Last Updated : 20 Apr, 2017 09:30 AM

 

Published : 20 Apr 2017 09:30 AM
Last Updated : 20 Apr 2017 09:30 AM

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோவின் ஹாட்ரிக் கோலால் அரை இறுதியில் நுழைந்தது ரியல் மாட்ரிட்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அணிக்கு எதிரான 2-வது கட்ட கால் இறுதியில் சராசரி விகித கோல்கள் அடிப்படையில் 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி 7-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டா ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார்.

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. 53-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி அந்த அணி வீரர் லெவான்டவ்ஸ்கி கோல் அடித்தார். இதனால் பேயர்ன் முனிச் 1-0 என முன்னிலை வகித்தது.

அடுத்த 23-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் பதிலடி கொடுத்தது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த கோலால் ஆட்டம் 1-1 என சமநிலையை எட்டியது. ஆனால் அடுத்த நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் செர்ஜியோ ரமோஸ், சேம்சைடு கோல் அடித்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் பேயர்ன் முனிச் 2-1 என முன்னிலை பெற்றது. இதன் பின்னர் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படவில்லை. முதல் கட்ட கால் இறுதியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

இதனால் சராசரி கோல்கள் விகிதப்படி ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால் வெற்றியை தீர்மானிக்க ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு (30 நிமிடங்கள்) சென்றது. இதில் 104 மற்றும் 109-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்து ரொனால்டோ ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

இதனால் ரியல் மாட்ரிட் அணி 5-3 என வலுவான நிலையை அடைந்தது. அடுத்த 3-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி மேலும் ஒரு கோலை அடித்தது. இந்த கோலை மார்கோ அசன்சியோ அடித்தார். முடிவில் 6-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட் அணி 7-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறியது.

ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோ, சாம்பி யன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். மான்செஸ்டர் யுனைடெடு, ரியல் மாட்ரிட் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ள அவர் 137 போட்டிகளில் 100 கோல்கள் அடித்துள்ளார். இந்த வகையில் பார்சிலோனா வீரர் லயோனல் மெஸ்ஸி 114 போட்டிகளில் 94 கோல்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார்.

சர்ச்சை கோல்கள்

ரொனால்டோ அடித்த ஹாட்ரிக் கோல்களில் இரு கோல்கள் சர்ச்சையை கிளப்பி உள்ளன. அவர் அடித்த 2-வது மற்றும் 3-வது கோல் ஆப்சைடு கோல் என்று பேயர்ன் முனிச் வீரர்கள் குற்றம் சாட்டியபோதும் அதை மேட்ச் ரெப்ரி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

104-வது நிமிடத்தில் செர்ஜியோ ரமோஸ் கொடுத்த பாஸ் மூலம் ரொனால்டோ தனது 2-வது கோலை அடித்தார். மேலோட்டமாக பார்க்கையில் இந்த கோலில் பிரச்சினை இல்லாதது போல் தெரிந்தது. ஆனால் ரீபிளேவில் ரமோஸிடம் இருந்து பந்து ரிலீஸ் ஆகும் முன்பே ரொனால்டோ ஆப்சைடு பகுதியில் நின்றிருந்தது தெரிந்தது.

109-வது நிமிடத்தில் மார்செலோ கொடுத்த பாஸையும் ரொனால்டோ ஆப்சைடில் இருந்தே அடித்தார். இது மிகதெளிவாக தெரிந்த போதும் ரெப்ரி கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.

ஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x