Published : 22 Jan 2014 03:33 PM
Last Updated : 22 Jan 2014 03:33 PM

நியூஸிலாந்திடம் 2-வது தோல்வி: நெ.1 இடத்தை இழந்தது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.

நியூஸிலாந்தின் ஹாமில்டனில் புதன்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டதால் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது. டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 42 ஓவர்களில் 293 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 41.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் ஆட்டத்தில் விளையாடிய அதே அணியோடு களமிறங்கிய கேப்டன் தோனி டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த நியூஸிலாந்து அணியில் ஜெஸ்ஸி ரைடரை 20 ரன்களில் வெளியேற்றினார் முகமது சமி.

மழை குறுக்கீடு

இதையடுத்து மார்ட்டின் கப்டிலுடன் இணைந்தார் கேன் வில்லியம்சன். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. அந்த அணி 17 ஓவர்களில் 98 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கிய போது மார்ட்டின் கப்டிலை வெளியேற்றினார் ரெய்னா. 65 பந்துகளைச் சந்தித்த கப்டில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்தார். அப்போது நியூஸிலாந்து 20.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்திருந்தது. கப்டில்-வில்லியம்சன் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 89 ரன்கள் சேர்த்தது.

இதன்பிறகு ராஸ் டெய்லர் களம்புகுந்தார். மறுமுனையில் அசத்தலாக ஆடிய வில்லியம்சன் 52 பந்துகளில் அரைசதம் கண்டார். நியூஸிலாந்து 33.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் சுமார் 2 மணி நேரம் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து ஆட்டம் 42 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது வில்லியம்சன் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 87 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

ஆண்டர்சன் விளாசல்

இதையடுத்து கோரே ஆண்டர்சன் களம்புகுந்தார். அவர் கடந்த போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் வெளுத்துக் கட்டினார். வந்தவேகத்தில் பவுண்டரியை விளாசி ரன் கணக்கைத் தொடங்கிய ஆண்டர்சன், சமி வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார். மறுமுனையில் அவருக்கு இணையாக ஆடிய டெய்லர், புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி அரைசதம் கண்டார்.

அதைத்தொடர்ந்து அஸ்வின், இஷாந்த் சர்மா ஓவர்களில் தலா இரு சிக்ஸர்களை விளாசிய ஆண்டர்சன் 17 பந்துகளில் 5 சிக்ஸர், இரு பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த கேப்டன் மெக்கல்லம் டக் அவுட்டாக, மறுமுனையில் ராஸ் டெய்லர் 57 ரன்களில் (56 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன்) வெளியேறினார். இதன்பிறகு வந்த நாதன் மெக்கல்லம் 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். விக்கெட் கீப்பர் லியூக் ரோஞ்சி 10 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க, நியூஸிலாந்து 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் குவித்தது.

கடைசி 8 ஓவர்களில் மட்டும் நியூஸிலாந்து அணி 97 ரன்கள் குவித்தது. அதில் 35 முதல் 39-வது ஓவர்கள் வரையிலான 5 ஓவர்களில் மட்டும் 75 ரன்கள் கிடைத்தன. இந்தியத் தரப்பில் முகமது சமி 7 ஓவர்களில் 55 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சொதப்பிய தொடக்கம்

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 42 ஓவர்களில் 293 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணியில் இந்த முறையும் ரோஹித் சர்மா-ஷிகர் தவண் ஜோடி சொதப்பியது. மிகப்பெரிய இலக்கை எட்ட வேண்டிய நிலை யிலும் ஆமை வேகத்தில் ஆடினர். ஷிகர் தவண் 12, ரோஹித் சர்மா 20 ரன்களில் வெளியேறினர்.

விராட் கோலி விளாசல்

எனினும் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலியும், அஜிங்க்ய ரஹானேவும் சிறப்பாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். ரஹானே நிதானமாக ஆட, கோலி வழக்கம்போல் அதிரடியாக விளையாடினார். இதனால் 19.4 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது இந்தியா. தொடர்ந்து வேகம் காட்டிய கோலி, 41 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார். இது அவருடைய 29-வது அரைசதமாகும்.

இந்தியா 127 ரன்களை எட்டிய போது ரஹானே ஆட்டமிழந்தார். அவர் 42 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் எடுத்தார். ரஹானே-கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து ரெய்னாவை களமிறக்காமல் கேப்டன் தோனி களம்புகுந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கோலி 78 ரன்கள் எடுத்திருந்தபோது மிட் விக்கெட் திசையில் சப்ஸ்டியூட் வீரர் தேவ்சிச்சிடம் கேட்ச் ஆனார். அவர் 65 பந்துகளில் 2 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

தோனி 52-வது அரைசதம்

இதையடுத்து தோனியுடன் இணைந்தார் ரெய்னா. முந்தைய போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்கிய ரெய்னா, இந்த முறை 6-வது வீரராக பேட் செய்ய வந்தார். அவர் 4-வது இடத்தில் விளையாடியதைவிட 6-வது இடத்தில் மிகுந்த நம்பிக்கையோடு ஆடினார். தோனியும், ரெய்னாவும் அதிரடியாக விளையாட 33 ஓவர் களில் 200 ரன்களை எட்டியது இந்தியா. வேகமாக விளையாடிய ரெய்னா 22 பந்துகளில் 6 பவுண்டரி களுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமி ழக்க, இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அப்போது இந்தியாவின் வெற்றிக்கு 35 பந்துகளில் 71 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.

இதையடுத்து தோனியுடன் இணைந்த ஜடேஜா, சிக்ஸர் அடித்து ரன் கணக்கைத் தொடங்கினார். தோனி 39 ரன்களில் இருந்தபோது ஆண்டர்சன் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச்சை டிம் சௌதி கோட்டைவிட, அது பவுண்டரியானது. அந்த ஓவரின் அடுத்த பந்திலும் பவுண்டரி அடித்த தோனி, டிம் சௌதி வீசிய அடுத்த ஓவரில் சிக்ஸர் அடித்து 52-வது அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் 42 பந்துகளில் அரைசதம் கண்டார்.

தகர்ந்தது வெற்றி

எனினும் இந்தியா 257 ரன்களை எட்டியபோது தோனி ஆட்டமிழக்க, வெற்றிக் கனவு தகர்ந்தது. தோனி 44 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்தார். இதன்பிறகு ஜடேஜா 12, அஸ்வின் 5, புவனேஸ்வர் குமார் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்தியா 41.3 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததைத் தொடர்ந்து ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியூஸிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.

நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 4 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கேன் வில்லியம்சன் ஆட்டநாயக னாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது நியூஸிலாந்து. 3-வது போட்டி வரும் 25-ம் தேதி ஆக்லாந்தில் நடைபெறுகிறது. அது இந்தியாவுக்கு வாழ்வா, சாவா ஆட்டமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x