Last Updated : 27 Jul, 2016 04:39 PM

 

Published : 27 Jul 2016 04:39 PM
Last Updated : 27 Jul 2016 04:39 PM

விளையாட்டில் ஊக்க மருந்து சோதனை என்றால் என்ன? - சில அடிப்படைகள்

ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்யாவின் 67 தடகள வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய வீரர்கள் சிலர் மீதும் ஊக்கமருந்து விவகாரம் எழுந்துள்ள நிலையில் ஊக்க மருந்து சோதனைகள் குறித்த அடிப்படை தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

திறன் ஊக்குவிப்பு மருந்து என்பவை எவை?

எந்த ஒரு செயலிலும் நமது உடல் திறனை ஊக்குவித்து களைப்படையாமல் இருக்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் மருந்து ஊக்க மருந்து அல்லது ஆட்டத்திறன் ஊக்குவிப்பு மருந்து என்று அழைக்கப்படுகிறது. தசையின் வலுவை அதிகரிப்பது அல்லது தசை களைப்படைவதை மட்டுப்படுத்தும் மருந்துகள். இவற்றில் குறிப்பிடத்தகுந்தவை அன்பாலிக் ஸ்டெராய்டுகள், ஆண் ஹார்மோன் டெஸ்டொஸ்டெரோனின் செயற்கை மாதிரிகள் ஆகியவை, இவற்றுடன் ஸ்டெராய்ட் கலப்பில்லாத இபுபுரோஃபன் என்ற வலிநிவாரணை மருந்து. இதனை மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமலேயே மருந்துக் கடைகளிலிருந்து பெற முடியும். இது உடல் பயிற்சி அல்லது உடல் வேலைப்பளுவினால் ஏற்படும் அழற்சியை போக்கவல்லது.

ஒரு மருந்து திறன் ஊக்குவிப்பு மருந்தா என்று தீர்மானிப்பது யார்?

சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு கழகம் (WADA) உயர்மட்ட விளையாட்டுப்போட்டிகளில் ஊக்கமருந்து விவகாரத்தை கண்காணித்து வருகிறது. 1991-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தனித்த சர்வதேச அமைப்பாகும். இதற்கு சர்வதேச விளையாட்டு அமைப்புகளும் அது சார்ந்த நாடுகளும் நிதியளித்து வருகின்றன.

தேசியமட்டத்தில் தேசிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் உள்ளது. இது மத்திய அரசின் கையில் உள்ளது.

உலக ஊக்க மருந்து தடுப்புக் கழகத்தின் விதிமுறை என்ன?

அதாவது தடை செய்யப்பட்ட மருந்துகள் என்னென்ன? முறைகள் என்னென்ன? என்பதை இது விளக்கியுள்ளது.

இதில் ஸ்டெராய்டுகள், அனாபாலிக் மூலகங்கள், திறன் தூண்டிகள், மற்றும் மரபணு ஊக்கமருந்து. சில போதை வஸ்துக்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மது போன்றவை அந்தந்த போட்டியில் தடை செய்யப்படுபவை.

இந்த விதிமுறையில் சோதனை செய்வதற்கென்று சர்வதேச தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வீரர்களை சோதனைக்கு அழைப்பது, வீரர்களுக்கு சோதனை முடிவுகளை தெரிவிப்பது, மாதிரிகள் சேகரிப்பு, விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதா என்பது கறார் சோதனைகள் மூலம் அறியப்பட்டு உரிய முறையில் அதனை தெரிவிப்பது. ஊக்க மருந்து விதிமுறை மீறல்கள் என்று 10 விஷயங்களை பட்டியலிட்டுள்ளது வாடா. இதில் ஒன்றுக்கும் மேற்பட்ட மீறல்கள் விசாரணைக்குரியதாகும்.

10 விஷயங்கள் வருமாறு:

1.தடைசெய்யப்பட்டு மருந்து வீரர்களின் மாதிரியில் இருப்பது.

2. தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது அல்லது தடைசெய்யப்பட்ட முறையில் பயன்படுத்த முயற்சி செய்திருப்பது.

3. சோதனைக்கு அழைத்த பிறகு ரத்த/சிறுநீர் மாதிரிகளை அளிக்க மறுப்பது.

4.வீரர்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலை மறைப்பதும், சோதனையை மேற்கொள்ளாததற்கான காரணங்களை தெரிவிக்காமலும் இருப்பது.

5. ஊக்கமருந்து தடுப்பு நடைமுறையை எந்தவிதத்திலாவது சேதம் செய்ய முயல்வது.

6. தடைசெய்யப்பட்ட மருந்து அல்லது முறையை கைவசம் வைத்திருப்பது.

7. தடை செய்யப்பட்ட மருந்தை சட்ட விரோதமாக பெறுவது, அல்லது வேறொருவருக்கு அனுப்புவது.

8. தடை செய்யப்பட்ட மருந்தை வீரர் எடுத்துக் கொள்வது அல்லது எடுத்துக் கொள்ள முயற்சி செய்வது.

9. ஊக்கமருந்து தடுப்பு விதிமீறலில் கூட்டாளியாக இருந்திருப்பது.

10. தடை செய்யப்பட்ட தடகள வீரர் ஆதரவு நபருடன் இணைந்து பணியாற்றுவது.

விதிவிலக்குகள்:

வீரர் ஒருவர் தனது நீண்ட கால உடல் பிரச்சினைகளுக்கு சில மருந்துகளை எடுத்துக் கொண்டேயாக வேண்டிய நிலையில், வேறு மாற்று இல்லாத நிலையில் தடை செய்யப்பட்ட ஸ்டெராய்ட் உள்ளிட்ட மருந்துகளை அனுமதியுடன் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம். ஆனால் இந்த மருந்தின் பயனால் அவரது ஆட்டத்திறனில் கூடுதல் சாதகங்கள் ஏற்படக்கூடாது.

ஊக்கமருந்து விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்ட வீரர்கள் மேல்முறையீடு செய்யலாம், பி-சாம்பிளை மறு சோதனை செய்யவும் கோரலாம்.

ஊட்டச் சத்து அல்லது நோய்க்கால சத்து மருந்துகள்:

ஊட்டச்சத்து அல்லது நோய்க்கால சத்து மருந்துகள் தொடர்பான மருந்துகளை எடுத்துக்கொள்ள முழுதும் தடையில்லை. ஆனால் சில வேளைகளில் இத்தகைய ஊட்டச்சத்து மருந்துகளில் தடைசெய்யப்பட்ட மருந்து இருந்து அதனை உற்பத்தியாளர் தெரிவிக்காமல் இருக்கலாம். ஆனால் இதனை வாடா ஏற்காது. எனவே தடகள வீரர்களே இந்த விஷயத்தில் எது நல்லது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x