Published : 01 Jan 2014 10:35 AM
Last Updated : 01 Jan 2014 10:35 AM

கடைசி போட்டியிலும் இந்தியா தோல்வி: 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது நியூஸி.

நியூஸிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 87 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா. இதன்மூலம் இந்தத் தொடரில் இந்தியா ஒரு வெற்றிகூட பெறவில்லை. ஒரு டை, 4 தோல்விகளுடன் தொடரை இழந்துள்ளது.

நியூஸிலாந்தின் வெலிங்டன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடர்ந்து 5-வது முறையாக டாஸ் வென்ற தோனி, இந்த முறையும் பீல்டிங்கையே தேர்வு செய்தார்.

3-வது விக்கெட்டுக்கு 152

இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெஸ்ஸி ரைடர் 17, மார்ட்டின் கப்டில் 16 ரன்களில் ஆட்டமிழந்தபோதும், கேன் வில்லியம்சன்-ராஸ் டெய்லர் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 152 ரன்கள் சேர்த்தது. இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளிலும் அரைசதம் கண்ட வில்லியம்சன் 91 பந்துகளில் 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து வந்த மெக்கல்லம் சிக்ஸர் அடித்து அதிரடியில் இறங்கியபோதும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் கோலி பந்துவீச்சில் ரோஹித்திடம் கேட்ச் ஆனார். இதையடுத்து வந்த ஜேம்ஸ் நீஷாமும் வெளுத்து வாங்கினார்.

டெய்லர் 10-வது சதம்

மறுமுனையில் சிறப்பாக ஆடிய டெய்லர், சமி வீசிய 48-வது ஓவரில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார். 106 பந்துகளை சந்தித்த டெய்லர் 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 102 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரில் தொடர்ச்சியாக அவர் அடித்த 2-வது சதம் இது. ஒட்டுமொத்தத்தில் அவர் அடித்த 10-வது சதமாகும்.

இதன்பிறகு சமி வீசிய கடைசி ஓவரில் நீஷாம் தொடர்ச்சியாக ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விளாச, நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. நீஷாம் 19 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34, லியூக் ரோஞ்சி 5 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹென்றி அபாரம்

304 ரன்கள் என்ற வலுவான இலக்குடன் ஆடிய இந்திய அணி நியூஸிலாந்தின் அறிமுக வீரர் மேட் ஹென்றியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சரிவுக்குள்ளானது. ரோஹித் சர்மா 4 ரன்களில் மில்ஸ் பந்துவீச்சில் வெளியேற, ஷிகர் தவண் (9), அஜிங்க்ய ரஹானே (2), அம்பட்டி ராயுடு (20) ஆகியோரை வெளியேற்றினார் ஹென்றி. இதனால் 78 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா.

போராடிய கோலி, தோனி

இதன்பிறகு 5-வது விக்கெட்டுக்கு இணைந்த கோலியும், கேப்டன் தோனியும் இந்தியாவை சரிவிலிருந்து மீட்க கடுமையாகப் போராடினர். சிறப்பாக ஆடிய கோலி 60 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் தனது 30-வது அரை சதத்தைப் பதிவு செய்தார்.

இதன்பிறகு இந்தியா வெற்றி பெற சராசரியாக 10-க்கும் அதிகமான ரன்ரேட் தேவைப்பட்டதால் அதிரடியில் இறங்கிய கோலி, லாங் ஆன் திசையில் கேட்ச் ஆனார். 78 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். இதன்பிறகு இந்தியாவின் சரிவு தவிர்க்க முடியாததானது.

பின்னர் வந்த அஸ்வின் 7, ஜடேஜா 5 ரன்களுக்கு வெளியேற, மறுமுனையில் தனிநபராகப் போராடிய கேப்டன் தோனி 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 72 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். இதைத்தொடர்ந்து புவனேஸ்வர் குமார் 20 ரன்களிலும், வருண் ஆரோன் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, 49.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு சுருண்டது இந்தியா.

நியூஸிலாந்து வீரர் மேட் ஹென்றி தனது அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ராஸ் டெய்லர் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 4-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து கைப்பற்றியது. முன்னதாக 3-வது போட்டி டையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

மோசமான தோல்வி

முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி 0-4 என்ற கணக்கில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டுள்ளது. இந்தத் தொடரில் களமிறங்கும்போது இந்தியா முதலிடத்தில் இருந்தது. தொடர் தோல்வியால் இப்போது முதலிடத்தை இழந்து 2-வது இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் நியூஸிலாந்து அணி ஓர் இடம் முன்னேற்றம் கண்டு 7-வது இடத்தைப் பிடித்துள்ளது.

2002-03-ல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-5 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ளது. 1975-76 மற்றும் 1980-81 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் இந்தியா “வாஷ் அவுட்” ஆனது. அதன்பிறகு இப்போதுதான் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

தோனி 8,000

இந்தப் போட்டியில் 1 ரன் எடுத்தபோது 8 ஆயிரம் ரன்களைக் கடந்தார் இந்திய கேப்டன் தோனி. இதன்மூலம் அவர் அதிவேகமாக 8 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர்கள் வரிசையில் வரிசையில் 4-வது இடத்தைப் பிடித்தார். தோனி தனது 214-வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியாவின் சௌரவ் கங்குலி (200), சச்சின் டெண்டுல்கர் (210), மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா (211) ஆகியோர் அதிவேக சதமடித்தவர்கள் வரிசையில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

கங்குலி, சச்சின், லாரா ஆகிய 3 பேருமே முதல் 3 நிலைகளில் (தொடக்கம் அல்லது 3-வது வீரராக களமிறங்குவது) விளையாடியவர்கள். ஆனால் தோனி பின்வரிசையில் களமிறங்கி இந்த மைல்கல்லை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கேன் வில்லியம்சன் ஐந்துக்கு 5

இந்தத் தொடரில் 5 போட்டிகளிலும் அரைசதம் கண்ட வில்லியம்சன், தொடர்ச்சியாக 5 அரைசதங்களை விளாசிய 2-வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். பாகிஸ்தானின் யாசிர் ஹமீத் இந்த சாதனையை செய்த முதல் வீரர் ஆவார். அவர் 2003-ல் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x