Published : 19 Nov 2014 01:22 PM
Last Updated : 19 Nov 2014 01:22 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: சிறப்பான பேட்டை தேடி வாங்கிய தோனி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடருக்காக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகருக்கு சென்று சிறப்பான பேட்களை தேர்வு செய்து வாங்கியுள்ளார் இந்திய அணி கேப்டன் தோனி.

கை பெருவிரலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி பங்கேற்கவில்லை. அடுத்ததாக டிசம்பர் 4-ம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் தோனி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 12-ல் தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் களமிறங்க இருக்கிறார்

இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக பேட்களை வாங்குவதற்காக மீரட் நகருக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு தோனி வந்தார். அந்நகரில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமார் 5 மணி நேரத்துக்கு மேல் செலவிட்டு பேட்களை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியாவில் பந்துகள் அதிக அளவில் பவுன்ஸ் ஆகும் என்பதால் அதற்கு ஏற்ற வகையிலான பேட்களை தோனி கவனத்துடன் தேர்வு செய்து வாங்கினார். மொத்தம் 6 பேட்களை அவர் வாங்கியுள்ளார்.

தோனி தங்கள் நிறுவனத்துக்கு வந்தது குறித்து கருத்துத் தெரிவித்த சரீன் ஸ்போட்ர்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் ஜேதின் சரீன், தோனி தனிப்பட்ட முறையில் எங்கள் நிறுவனத்துக்கு வந்து பேட்களை வாங்கினார். இங்கு பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க விரும்பவில்லை. தனது இந்த பயணம் குறித்து முன்கூட்டியே யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று கூறியிருந்தார். முன்னதாக 2011-ம் ஆண்டு தனது மனைவியுடன் மீரட்டுக்கு வந்த தோனி பேட்களை வாங்கி சென்றார் என்றார்.

வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், கபில் தேவ் உள்ளிட்ட வீரர்களும் மீரட்டில் தயாராகும் கிரிக்கெட் பேட்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெளி நாட்டு வீரர்களில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், மீரட் நகரில் பேட் வாங்குவதில் ஆர்வம் காட்டி வந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x