Published : 23 Jun 2016 06:28 PM
Last Updated : 23 Jun 2016 06:28 PM

இந்திய அணியின் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமனம்: ஓராண்டு கால பயணம் மே.இ.தீவுகள் தொடரில் தொடங்குகிறது

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமித்துள்ளது. இவர் ஓராண்டு காலம் பதவி வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டனும், வெற்றிகரமாக வலம் வந்த சுழற்பந்து வீச்சாளரான கும்ப்ளேவின் பணி, ஜூலை மாதம் இந்திய அணியின் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் இருந்து தொடங்குகிறது.

புதிய பயிற்சியாளர் அறிவிப்பை தர்மசாலாவில் நேற்று நடை பெற்ற பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு மாலையில் பிசிசிஐ தலைவர் அணுராக் தாகூர் வெளியிட்டார். அப்போது செயலாளர் அஜேய் ஷிர்கேவும் உடனிருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப் புக்கு 57 விண்ணப்பங்கள் பெறப் பட்டன. இதில் 21 பெயர்களை தேர்வு செய்து அந்த பட்டியலை பிசிசிஐ-யிடம் சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோர் அடங்கிய ஆலோ சனைக்கு குழு வழங்கியிருந்தது.

இதில் கும்ப்ளே, ரவிசாஸ்திரி, லால்சந்த் ராஜ்புட், பிரவீண் ஆம்ரே, டாம்மூடி ஆகிய 5 பேரிடம் ஆலோசனைக்குழுவினர் நேர்காணலும் நடத்தினர். இறுதியில் அனில் கும்ப்ளேயை தலைமைப் பயிற்சியாளராக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பந்து வீச்சு, பேட்டிங் உள்ளிட்ட உதவிப்பயிற்சியாளர்கள் விரை வில் தேர்வு செய்யப்படுவர் என்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

உதவி பயிற்சியாளர்கள் பதவிக்கு இந்த மாதம் இறுதிவரை விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மேலும் இந்திய அணி ஜூலை முதல் வாரத்தில் தான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு புறப்பட்டு செல்கிறது. அதற்குள் உதவி பயிற்சியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் படும் எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் கும்ப்ளே 132 டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 271 ஆட்டங்களில் 337 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். டெஸ்டில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட் வீழ்த்திய இரு வீரர்களில் கும்ப்ளேவும் ஒருவர் ஆவார்.

கும்ப்ளே இந்திய டெஸ்ட் அணிக்கு 2007 நவம்பர் முதல் 2008 அக்டோபர் வரை கேப்டனாக இருந்தார். இவரது தலைமையில் பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களை இந்திய அணி வென்றது.

45 வயதான கும்ப்ளே பயிற்சியாளராக நியமிக்கப் படுவது இதுவே முதன் முறை. சர்வதேச அளவிலோ, முதல்தர போட்டி அளவிலோ கூட அவர் பயிற்சியாளராக பணியாற்றியது இல்லை. மேலும் பயிற்சியாளர் பதவிக்கு கடைசி நபராக விண்ணப் பித்ததும் கும்ப்ளேதான்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு, மும்பை அணிகளுக்கு ஆலோசகராக கும்ப்ளே பணியாற்றி உள்ளார். மேலும் கர்நாடக கிரிக்கெட் சங்க தலைவர், தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியையும் வகித்துள்ளார். தற்போது ஐசிசி கிரிக்கெட் கமிட்டியில் அங்கம் வகிக்கிறார் கும்ப்ளே.

ஆலோசனை குழுவில் இடம் பெற்றுள்ள டெண்டுல்கர், கங்குலி, லஷ்மண் ஆகியோருடன் இணைந்து நீண்ட காலம் இந்திய அணிக்காக கும்ப்ளே விளையாடி உள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடைபெற்ற நேர்காணலின் போது இந்திய அணிக்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கும்ப்ளே விவரித்தார்.

இதில் ஆலோசனைக் குழுவினர் ஈர்க்கப்பட்டதாலேயே பயிற்சியாளர் பதவிக்கு அவர் தேர்வாகி உள்ளதாக கருதப்படுகிறது.

8 வருடங்களுக்கு முன்பு சர்வதேச போட்டிகளில் இருந்து கும்ப்ளே ஓய்வு பெற்றார். கடந்த 2002-ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் கும்ப்ளேவுக்கு தாடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. எனினும் கட்டுப்போட்டபடி 14 ஓவர்கள் வீசிய அவர் மதிப்பு வாய்ந்த பிரையன் லாராவின் விக்கெட்டை கைப்பற்றினார். தற்போது 14 வருடங்களுக்கு பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவே தனது பயிற்சியாளர் பயணத்தை தொடங்குகிறார்.

தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்து கும்ப்ளே கூறும்போது

“இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புமிக்க பதவியை ஏற்க உள்ளேன். மீண்டும் இந்திய அணியின் வீரர்கள் அறைக்குச்செல்ல இருப்பது மிகப்பெரிய கவுரவம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x