Last Updated : 06 Jun, 2016 03:54 PM

 

Published : 06 Jun 2016 03:54 PM
Last Updated : 06 Jun 2016 03:54 PM

கோப்பா அமெரிக்கா: த்ரில் ஆட்டத்தில் உருகுவேயை வீழ்த்தியது மெக்சிகோ

கோப்பா அமெரிக்கா கால்பந்து தொடர் விறுவிறுப்பு எய்தியுள்ளது என்று கூறினால் அது மெக்சிகோ-உருகுவே மோதிய குரூப் சி போட்டியாகத்தான் இருக்க முடியும். மெக்சிகோ அணி தனது கடைசி நேர 2 கோல்களினால் 3-1 என்ற கோல் கணக்கில் உருகுவே அணியை வீழ்த்தியது.

தேசிய கீதத்தில் சர்ச்சையுடன் இந்தப் போட்டி தொடங்கியது. உருகுவே தேசிய கீதத்துக்குப் பதிலாக சிலி தேசிய கீதம் ஒலிபரப்பப் பட்டது. இந்தத் தவறுக்காக அமைப்பாளர்கள் ஹாஃப் டைம் போது மன்னிப்பு கேட்டனர்.

அரிஸோனாவில் நடைபெற்ற இந்த போட்டியில் கடைசி 5 நிமிடங்களில் ரஃபா மார்க்வேஸ், ஹெக்டர் ஹெரேரா ஆகியோரது கோல்களினால் மெக்சிகோ சற்றும் எதிர்பாராத ஒரு வெற்றியைப் பெற்றது. இந்த ஆட்டத்தை சுமார் 60,025 பேர் நேரில் கண்டு களித்தனர்.

ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் மெக்சிகோவின் மார்க்வேஸ் ஒரு லாங் பாஸை அடிக்க இடது புறத்திலிருந்து மெக்சிகோ வீரர் குவார்டாடோ அருமையான ஒரு ஷாட்டை ‘கிராஸ்’ செய்ய உருகுவே கோல் கீப்பர் பெரைராவால் அதனை கையாள முடியவில்லை காரணம் ஹேரேரா அவருக்கு கடும் நெருக்கடி கொடுக்க இதனால் தடுமாறி உருகுவே கோல் கீப்பர் பெரைரா மூலமாகவே மெக்சிகோவுக்கு முதல் கோல் கிடைத்தது. அதாவது ‘ஓன் கோல்’ முறையில் மெக்சிகோ முன்னிலை பெற்றது, ஆனால் குவார்டாடோவின் அந்த கிராஸ்தான் பெரைராவின் தடுமாற்றத்துக்குக் காரணம், எனவே மெக்சிகோ இந்தக் கோலை முயன்றே அடைந்தது என்றே கூற வேண்டும்.

அதன் பிறகே மெக்சிகோ ஆட்டத்தை தங்கள் வசப்படுத்தியது, பெரைராவின் ஃபவுல் ஆட்டத்துக்காக அவர் எச்சரிக்கப்பட்டார். நடுக்களத்தில் மெக்சிகோ ஆதிக்கம் செலுத்த உருகுவே லாங் ஷாட்களில் தஞ்சம் கொள்ள நேர்ந்தது. உருகுவேயின் நட்சத்திர வீரர் சுவாரேஸ் இந்த ஆட்டத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாதியில் உருகுவேவிற்கு கோல் அடிக்க ஒரு வாய்ப்பு கிட்டியது. நிகலஸ் லொடைரோவின் பாஸை எடின்சன் கவானி கோலுக்கு அடித்தார், ஆனால் அங்கு மெக்சிகோ கோல் கீப்பர் அல்பிரடோ தலாவெரா அதனை தடுத்து திருப்பி விட்டார்.

இடைவேளைக்குப் பிறகு உருகுவே தங்கள் பாணி ஆட்டத்திற்குத் திரும்பி நெருக்கடி கொடுக்க, 59-வது நிமிடத்தில் கவானி கொடுத்த வாய்ப்பை டீகோ ரோலான் கோலாக மாற்றத் தவறினார், இது சற்றே எளிதான வாய்ப்பு.

இரு அணிகளும் ஃபவுல் கேம் ஆட இரண்டு வீரர்கள் இரு அணிகளிலிருந்தும் வெளியேற்றப்பட இரு அணிகளுமே 10 வீரர்களுடன் ஆடியது. 74-வது நிமிடத்தில் உருகுவே கேப்டன் டீகோ கோடின் ஃப்ரீ கிக்கை தனது தலையால் முட்டி அருமையான கோலாக மாற்ற 1-1 என்று சமனிலை அடைய, ஆட்டம் சூடு பிடித்தது.

84-வது நிமிடத்தில் ரஃபேல் மார்க்வேஸ் கார்னரிலிருந்து அருமையான ஒரு ஷாட்டை அடித்து கோலாக மாற்றினார். ஆனால் இது ஆஃப் சைடு என்று உருகுவே எதிர்ப்பு காட்டினர், ஆனாலும் பயனில்லை. பிறகு 91-வது நிமிடத்தில் ரால் ஜிமேனேஸின் கிராஸை ஹெரெரா தலையால் முட்டி கோலுக்குள் செலுத்த மெக்சிகோ 3-1 என்று வெற்றி பெற்றது.

மற்றொரு சி பிரிவு ஆட்டத்தில் வெனிசூலா ஜமைக்கா அணியை 1-0 என்று வீழ்த்தியது, ஆனால் மெக்சிகோ கோல் வித்தியாசங்கள் அடிப்படையில் சி பிரிவில் முதலிடம் வகிக்கிறது.

அடுத்த ஆட்டத்தில் உருகுவே, வெனிசூலா அணியை எதிர்கொள்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x