Published : 03 Oct 2014 04:04 PM
Last Updated : 03 Oct 2014 04:04 PM

டெஸ்ட் கேப்டனாக ‘மோசமான’ தோனியை நீக்க வேண்டும்: அசாருதீன் சாடல்

டெஸ்ட் அணியின் கேப்டனாக மோசமான தோனியை நீக்கி விட்டு விராட் கோலியை கேப்டனாக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டன் மொகமது அசாருதீன் கடுமையாக சாடியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் அயல்நாட்டில் தொடர்ந்து படு தோல்விகளைச் சந்திப்பதோடு வெற்றி பெற வாய்ப்பிருந்த போட்டிகளிலும் தனது மோசமான கேப்டன்சியினால் வெற்றி பெறாமல் போன தோனியை உடனடியாக பிசிசிஐ நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அசாருதீன்.

சாம்பியன்ஸ் லீக் டென்னிஸ் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அசாருதீன், “மோசமான டெஸ்ட் ரெக்கார்ட் வைத்திருக்கும் தோனி உடனடியாக நீக்கப்படவேண்டும்” என்று கூறினார்.

“அவரால் கேப்டனாக நீடிக்க முடியாது, வெற்றி பெற்றால்தான் நீண்ட காலம் கேப்டனாக இருக்க முடியும், சரியாக ஆடவில்லையெனில் கேப்டன் பொறுப்பை தக்க வைக்க முடியாது, அவர் நீக்கப்பட வேண்டியதுதான், அவ்வளவுதான் விஷயம். பிசிசிஐ உடனடியாக இது குறித்து சிந்திக்க வேண்டும்.

ஒரு புதிய கேப்டன் நிச்சயம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். நான் தேர்வுக்குழுவில் இருந்தால் விராட் கோலிக்கு நிச்சயம் கேப்டன் பொறுப்பை அளித்து வாய்ப்பை ஏற்படுத்துவேன். நல்ல கேப்டன்களை உருவாக்குவது அவசியம் அதற்கு புதிதாக ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். வாய்ப்பேயளிக்காமல் இருந்து விட்டு ஒருவரும் இல்லை என்று எப்படி சால்ஜாப் கூற முடியும்?

கோலி இங்கிலாந்தில் சரியாக ஆடவில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். வீரர்கள் மீது பொறுப்பை சுமத்தவில்லையெனில் அவர் சரியாக ஆடுகிறாரா இல்லையா என்பதை எப்படி கணிக்க முடியும்?

3 வடிவங்களிலும் ஒருவர் கேப்டனாக இருக்க அவர் அந்தந்த உத்திகளில் சிறந்தவராக இருக்க வேண்டும். எந்த ஒருவருக்கும் கிரிக்கெட் வாழ்வின் காலக்கட்டத்தில் 3 வடிவங்களிலும் கவனம் செலுத்த முடியாது.

எனவே 3 வடிவத்திற்கும் வேறு வேறு கேப்டன்களை நியமிக்க வேண்டும். மற்ற நாடுகள் அப்படித்தான் செய்கின்றன” இவ்வாறு கூறினார் அசாருதீன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x