Published : 07 Apr 2014 12:12 PM
Last Updated : 07 Apr 2014 12:12 PM

மகளிர் டி-20 உலகக் கோப்பையை வென்று ஆஸ்திரேலியா ஹாட்ரிக் சாதனை

மகளிர் டி-20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. இதன் மூலம் டி-20 உலகக் கோப்பையைத் தொடர்ந்து மூன்றா வது முறை வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தது.

வங்கதேசத்தில் டி-20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லன்னிங் இங்கிலாந்தை பேட் செய்ய அழைத்தார்.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக் காரர்கள் எட்வர்ட்ஸ் (13) மற்றும் டெய்லரை (18) தன் துல்லிய பந்து வீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார் ஆஸ்திரேலியாவின் கோய்டே. மூன்றாவது விக்கெட்டாகக் களமி றங்கிய நைட் மட்டமே ஓரளவு தாக்குப் பிடித்து 29 ரன்கள் சேர்த்தார். அவர் 24 பந்துகளைச் சந்தித்து 3 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

ஆஸ்திரேலியாவின் நேர்த்தி யான பந்து வீச்சுக்கு சீரான இடைவெளியில் இங்கிலாந்து வீராங்கனைகள் சொற்ப ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் கோய்டே 3 விக்கெட்டுகளையும், பெர்ரி மற்றும் பெர்ரல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இங்கிலாந்து தரப்பில் ஸ்ரப்சோல் (1), கன் (7) ஆட்டமிழக்காமல் களத்திலிருந்தனர்.

106 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய ஆஸ்திரேலியாவுக்கு ஜோனஸென் அதிரடித் தொடக்கம் தந்தார். ஆனால், அவர் 15 ரன்களில் ஸ்ரப்சோல் பந்துவீச்சுக்கு ஜோன்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் வில்லானி 12 ரன்களுக்குள் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் லன்னிங்கும் பெர்ரியும் ஜோடி சேர்ந்தனர்.

லன்னிங்-பெர்ரி ஜோடி அதிரடியாக விளையாடியது. ஸ்ரப்சோல் வீசிய 5-வது ஓவரில் லன்னிங் இரு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். பெர்ரியும் தன் பங்குக்கு அவ்வப்போது பவுண்டரிகளை விளாசினார். இந்த ஜோடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

சீவர் வீசிய 15-வது ஓவரில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்ட நிலையில் லன்னிங் ஆட்டமிழந்தார். அவர் 30 பந்துகளைச் சந்தித்து 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 44 ரன்களைக் குவித்தார். 5-வது விக்கெட்டுக்குக் களமிறங்கிய பிளாக்வெல் ஒரு நோபாலைச் சந்தித்தார். வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், பிளாக்வெல்லும் ஆட்ட மிழந்தார்.

16-வது ஓவரின் முதல் பந்தில் பெர்ரி வெற்றிக்குத் தேவையான ரன்னை எடுக்க, ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். மகளிர் டி-20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா தொடர்ந்து 3-வது முறை வென் றுள்ளது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் கோய்டே ஆட்டநாயகி விருதை வென்றார். இத்தொடரில் மொத்தம் 13 விக்கெட்டுகளைச் சாய்த்த இங்கி லாந்தின் ஸ்ரப்சோல் தொடர்நாயகி விருதை வென்றார்.

அதிக ரன்

இத்தொடரில் அதிக ரன் குவித்தவர் வரிசையில் ஆஸ்திரேலிய கேப்டன் மெக் லன்னிங் முதலிடம் பிடித்தார். ஒரு சதம், ஒரு சதம் உள்பட அவர் மொத்தம் 257 ரன்கள் குவித்தார்.

நியூஸிலாந்தின் பேட் 228 ரன்களுடன் இரண்டாமிடத்திலும், இந்தியாவின் மிதாலிராஜ் 208 ரன்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

அதிக விக்கெட்

இங்கிலாந்தின் ஸ்ரப்சோல் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, இத்தொடரில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் பட்டியலில் முதலி டத்தில் உள்ளார். இங்கிலாந்தின் சீவர் 10 விக்கெட்டுகளுடனும், ஆஸ்திரேலியாவின் கேய்டே 9 விக்கெட்டுகளுடனும் முறையே 2, 3-வது இடத்திலுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x