Published : 07 Mar 2017 03:19 PM
Last Updated : 07 Mar 2017 03:19 PM

அஸ்வினின் 6 விக்கெட்டுகளுடன் ஆஸி.யை வென்று தொடரை சமன் செய்த இந்தியா

அஸ்வின், உமேஷ் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களும், ஆஸ்திரேலியா 276 ரன்களும் எடுத்தன. 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 72 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் எடுத்தது.

புஜாரா 79, ரஹானே 40 ரன்களுடன் நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். ரஹானே 128 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் தனது 11-வது அரை சதத்தை அடித்தார். ஸ்கோர் 238 ஆக இருந்த போது, ரஹானே 52 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அவர், புஜாராவுடன் 46.2 ஓவர்கள் களத்தில் நின்று 5-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தார்.

இதே ஓவரின் அடுத்த பந்தில், வந்த வேகத்திலேயே கருண் நாயர்(0) போல்டானார். அடுத்த சில ஓவர்களில் புஜாராவை ஹசல்வுட் ஆட்டமிழக்க செய்தார். அவர் 221 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 92 ரன்கள் எடுத்தார். 90 ரன்களை நெருங்கி சதம் அடிக்காமல் புஜாரா ஆட்டமிழந்தது இதுவே முதன்முறையாக அமைந்தது.

242 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் அஸ்வின் 4 ரன்களில் ஹசல்வுட் பந்தில் போல்டானார். அடுத்து களமிறங்கிய உமேஷ் யாதவ் 1 ரன்னிலும் இஷாந்த் சர்மா 6 ரன்களிலும் நடையை கட்டினர். எனினும் இவர்கள் இருவருடன் இணைந்து விருத்திமான் சாஹா 28 ரன்கள் ரன் சேர்த்தார்.

முடிவில் இந்திய அணி 97.1 ஓவரில் 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சாஹா 20 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹசல்வுட் 6 விக்கெட்கள் கைப்பற்றினார்.

இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலியா பேட் செய்தது. ரென்ஷா 5 ரன்களில், இஷாந்த் சர்மா பந்திலும், வார்னர் 17 ரன்களில் அஸ்வின் பந்திலும் ஆட்டமிழந்தனர். 42 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் ஸ்மித், ஷான் மார்ஷ் ஜோடி நிதானமாக விளையாடியது. ஆனால் கோலி, பந்து வீச்சாளர்களை மாற்றிக் கொண்டே இருந்தார்.

இதற்கு பலனாக உமேஷ் யாதவ் சீரான இடைவேளையில் இரு விக்கெட்களை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவரது பந்தில் மார்ஷ் 9, ஸ்மித் 28 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினர். இதையடுத்து பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் உடன் இணைந்து மிட்செல் மார்ஷ் 27 ரன்கள் சேர்க்க இந்திய அணி பக்கம் நெருக்கடி திரும்பியது.

இந்த சூழ்நிலையில் அஸ்வின் இரு விக்கெட்களை வீழ்த்த ஆட்டம் இந்திய அணியின் கட்டுக்குள் வந்தது. அவரது பந்தில் மிட்செல் மார்ஷ் 13, மேத்யூ வேட் 0 ரன்களில் வெளியேற தேநீர் இடைவேளையில் ஆஸ்திரேலியா 27.5 ஓவரில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்தது. ஹேண்ட்ஸ்கம்ப் 19 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

வெற்றிக்கு 87 ரன்கள் தேவை என்ற நிலையில் அடுத்த 2 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்தி ரேலியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. ஸ்டார்க் 1 ரன்னில் அஸ்வின் பந்தில் போல்டானார்.

அடுத்து களமிறங்கிய ஓ கீஃப் 2 ரன்னில் ஜடேஜா பந்தில் நடையை கட்டினார். அதிரடியாக விளையாட முயன்ற ஹேண்ட்ஸ்கம்ப் (24) அஸ்வின் பந்தில், சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்த பந்திலேயே நாதன் லயன் (2) அஸ்வினிடமே கேட்ச் கொடுக்க, முடிவில் ஆஸ்திரேலிய அணி 35.4 ஓவர்களில் 112 ரன் களுக்கு அனைத்து விக்கெட்களை யும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 41 ரன்களுக்கு 6 விக்கெட்கள் கைப்பற்றினார். உமேஷ் யாதவ் 2, இஷாந்த் சர்மா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி கடைசி 6 விக்கெட்களை 11 ரன்களுக்கு தாரை வார்த்தது. ஆட்ட நாயகனாக கே.எல்.ராகுல் (90, 51) தேர்வானார். 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலையை அடைய செய்துள்ளது. 3-வது டெஸ்ட் போட்டி வரும் 16-ம் தேதி ராஞ்சியில் தொடங்குகிறது.

இது 3-வது முறை

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்த இலக்கை கொடுத்து இந்தியா வெற்றி பெறுவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2004-ல் வான்கடே மைதானத்தில் 107 ரன்களையும், 1980-ல் மெல்போர்னில் 143 ரன்களையும் இலக்காக கொடுத்து இந்தியா வெற்றி பெற்றி ருந்தது.

அஸ்வின் சாதனை

பெங்களூரு டெஸ்ட்டின் 2-வது இன்னிங்ஸில் அஸ்வின் 6 விக்கெட்கள் கைப்பற்றினார். அவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றுவது இது 25-வது முறையாகும். இதன் மூலம் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 25 முறை 5 விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார்.

அவர் 47 டெஸ்ட் போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தி உள்ளார். இதற்கு முன்னர் நியூஸிலாந்தின் ரிச்சர்டு ஹெட்லி 62 ஆட்டங்களில் இந்த சாதனையை படைத்திருந்தார். இந்திய வீரர்களில் இந்த சாதனையை அனில் கும்ப்ளே 86 ஆட்டங்களிலும், ஹர்பஜன்சிங் 93 ஆட்டங்களிலும் நிகழ்த்தியிருந்தனர்.

அஸ்வின் இதுவரை 269 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். இதன் மூலம் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 5-வது இடத்தில் இருந்த பிஷன்சிங் பேடியை முந்தினார். அவர் 266 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

சொந்த மண்ணில் அஸ்வின் 200 விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற பெருமையையும் பெற்றார். அவர் 30 டெஸ்ட் போட்டிகளில் இந்த விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இந்திய வீரர்களில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன்சிங் ஆகியோரும் சொந்த மண்ணில் 200 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றி உள்ளனர்.

சர்ச்சையில் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் 28 ரன்களில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது அவர் களத்தில் இருந்தபடி ஓய்வறையில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த தங்களது அணியின் தொழில்நுட்ப அதிகாரிகள், வீரர்களிடம் ரிவ்யூ வாய்ப்பை பயன்படுத்தலாமா என சைகையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக ஸ்மித் செயல்பட்டதை களநடுவர் உடனடியாக கவனித்தார். அதேவேளையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களும் இதை பார்த்தனர். இதனால் இந்திய வீரர்கள் ஸ்மித்தை சூழ்ந்தனர். ஆனால் நடுவர் தலையிட்டு ஸ்மித்தை களத்தில் இருந்து வெளியேற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x