Published : 30 Dec 2013 07:00 PM
Last Updated : 30 Dec 2013 07:00 PM

காலிஸின் கடைசி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, காலிஸின் கடைசி தொடரைக் கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. ஆட்டநாயகனாக டேல் ஸ்டெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர் நாயகனாக டி வில்லியர்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டர்பன் நகரில் இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வந்தது. பரபரப்பாக நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை வெல்லும் அணி தொடரைக் கைப்பற்றும். ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்திருந்த இந்தியா டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருந்தது.

முதலில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் நாள் ஆட்டம் இந்தியாவுக்கு சற்று சாதகமாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்னின் பந்து வீச்சால் (100/6) 334 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவின் தரப்பில் முரளி விஜய், புஜாரா, ரஹானே ஆகியோர் அரை சதத்தைக் கடந்தனர்.

தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ரவீந்த்ர ஜடேஜாவின் பந்து வீச்சில் (138/6) சிறிது தடுமாறினாலும், அந்த அணியின் காலிஸ் சதத்தைக் கடந்து தனது அணியை சிக்கலிலிருந்து மீட்டார். காலிஸின் கடைசி டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆல்விரோ பீட்டர்சன், டீ வில்லியர்ஸ், ராபின் பீட்டர்சன் ஆகியோரும் சிறப்பாக ஆடினர். தென் ஆப்பிரிக்கா 166 ரன்கள் முன்னிலையோடு தனது முதல் இன்னிங்க்ஸை முடித்தது.

இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் இந்தியா இன்னிங்க்ஸ் தோல்வி அடையும் நிலையில் இருந்தது. ஆனால் ரஹானேவின் பொறுப்பான ஆட்டத்தால் இன்னிங்க்ஸ் தோல்வி தவிர்க்கப்பட்டது. இந்தியா 57 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. கடைசி வரை களத்தில் இருந்த ரஹானே 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராபின் பீட்டர்சன் 4 விக்கெட்டுகளும், ஸ்டெய்ன் மற்றும் ஃபிலாண்டர் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

58 ரன்கள் என்கிற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, விக்கெட் இழப்பின்றி 12 ஓவர்களிலேயே 59 ரன்களை எட்டியது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரையும் தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது. இதோடு டெஸ்ட் தரவரிசையில் தனது முதல் இடத்தையும் அந்த அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்தியாவின் தோல்விக்கு, இரண்டாவது இன்னிங்க்ஸில் பேட்ஸ்மேன்கள் யாரும் சரியாக விளையாடாததே முக்கியமான காரணம். தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக, இந்திய வீரர்களின் ஆட்டம், எதிர்பார்க்கப்பட்டதை விட சிறப்பாகவே இருந்தாலும் துவக்க வீரர் தவான், இந்தத் தொடரின் எந்த இன்னிங்க்ஸிலும் அரை சதத்தைக் தொடவில்லை. அதே போல ரோஹித் சர்மாவும் ஒரு இன்னிங்க்ஸில் கூட 30 ரன்கள் எடுக்க முடியாமல் திணறினார். கேப்டன் தோனியின் ஆட்டமும் ஏமாற்றத்தை அளித்தது. கோலி, புஜாரா, ரஹானே, இந்த போட்டியில் விஜய் ஆகியோர் மட்டுமே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

பந்துவீச்சு திருப்திகரமாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இணையான ஆதிக்கத்தை இந்திய வீரர்களால் வெளிப்படுத்த முடியாமல் போனது. ஒன்றிரண்டு வீரர்களைத் தவிர, முற்றிலும் அனுபவம் இல்லாத இந்திய அணியே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான அனைத்து போட்டிகளிலும் ஆடியது.

இதற்கு முன்னால் அங்கு நடந்த தொடர்களைக் காட்டிலும், இந்த முறை நடந்த போட்டிகளில் இந்திய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்ததாகவே கிரிக்கெட் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். டெஸ்ட் போட்டியின் பல தருணங்கள் இந்தியா வெற்றி பெற சாதகமாகக் கூட இருந்தது. ஆனாலும் அணியின் இந்த ஆற்றல் வெற்றிக்குப் போதுமானதாக இருக்கவில்லை. இந்தத் தொடர், விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நல்ல பாடமாக அமைந்திருக்கும் பட்சத்தில், எதிர்காலத்தில் அன்னிய மண்ணில் நடக்கும் தொடர்களை கண்டிப்பாக இந்தியா வெல்லும் என எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x