Last Updated : 10 Mar, 2017 08:04 PM

 

Published : 10 Mar 2017 08:04 PM
Last Updated : 10 Mar 2017 08:04 PM

சவுமியா சர்க்கார் அதிரடி அரைசதம்; வங்கதேசத்துக்கு வெற்றி இலக்கு 457 ரன்கள்

கால்லே டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு இலங்கை அணி 457 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க, வங்கதேசம் 4-ம் நாள் முடிவில் சவுமியா சர்க்காரின் அதிரடி அரைசதத்துடன் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்துள்ளது.

47 பந்துகளைச் சந்தித்த சவுமியா சர்க்கார் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 53 ரன்கள் எடுத்தும், தமிம் இக்பால் 13 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். நாளை (சனிக்கிழமை) வங்கதேசம் மீதமுள்ள 390 ரன்களை எடுக்க அதிரடியாக ஆடுமா அல்லது டிராவுக்காக ஆடுமா என்பதில்தான் இந்தப் போட்டியின் விறுவிறுப்பு அடங்கியுள்ளது.

4-ம் நாள் ஆட்டம் 14 ஓவர்கள் மீதமிருக்கையில் முடிந்ததற்குக் காரணம், வானில் மேகமூட்டம் இதனால் போதிய வெளிச்சமின்மை ஆகியவையே.

இலங்கை அணி தன் 2-வது இன்னிங்ஸை 274/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. ரங்கனா ஹெராத் இலங்கை அணிக்கு கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உபுல் தரங்கா தனது 3-வது டெஸ்ட் சதத்தை எடுத்தார், வங்கதேசத்துக்கு எதிராக இவர் எடுக்கும் 2-வது சதம் இது, மேலும் இலங்கையில் தன் முதல் சதத்தை எடுத்தார் தரங்கா.

171 பந்துகளைச் சந்தித்த தரங்கா 11 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 115 ரன்களுடன் எடுத்து ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசனிடம் பவுல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன், ரன் எடுக்காத நிலையில் அசேலா குணரத்னேவை வீழ்த்தினார். மீண்டும் மெஹதி ஹசன், 15 ரன்கள் எடுத்திருந்த டிக்கிவெலாவை வீழ்த்தினார்.

தினேஷ் சந்திமால் 12 ரன்களில் சவுமியா சர்க்கார் கேட்சை விட தனது அரைசதத்தை எடுத்தார், திலுருவன் பெரேரா 33 எடுத்து ஆட்டமிழந்தவுடன் ஹெராத் 274/6 என்ற நிலையில் டிக்ளேர் செய்தார்.

முன்னதாக ஷாகிப் அல் ஹசன், இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஹீரோ குசல் மெண்டிஸ் விக்கெட்டை 19 ரன்களில் வீழ்த்தினார், இவர் முதல் இன்னிங்ஸில் 194 ரன்களை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

இன்று காலை இலங்கை தன் 2-வது இன்னிங்சை எச்சரிக்கையுடன் தொடங்கியது. முதல் செஷனில் 87 ரன்களை எடுத்தது இலங்கை, இதில் திமுத் கருண ரத்னே 32 ரன்களுக்கு தஸ்கின் அகமது பந்தில் மஹமுதுல்லாவிடம் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு 31 ஓவர்களில் 160 ரன்களை இலங்கை விளாசியது.

முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் எடுத்த தரங்கா இந்த இன்னிங்சில் சதம் எடுத்தார். ஷாகிப், மெஹதி ஹசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

வங்கதேசம் தன் முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது, இலங்கை 494 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x