Published : 14 Nov 2013 07:56 AM
Last Updated : 14 Nov 2013 07:56 AM

சச்சினின் கடைசி டெஸ்ட்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்தியா

இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது.

இந்திய கிரிக்கெட்டில் 24 ஆண்டுகள் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்த மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு இது 200-வது டெஸ்ட் போட்டியாகும். இந்தப் போட்டியோடு அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறார். அதனால் இந்தப் போட்டி அவருக்கு மட்டுமின்றி, இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உணர்ச்சிபூர்வமான தருணமாகும்.

முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் வென்று மேற்கிந்தியத் தீவுகளை ஒயிட் வாஷ் ஆக்கி சச்சினுக்கு பிரமாண்டமான முறையில் பிரியா விடை கொடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த டெஸ்ட் இரு நாடுகளுக்கு இடையி லான போட்டியாக இருந்தாலும், சச்சின் மீதுதான் அனைவருடைய கவனமும் உள்ளது. இந்தியாவில் கிரிக்கெட் கடவு ளாகப் பார்க்கப்படும் சச்சின் தான் விளை

யாடிய காலம் முழுவதும் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய ரசிகர்களை மட்டு மின்றி உலக ரசிகர்களையும் வியக்க வைத்த

வர். 1989-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகி, இந்திய அணியில் ஜாம்பவான்கள் விட்டுச் சென்ற இடத்தை நிரப்பியதோடு, இனி யாராலும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கிவிட்டு விடைபெற இருக்கிறார் சச்சின்.

இந்திய அணி, ஷிகர் தவண், விராட் கோலி, சச்சின் டெண்டுல்கர், ரோஹித் சர்மா, கேப்டன் தோனி, அஸ்வின் என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை விரைவாக இழந்தபோதும், ரோஹித், அஸ்வின் இருவரும் சதமடித்து இந்தியா வலுவான ஸ்கோரை எட்ட உதவினர்.

அடுத்த ஆண்டு 13 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், ரோஹித் சர்மா டெஸ்ட் அணியில் நிரந்தர இடம்பிடிப்பதற்கு இந்தப் போட்டி அவருக்கு நல்ல வாய்ப்பாக அமையும். கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் இந்திய அணி வலுவான ஸ்கோரை குவிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

வேகப்பந்து வீச்சில் முகமது சமி இந்திய அணியின் மிகப்பெரிய துருப்புச் சீட்டாகத் திகழ்கிறார். அவர் கடந்த போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியை சரிவுக்குள்ளாக்கினார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாரும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சுழற்பந்து வீச்சில் அஸ்வின், பிரக்யான் ஓஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் இருக்காது. முதல் போட்டியில் விளையாடிய அதே அணியே இந்தப் போட்டியிலும் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் கவலையளிப்பதாக உள்ளது. அந்த அணியில் கிறிஸ் கெயில், டேரன் பிராவோ, டியோநரைன், சந்தர்பால் என வலுவான பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், கடந்த போட்டியில் சாமுவேல்ஸைத் தவிர வேறு யாரும் அரை சதமடிக்கவில்லை. சந்தர்பாலுக்கு இந்தப் போட்டி 150-வது டெஸ்ட் போட்டியாகும்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கெமர் ரோச் காயம் காரணமாக விலகிவிட்ட நிலையில், டினோ பெஸ்ட், காட்ரெல் போன்றோரையே நம்பியுள்ளது மேற்கிந்தியத் தீவுகள். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷேன் ஷில்லிங்ஃபோர்டு, வீராசாமி பெருமாள் ஆகியோர் மட்டுமே அந்த அணிக்கு ஆறுதல் அளிக்கின்றனர். கடந்த போட்டியில் ஓர் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷில்லிங்ஃபோர்டு இந்தப் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.

சதமடிப்பாரா சச்சின்?

தனது சொந்த ஊரான மும்பையில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் சச்சின், தனக்கு மட்டுமின்றி தனது ரசிகர்க ளுக்கும் இந்தப் போட்டியை மறக்க முடியாததாக மாற்றும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பார். ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது சதமடித்தார். அதேபோன்று சச்சினும் இந்தப் போட்டியில் சதமடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் போட்டி அவருக்கு மறக்க முடியாத போட்டியாக இருக்க வேண்டும் என அனைத்து ரசிகர்களும் பிரார்த்தித்து வருகின்றனர்.

கவாஸ்கர் சாதனையை சமன் செய்கிறார் சச்சின்

மும்பை வான்கடே மைதானத்தில் சச்சின் விளையாடவுள்ள 11-வது டெஸ்ட் போட்டி இது. இதன்மூலம் மும்பையில் அதிக டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் என்ற சாதனையை முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கருடன் பகிர்ந்து கொள்வார் சச்சின்.

இந்த மைதானத்தில் கவாஸ்கர் 11 போட்டிகளில் விளையாடி 1122 ரன்களைக் குவித்துள்ளார். சச்சின் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 847 ரன்களைக் குவித்துள்ளார். சச்சின் தனது கடைசிப் போட்டியில் 275 ரன்கள் எடுக்கும்பட்சத்தில் வான்கடேவில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையையும் கவாஸ்கருடன் பகிர்வார்.

மைதானம் எப்படி?

மும்பையில் இந்திய அணி 1975 முதல் 2012 வரை மொத்தம் 23 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 9-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. 7 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 2000 முதல் 2012-ம் ஆண்டு வரை இந்தியா இங்கு விளையாடிய 7 போட்டிகளில் 4-ல் தோல்வி கண்டுள்ளது. 2-ல் வெற்றி கண்டுள்ளது. சச்சின் இங்கு ஒரு சதம் மட்டுமே அடித்துள்ளார். அவர் கடைசியாக இங்கு விளையாடிய 5 போட்டிகளில் 245 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

இந்தியா: மகேந்திர சிங் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அஸ்வின், புவனேஸ்வர் குமார், பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா, அஜிங்க்ய ரஹானே, உமேஷ் யாதவ், முகமது சமி, ரோஹித் சர்மா, இஷாந்த் சர்மா.

மேற்கிந்தியத் தீவுகள்: டேரன் சமி (கேப்டன்), டினோ பெஸ்ட், சிவநாராயண் சந்தர்பால், ஷெல்டான் காட்ரெல், நர்சிங் டியோநரைன், கிர்க் எட்வர்ட்ஸ், கிறிஸ் கெயில், வீராசாமி பெருமாள், கிரண் பாவெல், தினேஷ் ராம்தின், ஷெனான் கேப்ரியேல், மார்லான் சாமுவேல்ஸ், ஷேன் ஷில்லிங்ஃபோர்டு, சாத்விக் வால்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x