Published : 08 Jan 2017 11:11 AM
Last Updated : 08 Jan 2017 11:11 AM

சிட்னி டெஸ்ட் போட்டி: பாகிஸ்தான் படுதோல்வி; தொடரை 3-0 என முழுமையாக வென்றது ஆஸ்திரேலியா

கடைசி டெஸ்ட் போட்டியிலும் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்தி ரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமை யாக கைப்பற்றியது.

சிட்னியில் நடைபெற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 538 ரன்களும் பாகிஸ்தான் அணி 315 ரன்களும் எடுத்தன.

223 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. உஸ்மான் கவாஜா 79, டேவிட் வார்னர் 55, ஸ்டீவ் ஸ்மித் 59 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து 465 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்தது.

ஷர்ஜீல்கான் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அசார் அலி 11, யாஷிர் ஷா 3 ரன்களுடன் களத்தில் இருந்தனர். கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு 410 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை பாகிஸ்தான் அணி விளையாடியது.

அசார் அலி 11, பாபர் அசாம் 9, யூனுஸ்கான் 13, யாஷிர் ஷா 9, ஆஷாத் ஷபிக் 30, மிஸ்பா உல்-ஹக் 38, வகாப் ரியாஸ் 12, முகமது அமீர் 5, இம்ரான் கான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 80.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

சர்ப்ராஸ் அகமது 72 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசல்வுட், ஓ கெபி ஆகியோர் தலா 3 விக்கெட்களும், நாதன் லயன் 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

220 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக 3-0 என வென்றது. முதல் டெஸ்ட்டில் 39 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றி ருந்தது குறிப்பிடத்தக்கது. ஆட்ட நாயகனாக வார்னரும், தொடர் நாயகனாக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தும் தேர்வானார்கள்.

ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்திப்பது இது 12-வது முறையாகும். அந்த அணி கடைசியாக 22 வருடங்களுக்கு முன் சிட்னியில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்றிருந்தது.

முதல் இன்னிங்ஸில் 175 ரன்கள் சேர்த்த, 39 வயதாகும் யூனுஸ்கான் டெஸ்ட் போட்டிகளில் பத்தாயிரம் ரன்கள் மைல் கல் சாதனை படைக்கத் தவறினார். இதுவரை அவர் 115 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,977 ரன்கள் குவித்துள்ளார்.

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் இடையே 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 13-ம் தேதி பிரிஸ்பனில் நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x