Last Updated : 18 Feb, 2017 05:44 PM

 

Published : 18 Feb 2017 05:44 PM
Last Updated : 18 Feb 2017 05:44 PM

ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டம்: இந்தியா ஏ 176/4; ஆஸ்திரேலியா 469/7 டிக்ளேர்

மும்பை பிரபர்ன் மைதானத்தில் நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 2-ம் நாள் ஆட்டத்தில் தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

இது முதல்தர கிரிக்கெட் என்பதால் இந்த ஸ்கோர்கள் வீரர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 93 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்தும், ரிஷப் பந்த் 3 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர். முன்னதாக ஆஸ்திரேலிய அணி 327/5 என்ற நிலையிலிருந்து 469/7 என்று டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் மிட்செல் மார்ஷ் 159 பந்துகளில் 11 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 75 ரன்களையும் மேத்யூ வேட் 89 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 64 ரன்களையும் எடுத்து 6-வது விக்கெட்டுக்காக 129 ரன்களைச் சேர்த்தனர். இருவரும் ஆட்டமிழந்த பிறகு கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுடனும், ஸ்பின்னர் ஓகீஃப் 8 ரன்களுடனும் ஆடி வந்த போது 127 ஓவர்களில் ஆஸ்திரேலிய ஸ்கோர் 469 ரன்களாக இருந்த போது ஸ்மித் டிக்ளேர் செய்தார்.

இந்தியா ஏ அணி இன்னிங்ஸைத் தொடங்கிய போது தொடக்க வீரர் ஹெர்வாட்கர் திணறி 4 ரன்களை எடுத்து நேதன் லயன் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். பிகே பஞ்சல் (36) ஸ்ரேயஸ் ஐயர் இணைந்து ஸ்கோரை 63 ரன்களுக்கு உயர்த்தினர். இவர் 5 பவுண்டரிகளுடன் நன்றாக ஆடி வந்த நிலையில் லயன் பந்தில் வெளியேறினார்.

ஸ்ரேயஸ் ஐயர் இந்திய அணியில் தேர்வாவதை எதிர்நோக்கி வரும் அதிரடி வீரர். இவரது இன்னிங்ஸ்தான் இன்று அபாரமாக அமைந்தது. முதல் பந்திலேயே நேதன் லயனை மேலேறி வந்து லாங் ஆனில் சிக்சருக்குத் தூக்கி ஆஸ்திரேலியர்களுக்கு அதிர்ச்சியளித்தார். நேதன் லயனை மேலும் இவர் 2 சிக்சர்களையும், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் ஓகீபை இருமுறை எல்லைக்கோட்டுக்கு வெளியே சிக்சருக்குத் தூக்கினார், 5 சிக்சர்களும் மேலேறி வந்து லாங் ஆனில் தூக்கி அடிக்கப்பட்டதே.

ஆஸி. அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜேக்சன் பேர்ட் இந்தியா ஏ வீரர்களை சிரமத்திற்குள்ளாக்கினார். ஐயரும் இவரை விளையாட சற்றே திணறினார். ஆனாலும் 44 பந்துகளில் அரைசதம் கண்ட ஸ்ரேயஸ் ஐயர் தின முடிவில் 93 பந்துகளில் 7 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 85 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக ஆடி வருகிறார். ஏ.ஆர் பான் என்ற வீரர் 4 பவுண்டரிகளுடன் 25 ரன்களை எடுத்து பேர்ட் பந்தில் எல்.பி.ஆனார். ஜேக்சன் பேர்ட் மேலும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (19) விக்கெட்டையும் வீழ்த்தி 11 ஓவர்கள் 7 மெய்டன்கள் 15 ரன்கள் 2 விக்கெட்டுகள் என்று அசத்தினார். மிட்செல் மார்ஷ் 9 ஓவர்கள் 26 ரன்கள். இவரும் சிக்கனமாக வீசினார்.

நேதன் லயன் இந்தப் பிட்சில் பந்துகளைத் திருப்பி ஆக்ரோஷமாக வீசினாலும் 17 ஓவர்களில் 72 ரன்களையும் ஓகீஃப் 14 ஓவர்களில் 59 ரன்கள் விளாசப்பட்டார்.

ஆட்ட முடிவில் இந்தியா ஏ 176/4 என்று 293 ரன்கள் பின் தங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x