Last Updated : 07 Oct, 2014 07:27 PM

 

Published : 07 Oct 2014 07:27 PM
Last Updated : 07 Oct 2014 07:27 PM

ஆஸி. தொடருக்கு முன் சில சோதனை முயற்சிகளைச் செய்ய தோனி முடிவு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாளை (புதன்கிழமை) கொச்சியில் முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்க முடிவெடுத்திருப்பதாக கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.

இன்று போட்டிக்கு முந்தைய வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி கூறும்போது, “நாம் மிகப்பெரிய முன்புலத்தை பார்க்க விரும்புகிறோம். ஆகவே இந்தத் தொடரில் சில புதிய முயற்சிகளை முயற்சி செய்து பார்க்கவுள்ளோம். இப்போது செய்யாமல் ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற பிறகு இதனை அப்பொழுதே செய்திருக்கலாம் என்று நினைப்பதைவிட இப்போதே சில சோதனை முயற்சிகளை செய்து பார்க்கலாம் என்று தோன்றுகிறது.

நம் வீரர்கள் என்ன வழங்குகிறார்கள் என்பதையும் என்னால் இயன்ற சிறப்பு என்ன என்பதையும் நாம் பார்ப்போம். ஆனாலும் தொடரை நன்றாகத் தொடங்கி தொடரை வெல்வதே பிரதான இலக்கு.

ரோகித் காயம்... அஜிங்கிய ரஹானே பற்றி...

அஜிங்கியா ரஹானே தொடக்க வீரராக நன்றாகவே தன்னை வெளிப்படுத்துகிறார் என்று நான் கருதுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தொடங்குகிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆகிய இருதரப்பினருக்கு எதிராகவும் அவர் சீராக ஆடிவருகிறார். தொடக்க வீரராக அவர் பொறுப்பேற்க வேண்டும்.

இங்கிலாந்தில் இதற்கு முந்தைய தொடரில் அவர் தொடக்க வீரராக இறங்கியுள்ளார். ரஹானே தொடக்கத்திலும் ரோகித் சர்மா சற்றே பின்னால் களமிறங்குவதும் எங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் இது பற்றி காத்திருந்துதான் முடிவெடுக்க முடியும்.

அந்த இடத்தில் நிறைய திட்டங்கள் உள்ளன, அஜிங்கிய ரஹானே இன்னும் அதிகமாக பங்களிப்பு செய்ய முடியும் என்றே நான் நம்புகிறேன்.

இறுதி ஓவர்களில் பந்துவீச்சு சொதப்பல் பற்றி...

செயல்படுத்தும் திட்டத்தை சரியாகச் செய்ய வேண்டும். நம்மிடம் வேகமாகவும் அதே சமயத்தில் நல்ல லெந்த்தில் வீசும் பவுலர்கள் குறைவு. வேகமாகவும் வீசாமல் சரியான திசையில் வீசாமல் இருந்தால் பேட்ஸ்மென்கள் கைதான் ஓங்கும். வெற்றிகரமான பவுலர்கள் யார்க்கர்களுடன் மெதுவான பந்துகளையும் வீசுவதில் சிறப்பாக திகழ்கின்றனர்.

ஸ்பின் பவுலர்கள் மீது த்ரோ புகார் எழுவது பற்றி...

இந்த விஷயத்தில் எது சரி எது தவறு என்பதை நாம் பார்க்க வேண்டும். முறையான பந்து வீச்சு உத்தி இல்லாதவர்களுக்கு மற்ற வீச்சாளர்களை விட அனுகூலம் அதிகமிருக்கிறது. இந்த விவகாரத்தில் முறையற்ற பந்துவீச்சை அனுமதித்தால் நல்ல முறையில் வீசுபவர்களுக்கு நாம் அநீதி இழைத்தவர்களாகிவிடுவோம். எனவே இப்போது எடுக்கப்படும் நடவடிக்கை சரியே என்று நான் கருதுகிறேன்.

சைனமன் பவுலர் குல்தீப் யாதவ் தேர்வு பற்றி...

அவர் எப்படி சர்வதேச கிரிக்கெட்டுடன் அவர் எப்படி தன்னை ஒத்துப் போகச் செய்கிறார் என்பதைப் பார்ப்போம். சாம்பியன்ஸ் லீகில் பார்த்த வரை அவரிடம் பேட்ஸ்மென்களை குழப்பும் சாதுரியம் உள்ளது” என்றார் தோனி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x