Published : 18 Jun 2015 10:03 PM
Last Updated : 18 Jun 2015 10:03 PM

ரன் ஓடும் போது குறுக்கே வந்த பவுலரை இடித்துத் தள்ளிய தோனி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ரன் ஓடும் போது குறுக்கே வந்த வங்கதேச பவுலரை தோனி இடித்துத் தள்ளினார்.

இந்திய அணி 123/4 என்று தோல்வியைத் தவிர்க்க போராடி வந்த நேரத்தில் ஆட்டத்தின் 25-வது ஓவரில் அறிமுக இளம் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தோனிக்கு ஒரு பந்தை யார்க்கர் லெந்தில் வீசினார். தோனி அதனை மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒரு விரைவு சிங்கிளுக்காக ரன்னர் முனை நோக்கி ஓடி வந்தார்.

அப்போது பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் இடது புறமாக வேண்டுமென்றே நகர்ந்து வந்து தோனியின் ஓட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமாறு வந்தார்.

தோனி அவரை பலமாக இடித்துத் தள்ளினார். இதனால் பவுலருக்கு லேசாக பொறி கலங்கிவிட்டது. உடனேயே தோனி நடுவரிடம் பவுலர் வேண்டுமென்றே குறுக்காக வந்தார் என்று சைகை செய்தார்.

ஆனால், பவுலர் முஸ்தபிசுர் ரஹ்மான் பொறிகலங்கி அந்த ஓவர் பந்து வீசாமல் பெவிலியன் சென்றார். இந்த பவுலருக்கு குறுக்கே வரும் பழக்கம் இருந்தது. அவரை ஒருவரும் எச்சரிக்கவில்லை. மாறாக தோனியிடம் தன் வேலையை அவர் காட்ட இடித்துத் தள்ளினார் தோனி. பேட்ஸ்மென் ஓடும் பாதையில் குறுக்காக ஒருவரும் வரக்கூடாது. ஏற்கெனவே மிட்செல் ஜான்சனை ஒருமுறை தோனி இதுபோன்று இடித்து நகர்த்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிறிது நேரம் தோனி செய்கை பற்றி அதிர்ச்சி நிலவினாலும் தமிம் இக்பால் நடந்ததைப் புரிந்து கொண்டு புன்னகைக்க, அவர் தோள் மீது கைபோட்டபடி தோனி எதையோ பேசியதும் நிகழ்ந்தது.

ஆனால், நகைமுரண் என்னவெனில் இதனால் கவனம் இழந்த தோனி அடுத்த ஓவரில் ஷாகிப் அல் ஹசன் பந்தை டிரைவ் ஆட முயன்றார் பந்து வெளியே சென்றது. எட்ஜ் ஆனது, முஷ்பிகுர் ரஹிம் கேட்சை எடுத்தார் தோனி 5 ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களில் தடுமாறி வருகிறது.வங்கதேச அணி லேசாக வெற்றியின் வாடையை முகர்ந்ததாகவே தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x