சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
Updated on
3 min read

அடுத்த மாதம் கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடைபெறும் ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை (2026) தொடர் ஓர் சுற்றுச்சூழல் பேரழிவு என்று சூழலியல் ஆர்வலர்கள், அமைப்புகள் பேசி வருகின்றன.

இது தொடர்பாக தி கார்டியன் ஊடக நிறுவனம் செய்திக் கட்டுரையில் கூறியுள்ளதாவது: 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர், அரசியல் சர்ச்சைகளுக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கும் பெயர் பெறப் போகும் தொடராக மாறியுள்ளது. இந்த தொடரால் வெளியேறும் மொத்த பசுமை இல்ல வாயுவின் (Green House Gases) அளவு முந்தைய உலகக் கோப்பை தொடரின் சராசரியை விட கிட்டத்தட்ட இரட்டிப்பாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் கணிப்புப்படி, இந்த உலகக் கோப்பை மூலம் சுமார் 9 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு (கரியமில வாயு) மற்றும் அதற்குச் சமமான நச்சு வாயுக்கள் வெளியேறும். இதில் விமானப் பயணங்களால் மட்டும் சுமார் 7.7 மில்லியன் டன் கார்பன் வெளியேறும் எனக் கூறப்படுகிறது. 2010 முதல் 2022 வரை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளுடன் ஒப்பிடும்போது இது நான்கு மடங்கிற்கும் அதிகமாகும். மோசமான சூழலில் விமானப் போக்குவரத்து மூலம் மட்டும் 13.7 மில்லியன் டன் வரை கரியமில வாயு வெளியேறலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

2026 உலகக் கோப்பை தொடரின் 9 மில்லியன் டன் கார்பன் வெளியேற்றத்தை, 2025-ம் ஆண்டு அமெரிக்கா மட்டும் வெளியிட்ட 5.9 பில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்துடன் ஒப்பிட்டால் இது குறைவாகத் தோன்றலாம். ஆனால், சுற்றுச்சூழலை பாதிக்கும் இந்த நடவடிக்கைகளை “பசுமை பாதுகாப்பு” என்ற பெயரில் நியாயப்படுத்துவது உண்மையில் ‘கிரீன்வாஷிங்’ எனப்படும் போலியான சுற்றுச்சூழல் நடிப்பாகவே பார்க்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பெரிய அளவில் பேசிக்கொண்டே, அதற்கான உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறுவதே இந்த கிரீன்வாஷிங் என விமர்சகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுவதாவது, ஃபிபா பல ஆண்டுகளாகவே கிரீன்வாஷிங்கின் முகமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய உதாரணமாக 2022 கத்தார் உலகக் கோப்பை குறிப்பிடப்படுகிறது. அப்போது ஃபிபா தலைவர் கியானி இன்ஃபாண்டினோ, ரசிகர்கள் “பூமிக்காக ஃபிபாவின் பச்சை அட்டையை உயர்த்துங்கள்” என்று வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிருமாறு அழைப்பு விடுத்தார். 2022 உலகக் கோப்பையை “கார்பன் நியூட்ரல்” தொடராக மாற்றுவதே இலக்கு என அவர் கூறியிருந்தார்.

ஆனால், உண்மையில் கத்தார் உலகக் கோப்பை மிகப்பெரிய கார்பன் வெடிகுண்டாகவே இருந்ததாக விமர்சகர்கள் கூறுகின்றனர். தினமும் ஆயிரத்துக்கும் அதிகமான விமானப் பயணங்கள் இயக்கப்பட்டன. கடல் நீரை குடிநீராக மாற்ற அதிக மின்சாரம் பயன்படுத்தும் உப்பு நீக்க முறைமைகள் பயன்படுத்தப்பட்டன. மேலும், சுற்றுச்சூழல் பாதிப்பை ஈடு செய்கிறோம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட கார்பன்-ஆஃப்செட் திட்டங்களும் பெரும்பாலும் போலியானவை என குற்றச்சாட்டு எழுந்தது.

