Published : 23 Jun 2017 02:53 PM
Last Updated : 23 Jun 2017 02:53 PM

ஒரு கிரிக்கெட் வீரராக கும்ப்ளே மீது முழு மரியாதை உள்ளது: பிரச்சினை குறித்து கோலி நழுவல் பதில்

அனில் கும்ப்ளே ராஜினாமா செய்ததற்கு தன்னுடைய பங்கு குறித்து எவ்வித கருத்தையும் கூற மறுத்த விராட் கோலி ஒரு கிரிக்கெட் வீரராக அனில் கும்ப்ளே மீது தனக்கு முழு மரியாதை உள்ளது என்று கூறியுள்ளார்.

மே.இ.தீவுகளுக்கு எதிராக இன்று தொடங்கும் முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, “அனில் (பாய்) தன்னுடைய பார்வைகளை வெளிப்படுத்தி ராஜினாமா செய்துள்ளார். அவருடைய முடிவை நாங்கள் மதிக்கிறோம். சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.

கும்ப்ளேவுடன் என்னதான் பிரச்சினை என்று மீண்டும் மீண்டும் கேட்ட போது கூட ஓய்வறையில் நடக்கும் விஷயங்களை வெளியே தெரிவிப்பது நாகரிகமல்ல என்ற பண்பாட்டை தொடர்ந்து காக்க வேண்டும் என்று கூறினார் கோலி, “சாம்பியன்ஸ் டிராபியின் போது நான் 11 செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டேன். கடந்த 3-4 ஆண்டுகளாக நாங்கள் வளர்த்தெடுத்த பண்பாடு என்னவெனில் ஓய்வறையில் எது நடந்தாலும் ஓய்வறையின் புனிதத்தைக் காப்பதாகும். இதைத்தான் முழு அணியும் நம்புகிறது. எங்களுக்கு இது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை மதிக்கிறேன். தொடர்ந்து புனிதத்தைக் காப்போம்” என்றார்.

தனது பயிற்சி முறையில் கோலிக்கு கருத்து மாறுபாடுகள் இருந்ததாக கும்ப்ளே தெரிவித்துள்ளாரே என்று கேட்ட போது, “அது அவரது கருத்து, அவரது பார்வை அதனை நான் மதிக்கிறேன். ஒரு கிரிக்கெட் வீரராக அனில் மீது எனக்கு முழு மரியாதை உள்ளது. நாட்டுக்காக அவர் செய்த சாதனைகளையும் பெரிதும் மதிக்கிறேன். இதனை அவரிடமிருந்து எடுத்து விட முடியாது. நாங்கள் அனைவருமே அவரை மிகவும் மதிக்கிறோம்” என்றார்.

கும்ப்ளேயின் பயிற்சி முறை அணியை எதிர்மறையாக பாதித்ததா என்ற கேள்விக்கு, “நான் முன்னமேயே கூறியது போல் ஓய்வறையின் புனிதத்தை பராமரிக்க விரும்புகிறேன். ஓய்வறையில் என்ன நடக்கிறதோ அது புனிதமானது, எங்களது தனிப்பட்ட, அந்தரங்க விஷயங்கள். இதனை பொதுவெளியில் நான் வெளிப்படுத்தப் போவதில்லை. அவரது கருத்து உள்ளது, அதனை நாங்கள் மதிக்கிறோம் அவ்வளவே” என்று பிடிகொடுக்காமல் நழுவினார் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x