Published : 18 Jul 2016 03:53 PM
Last Updated : 18 Jul 2016 03:53 PM

பிசிசிஐ சீர்திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்: லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்த கெடு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் கறாரான நிர்வாகச் சீர்திருத்தங்களை வலியுறுத்தும் நீதிபதி லோதா கமிட்டிப் பரிந்துரைகளின் முக்கிய அம்சங்களை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரிய அமைப்பில் (பிசிசிஐ) சீர்திருத்தங்கள் செய்யக்கோரும் லோதா குழுவின் பரிந்துரைகளை எதிர்த்து பிசிசிஐ மற்றும் பல்வேறு மாநில கிரிக்கெட் சங்கங்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை இன்று வெளியிட்டது உச்ச நீதிமன்றம். லோதா குழுவின் பரிந்துரைகளை 6 மாதத்துக்குள் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் லோதா கமிட்டி பரிந்துரைகளின் முக்கிய அம்சங்களை ஏற்றுக் கொண்டுள்ளது, இவற்றை பிசிசிஐ 6 மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட பரிந்துரைகள்:

* பிசிசிஐ-யில் மத்திய தணிக்கைக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் இருப்பது அவசியம்.

* பிசிசிஐ நிர்வாகிகள் பணியாற்ற உச்சவரம்பு வயது 70.

* பிசிசிஐ-யில் வீரர்கள் சங்கம் இருப்பது அவசியம்.

* அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பிசிசிஐ-யில் எந்த வித பொறுப்பும் வகித்தல் கூடாது.

* ஆதாயம் தரும் வகையிலான இரட்டைப் பதவி கூடாது. ஒருவருக்கு ஒரு பதவி திட்டம் அமல் படுத்தப்பட வேண்டும்.

* ஒரு கிரிக்கெட் சங்கத்துக்கு மேல் செயல்படும் மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் ஆகியவற்றுக்கு சுழற்சி அடிப்படையில் வாக்குரிமை அளிக்க வேண்டும். ஒரு மாநிலம் ஒரு வாக்கு என்பதே லோதா கமிட்டி பரிந்துரையாக இருந்தது, தற்போது அதில் லேசான திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

* சூதாட்டம் குறித்த சட்டமியற்றுதல் மற்றும் பிசிசிஐ-யை தகவலுரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வருவது குறித்து உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றத்தின் விருப்பத்துக்கு விட்டு விட்டது.

“பிசிசிஐ-யின் நல்ல செயல்பாட்டை தடுப்பதோ, குறைப்பதோ எங்கள் நோக்கமல்ல. ஆனால் நோய்க்கூறான பகுதிகளை சீரமைத்தலுக்கான எங்களது நீண்ட கால அக்கறைகளே இந்த பரிந்துரைகளை ஏற்றல் என்பதாகும். பிசிசிஐ-க்கு புத்துயிரூட்டி இன்னும் நீண்ட காலத்துக்கு அது ஆட்டத்துக்குச் சேவை செய்ய வைப்பதே எங்கள் நோக்கம். 1.28 பில்லியன் மக்கள் தொகையினர் கிரிக்கெட்டை மிகவும் நேசத்துடன் பார்த்து வரும் நிலையில் அதனை தனது ஒளிர்ந்த காலத்துக்கு மீட்டெடுப்பதே எங்கள் நோக்கம்” என்று நீதிபதி லோதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது, சூதாட்டம் என்பது உலகம் முழுதும் 400 பில்லியன் டாலர்கள் சந்தையாகும். இந்தியாவில் அதனை சட்டபூர்வமாக்க அரசு ஆவன செய்திடல் வேண்டும் என்றார். ஆனால் சூதாட்டத்தில் கிரிக்கெட் நிர்வாகிகள், வீரர்கள், போட்டியில் பங்கேற்கும் அதிகாரிகள், நிர்வாகிகள் என்று யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x