Published : 26 Jan 2014 11:26 AM
Last Updated : 26 Jan 2014 11:26 AM

ஆஸி. ஓபன்: லீ நா சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் லீ நா சாம்பியன் பட்டம் வென்றார். மெல்போர்னில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் உலகின் 4-ம் நிலை வீராங்கனையான லீ நா 7-6 (3), 6-0 என்ற நேர் செட்களில் 20-ம் நிலை வீராங்கனையான ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவைத் தோற்கடித்தார்.

இதன்மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆஸ்திரேலியாவின் மார்க்ரெட் கோர்ட் தனது 30-வது வயதில் இந்தப் போட்டியில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. இப்போது அதை தகர்த்துள்ளார் 31 வயது வீராங்கனையான லீ நா. மேலும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 30 வயதுக்குப் பிறகு பட்டம் வென்ற 7-வது வீராங்கனை என்ற பெருமையையும் லீ நா பெற்றுள்ளார்.

இது லீ நா வென்ற 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன்னர் 2011-ல் பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் லீ நா. இந்த வெற்றியின் மூலம் 4-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் லீ நா. இதேபோல் சிபுல்கோவா 20-வது இடத்தில் இருந்து 13-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இது திங்கள்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

லூகாஸ்-லின்ட்ஸ்டெட் ஜோடி சாம்பியன்

ஆடவர் இரட்டையர் பிரிவில் போலந்தின் லூகாஸ் குபோட்-ஸ்வீடனின் ராபர்ட் லின்ட்ஸ்டெட் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிச்சுற்றில் லூகாஸ்-லின்ட்ஸ்டெட் ஜோடி 6-3, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் எரிக் புட்ராக்-தென் ஆப்பிரிக்காவின் ரேவன் கிளாசன் ஜோடியைத் தோற்கடித்தது.

இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள் ளார் லின்ட்ஸ்டெட். இதற்கு முன்னர் விம்பிள்டன் போட்டியில் ருமேனியாவின் ஹாரியா டீக்காவுடன் இணைந்து லின்ட்ஸ்டெட் 3 முறை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியபோதும் அவையனைத்திலும் தோல்வி கண்டுள்ளார். இந்த நிலையில் இந்த ஆண்டு லூகாஸ் குபோட்டுடன் இணைந்து விளையாடி பட்டத்தைத் தட்டிச் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக 36 வயதாகும் லின்ட்ஸ்டெட் கூறுகையில், “நான் அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் இணைந்துதான் விளையாடியிருப்பேன். ஆனால் கடந்த டிசம்பரில் அவருக்கு காயம் ஏற்பட்டதால் குபோட்டுடன் ஜோடி சேர்ந்தேன். இப்போது பட்டம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x