Published : 26 Jan 2017 10:18 AM
Last Updated : 26 Jan 2017 10:18 AM

கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று இந்தியா-இங்கிலாந்து டி 20-ல் மோதல்

ரிஷப் பன்ட் உள்ளிட்ட இளம் வீரர்கள் மீது எதிர்பார்ப்பு

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் ஆட்டம் கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 2-1 என இழந்த மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி டி 20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

ஒருநாள் போட்டிக்கான அணியில் இருந்து பல்வேறு மாற்றங்களுடன் புதிய வடிவில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, டி 20 தொடரை அணுகுகிறது. ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெறாத ரிஷப் பன்ட், மன்தீப் சிங், யுவேந்திர சாஹல், பர்வேஸ் ரசூல், ரெய்னா, ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் டி 20 அணியில் இடம் பிடித்துள்ளனர்.

முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அமித் மிஸ்ரா, சுழற்பந்து வீச்சை முன்னெடுத்துச் செல்லக்கூடும். இன்றைய ஆட்டத்தில் 19 வயதான இளம் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.

டெல்லியை சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான அவர், கடந்த ஆண்டு 19 வயதுக்குட் பட்டோருக்கான உலகக் கோப்பை யில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதை தொடர்ந்து உள்ளூர் போட்டிகளிலும் அவரது பேட்டிங் ஏறுமுகமாக இருந்து வருகிறது.

ஷிகர் தவண் அணியில் இடம் பெறாததால் இன்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுலுடன் ரிஷப் பன்ட் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை நிரூபிக்கும் விதமாக நேற்று பயிற்சியாளர் அனில் கும்ப்ளே முன்னிலையில் ரிஷப் பன்ட் நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட்டார்.

ரிஷப் பன்ட் களமிறங்கும் பட்சத்தில் மற்றாரு தொடக்க வீரரான மன்தீப் சிங்குக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். ஏனெனில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் அவர் வெறும் 8 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதேவேளையில் ரிஷப் பன்ட் 36 பந்துகளில் 59 ரன்கள் விளாசி மிரட்டினார்.

ஒருநாள் போட்டி தொடரில் கே.எல்.ராகுல் 3 ஆட்டத்தையும் சேர்த்து 24 ரன்கள் மட்டுமே சேர்த்தார். இதனால் டி 20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறார். சீனியர் வீரர்களில் சுரேஷ் ரெய்னாவுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சமீபகாலமாக ஒருநாள் போட்டி தொடரில் இருந்து புறக் கணிக்கப்பட்டு வரும் அவர், கடைசியாக இந்திய அணிக்காக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையில்தான் விளையாடியிருந்தார்.

இன்றைய ஆட்டத்தில் ரெய்னா உறுதியாக இடம் பெறுவாரா என்பது சந்தேகம். 3-வது இடத்தில் கோலி, 4-வது இடத்தில் யுவராஜ்சிங், 5-வது இடத்தில் தோனி ஆகியோர் களமிறங்குவார்கள். இதனால் 6-வது இடத்தை பிடிக்க மணீஷ் பாண்டேவுடன் ரெய்னா மல்லுக்கட்ட வேண்டிய நிலையில்தான் உள்ளார்.

மணீஷ் பாண்டே உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளை யாடி வருகிறார். மேலும் ஒருநாள் போட்டி தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த போதிலும் விளையாடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருவேளை ரெய்னாவுக்கு இன்று வாய்ப்பு கிடைத்தாலும், அவர் பெரிய அளவில் ரன்கள் குவித்தால் மட்டுமே அணியில் தனது இடத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும்.

இன்றைய ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்வதில் கோலிக்கு சிறிது குழப்பம் நிலவக்கூடும். ஆல் ரவுண்டர் அடிப்படையில் ஹர்திக் பாண்டியா எளிதாக அணியில் இடம் பிடித்துவிடுவார்.

7 பேட்ஸ்மேன்கள் அணியில் இடம் பெறும் பட்சத்தில் ஒரு சுழற்பந்து வீச்சாளர், 3 வேகங் களுடனோ, அல்லது தலா 2 சுழற்பந்து வீச்சாளர், 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் யார்க்கர் புகழ் ஜஸ்பிரித் பும்ரா, கடைசி கட்டத்தில் நேர்த்தியாக செயல்படும் திறன் கொண்ட புவனேஷ்வர் குமார், அனுபவ வீரரான ஆசிஷ் நெஹ்ரா ஆகியோர் உள்ளனர்.

சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, யுவேந்திரா சாஹல், பர்வேஸ் ரசூல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.

கடைசி ஒருநாள் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டி 20 தொடரை சந்திக்கிறது இங்கிலாந்து அணி. 90 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட 24 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் டைமால் மில்ஸ் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது

ஒருநாள் போட்டி தொடரில் அடுத்தடுத்து அரை சதங்கள் அடித்த ஜேசன் ராய், அதிரடியாக சதம் விளாசிய மோர்கன் ஆகியோர் மிரட்ட தயாராக உள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்களான ஜேக் பால், டேவிட் வில்லி ஆகியோர் இந்திய இளம் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கக்கூடும்.

அணிகள் விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், மன்தீப் சிங், யுவராஜ் சிங், தோனி, சுரேஷ் ரெய்னா, மணீஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், யுவேந்திரா சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஆசிஷ் நெஹ்ரா.

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜாஸ் பட்லர், ஜேசன் ராய், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், சேஷம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், மொயின் அலி, அடில் ரஷித், டேவிட் வில்லி, லயிம் டாவ்சன், டைமால் மில்ஸ், லயிம் பிளங்கெட், கிறிஸ் ஜோர்டான், ஜேக் பால்.

நேரம்: மாலை 4.30

ஒளிரபப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x