Published : 12 Apr 2017 04:10 PM
Last Updated : 12 Apr 2017 04:10 PM

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான திறமை பெற்ற வீரர்கள் இலங்கையில் இல்லை: முத்தையா முரளிதரன்

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடுவதற்கான திறமை கொண்ட இலங்கை வீரர்கள் தற்போது இல்லை என்று மாஸ்டர் ஸ்பின்னர் முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பவுலிங் பயிற்சியாளராக செயலாற்றி வரும் முரளிதரன் கூறியதாவது:

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில ஆடுமளவுக்கு திறமை கொண்ட வீரர்கள் இலங்கையில் இல்லை. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்காவிலிருந்து நிறைய திறமையான வீரர்கள் ஆடிவருகின்றனர். மொத்தம் 32 அயல்நாட்டு வீரர்கள் ஆடலாம், ஆனால் இதில் இலங்கை வீரர்கள் இந்தத் தரத்திற்கு இல்லை என்பதுதான் உண்மை.

அணி உரிமையாளர்கள் இலங்கை வீரர்கள் குறித்த முந்தைய கணிப்பில் இப்போது இல்லை. எனவே இப்போதைய இலங்கை வீரர்கள் நிறைய அனுபவம் பெற்றால் ஒருவேளை ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக இலங்கை வீரர்கள் ஆட முடியும்.

இலங்கையில் பெரிய வீரர்கள் இருந்தனர், ஆனால் அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். எனவே தற்போது ஆடும் புதிய வீரர்கள் தங்களை பெரிய அளவில் நிறுவும் வரையில் ஐபிஎல்-ல் நுழைவது கடினம். வேறு அனுபவ வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் போது ஐபிஎல் அணி உரிமையாளர்கள் ஏன் இலங்கை வீரர்களை தேர்வு செய்ய வேண்டும்?

டி20 கிரிக்கெட் உலகம் முழுதும் இளம் வீரர்களை ஈர்க்கிறது. டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை வயதானவர்கள் பார்க்கும் போது, டி20 கிரிக்கெட்டை இளைஞர்களே பெரும்பாலும் விரும்புகின்றனர். பெரிய அளவு பணமும் வீரர்களுக்கு உற்சாகமூட்டுகின்றன.

90களை விட கிரிக்கெட் இப்போது பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. ஒருநாள் போட்டிகளில் அப்போதெல்லாம் 220 ரன்கள் வெற்றிக்கான ஸ்கோராகும். ஆனால் இன்றோ 350 ரன்கள் எடுத்தாலும் வெற்றியை உறுதி செய்ய முடியவில்லை. தலைமுறைகளை நாம் ஒப்பிட முடியாது, அடுத்த 10 ஆண்டுகளில் மேலும் தீவிரமான மாற்றங்கள் வரலாம்.

எந்த ஒரு டி20 தொடரிலும் இந்திய வீரர்கள் ஆடவில்லை என்றால் அது பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை. அனைவரும் இந்தியவீரர்கள் வேண்டும் என்று நினைக்கின்றனர், ஆனால் இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லை என்றால் மிகப்பெரிய டி20 தொடராக இருந்தாலும் சோபிக்க முடியாது.

இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x