். அவர்களுடனும் இன்று வெற்றி பெற்ற அணித் தோழர்களுடனும் இனி பெவிலியனில் பேசிக் களிக்க முடியாது என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது. நாட்டுக்காக விளையாடும் அனைத்து அணித் தோழர்களும் நாங்களும் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவர்கள்தானே!

இந்தத் தலைமுறை வீரர்கள் நாட்டுக்கு வருங்காலத்தில் நல்ல முறையில் சேவையைத் தொடர்வார்கள் என்பதில் எனக்கு ஐயமேதும் இல்லை. நன்கு விளையாடி, உங்களது திறமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தி நாட்டுக்கு நல்ல பெயர் வாங்கித் தர உங்களனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

என்னை நன்கு கவனித்துக் கொண்ட மருத்துவர்கள், உடற்பயிற்சியாளர்கள், உடல் சிகிச்சை நிபுணர்களுக்கு நன்றி கூறாவிட்டால் மாபெரும் தவறிழைத்தவனாவேன். ஒவ்வொரு முறை எனக்குப் பிரச்சினை ஏற்படும்போதும் எனக்கு உதவி புரிந்து மீண்டும் மீண்டும் என்னைக் கிரிக்கெட் ஆட வைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!

என் விவகாரங்களை நிர்வகித்த மறைந்த மார்க் மாஸ்கரேனஸுக்கும் என் தற்போதைய ஏஜெண்டுகளாகிய டபிள்யூ.எஸ்.ஜி. நிறுவனத்துக்கும் என் நன்றி. கடந்த 14 ஆண்டுகளாக என்னுடன் மேனேஜராகப் பணிபுரியும் வினோத் நாயுடுவுக்கும் பலமுறை வீட்டை விட்டு அவர் என்னுடன் இருந்தாலும் எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் அவரது குடும்பத்தாருக்கும் மிக்க நன்றி.

பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை தொடர்ந்து துணை நிற்கும் ஊடக நண்பர்களுக்கும் பிறருக்கும் நன்றி. அவர்களது விமர்சனங்கள் ஆக்கபூர்வமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்; நான் ரன் அடிக்காவிட்டாலும் 100 ரன் அடித்தாலும் எப்போதும் எனக்கு ஆதரவளித்துவரும் ரசிகர்களுக்கு என் மனத்தின் அடித்தளத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக உண்ணாவிரதம் இருந்த ரசிகர்களுக்கும், பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி; அவர்களது ஆதரவின்றி நான் இத்தனை தூரம் பயணித்திருக்க முடியாது. காலம் வெகு சீக்கிரம் உருண்டோடி விட்டது; ஆயினும் உங்களுடன் நான் செலவழித்த நேரங்கள் குறித்த நினைவுகள் என்றுமே, எப்போதுமே என் மனத்தை விட்டு அகலாது. “சச்சின், சச்சின்” என்று நீங்கள் எழுப்பிய கோஷம் இறுதிவரை என் காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நன்றி.

நான் எதையாவது, யாரையாவது பற்றிச் சொல்ல மறந்திருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். குட் பை.இந்திய கிரிக்கெட்சச்சின் டெண்டுல்கர்ஓய்வுசச்சின்சச்சின் சாதனைசிறப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x