போட்டி மைதானங்களுக்கான புல்விதைகள் கூட வட அமெரிக்காவில் இருந்து வெப்பநிலை கட்டுப்பாடு செய்யப்பட்ட விமானங்களில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது.

2026 உலகக் கோப்பை இதைவிட மோசமானதாக இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அதிகரித்து வரும் பசுமைக்குடில் வாயுக்கள் காரணமாக ஏற்படும் வெப்ப அலைகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் பலரின் உயிரையும் பறிக்கக்கூடும் என்பதால், இந்த உலகக் கோப்பையை “வரலாற்றிலேயே மிகவும் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டு நிகழ்வு” என்று அறிஞர் டிம் வால்டர்ஸ் விமர்சித்துள்ளார். இது ஃபிபாவின் மனித நேயமற்ற அணுகுமுறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2022 கத்தார் உலகக் கோப்பையில் மைதானங்கள் அனைத்தும் ஒன்றுக்கொன்று அருகருகில் அமைந்திருந்ததால் மெட்ரோ மற்றும் பேருந்து வசதிகள் மூலம் பயணிக்க முடிந்தது. ஆனால் 2026 உலகக் கோப்பையில் அணிகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் பயணம் செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. போஸ்னியா மற்ரும் ஹெர்செகோவினா (Bosnia and Herzegovina) அணி டொராண்டோவில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், பின்னர் சியாட்டில் வரை 5,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக பயணிக்க வேண்டியுள்ளது. அவர்களின் பயிற்சி முகாம் சால்ட் லேக் சிட்டியில் அமைந்துள்ளதால் கூடுதல் விமானப் பயணங்களும் தேவைப்படும். அல்ஜீரியா அணி கன்சாஸ் சிட்டியில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரை சுமார் 4,800 கிலோமீட்டர் பயணம் செய்ய உள்ளது. செக்கியா அணி குவாடலஹாராவில் தொடங்கி அட்லாண்டா வழியாக மெக்சிகோ நகரம் செல்லும் நிலையில் 4,500 கிலோமீட்டருக்கும் அதிகமான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கிடையில், ஃபிபா மற்றும் பெட்ரோலிய எண்ணெய் நிறுவனமான சவுதியின் ஆரெம்கோ இடையேயான ஒப்பந்தமும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கார்பன் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஆரெம்கோவுடன் 2024ஆம் ஆண்டு ஃபிபா நான்கு ஆண்டு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1965 முதல் உலகளாவிய கார்பன் வெளியீட்டில் 4 சதவீதத்திற்கும் அதிகமான பங்கை இந்த நிறுவனம் வகிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட பெண் கால்பந்து வீராங்கனைகள் திறந்த கடிதம் எழுதி கண்டனம் தெரிவித்தனர். கனடா மகளிர் அணித் தலைவர் ஜெஸி பிளெமிங் “ஆரெம்கோ இந்த பூமியின் மிகப்பெரிய மாசுபாடுகளில் ஒன்று. அவர்களின் ஆதரவை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்களின் பாதுகாப்பையும் பூமியின் எதிர்காலத்தையும் விட பணத்திற்கே ஃபிபா முக்கியத்துவம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

மேலும், காலநிலை மாற்றத்தால் உருவாகும் கடும் வெப்ப அலைகளும் இந்த உலகக் கோப்பையில் வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை, போட்டி நடைபெறும் இரண்டு மாதங்களிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வரலாற்றுச் சராசரியை விட அதிக வெப்பநிலை பதிவாகும் என எச்சரித்துள்ளது.

இந்த வெப்பத்தை சமாளிக்க ஃபிபா சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. அதிக வெப்பம் காணப்படும் நகரங்களில் நடைபெறும் பல போட்டிகள் மாலை அல்லது இரவு நேரங்களில் நடத்தப்பட உள்ளன. மேலும், ஒவ்வொரு போட்டியிலும் இரு பாதிகளிலும் தலா மூன்று நிமிட “நீர்ப்பான இடைவேளை” வழங்கப்படும் என்றும் ஃபிபா கடந்த டிசம்பரில் அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in