Last Updated : 08 Aug, 2016 11:07 AM

 

Published : 08 Aug 2016 11:07 AM
Last Updated : 08 Aug 2016 11:07 AM

புதிய சரித்திரம்: ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் திபா கர்மாகர்

இந்திய ஜினாஸ்டிக்ஸ் வீராங்கனை திபா கர்மாகர் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அவரது முதல் ஒலிம்பிக் போட்டியான இதில் தகுதிச் சுற்றில் 8-ஆம் இடம் பெற்று இந்த சாதனையை எட்டியுள்ளார்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்து திபா கர்மாகர், ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்ஸில் போட்டியிட தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை ஏற்கனவே படைத்திருந்தார். தற்போது ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவில் இரு முயற்சிகளின் முடிவில் 14.850 புள்ளிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த, மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சைமன் பைல்ஸ் முதல் இடத்தைப் பிடித்தார். ஆகஸ்டு 14-ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

முன்னதாக திபா கர்மாகர் 2014-ஆம் வருடம் காமன்வெல்த் விளையாட்டில் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது தனிநபர் ஆல்-ரவுண்டர் பிரிவு தகுதிச் சுற்றில் பங்கேற்ற திபா கர்மாகர், வால்ட் பிரிவில் 14.850, பேலன்ஸ் பீம் பிரிவில் 12.866, அன் ஈவன் பார்ஸ் பிரிவில் 11.666, புளோர் பிரிவில் 12.033 புள்ளிகள் பெற்றார்.

ஒட்டுமொத்தமாக 51.665 புள்ளிகள் பெற்ற இவர் 51-வது இடம் பிடித்து தனிநபர் ஆல்-ரவுண்டர் பிரிவில் இறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தார். இருப்பினும் புரொடுனோவா வால்ட் பிரிவில் 14.850 புள்ளிகள் பெற்ற திபா கர்மாகர் 8-வது இடம் பிடித்தார். இதன்மூலம் தனிநபர் வால்ட் பிரிவு இறுதி சுற்றுக்கு முன்னேறினார். இறுதி போட்டி வரும் 14-ம் தேதி நடைபெறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சைமன் பைல்ஸ் 16.050 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தார். 15.683 புள்ளிகளுடன் 2-வது இடத்தை வட கொரியாவின் ஜாங் உன் ஹாங்கும், 3-வது இடத்தை ஸ்விட்சர்லாந்தின் குய்லா ஸ்டெய்ன்க்ரூபரும் 15.266 புள்ளிகளுடனும் பிடித்தனர். இறுதி சுற்றில் இவர்கள் உட்பட 7 பேரும் திபா கர்மாகர் போட்டியிட உள்ளார்.

திபா 'ஜிம்னாஸ்டிக் பறவை' ஆனது எப்படி?

முதலில் திபாவுக்கு ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பெரிய அளவில் ஆர்வம் இல்லை. ஆங்கிலத்துக்கு பதில் ஜிம்னாஸ்டிக் படிக்கிறேன் என்று தந்தையிடம் வாக்கு கொடுத்ததற்காக பயிற்சிக்கு சென்றுவந்தார்.

ஆனால் 2007-ம் ஆண்டில் நடந்த தேசிய ஜூனியர் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பதக்கம் வென்றதும் ஜிம்னாஸ்டிக் மீதான அவரது பார்வை மாறிப்போனது. ஜிம்னாஸ்டிக் தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்த அவர் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார்.

அதன் பிறகு ஜிம்னாஸ்டிக்கில் அவர் குவித்துள்ள பதக்கங்களின் எண்ணிக்கை 77. இதில் 67 தங்கப்பதக்கங்களும் அடங்கும். உள்ளூர் போட்டிகளில் மட்டுமே தன்னால் வெற்றிபெற முடியும் என்று நினைத்திருந்த திபா கர்மாகரின் பார்வையை விசாலப் படுத்தியவர் ஆசிஷ் குமார்.

2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆசிஷ் குமார் ஜிம்னாஸ்டிக்கில் பதக்கம் வென்ற போது இந்திய ஜிம்னாஸ்டிக் அணியில் திபா கர்மாகரும் இருந்தார். அவரைப் போல் தானும் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையில் அயராமல் உழைத்தவர், 2014 காமன் வெல்த் விளையாட்டுப் போட்டி யில் வால்ட் பிரிவில் வெண் கலப் பதக்கம் வென்று ஜிம்னாஸ் டிக்கில் இந்தியாவின் கொடியை மேலும் உயரமாக பறக்கவிட்டார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கிடைத்த பதக்கம் அவரது நம்பிக்கையை மேலும் அதிகரிக்க, ஒலிம்பிக்கை நோக்கி வேக நடைபோடத் தொடங்கினார். தற்போது ஒலிம்பிக் போட்டியில் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

ப்ராடுனோவா வால்ட் என்றால் என்ன?

விளையாட்டுகளிலேயே மிக வும் கடினமானதாக ஜிம்னாஸ்டிக் கருதப்படுகிறது. இதில் திபா அதிகம் கலந்துகொள்வது ப்ராடுனோவா வால்ட் என்னும் பிரிவில் தான்.

வேகமாக ஓடிவந்து ஒரு திண்டின் மீது கைகளை வைத்து உயரே எழும்பி சம்மர் சால்ட்களை அடித்தவாறே தரை யைத் தொடுவதுதான் இந்த போட்டியின் சிறப்பம்சம்.

சம்மர் சால்ட்களை அடித்தவாறு தரையை நோக்கி வரும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். கொஞ்சம் பிசகினாலும் தலையில் அடிபட வாய்ப்புள்ளது. தவறுதலாக விழுந்தால் கை, கால்கள் செயலற்று போகவும் வாய்ப்புள்ளது.

'ரிஸ்க் எடுக்க வேண்டும்'

இத்தகைய கடினமான விளையாட்டை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு, "ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் ஓர் ஆபத்து இருக்கிறது. நாம் ரிஸ்க் எடுத்து செயல் பட்டால்தான் வெற்றிகளை குவிக்கமுடியும்" என்கிறார் இந்தியாவின் பறக்கும் பாவையான திபா கர்மாகர். ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வெல்ல திபா கர்மாகரை வாழ்த்துவோம்.

மம்தா வாழ்த்து:

ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற திபா கர்மாகருக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "#திபாகர்மாகருக்கு வாழ்த்துகள். #ரியோ2016 ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களை பெருமிதம் கொள்ளச் செய்துள்ளீர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x