Published : 21 Jun 2016 09:38 AM
Last Updated : 21 Jun 2016 09:38 AM

யூரோ கால்பந்து தொடரில் அல்பேனியாவுக்கு முதல் முறையாக வெற்றி: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் ஏ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ருமேனியா-அல்பேனியா அணிகள் மோதின. 43-வது நிமிடத்தில் அல்பேனியாவின் அர்மான்ட் சடிகு முதல் கோலை அடித்தார். லெடியன் மெமுஷாஜிடம் இருந்து கிராஸை பெற்ற அர்மான்ட் சடிகு, ருமேனியா கோல்கீப்பர் சிப்ரியனின் தடுப்பை மீறி கோல் அடித்து அசத்தினார்.

பெரிய தொடர் ஒன்றில் அல்பேனியா அடித்த முதல் கோல் இதுதான். இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா முன்னிலை வகித்தது.

இதற்கு பதில் கோல் திருப்ப இரண்டாவது பாதியில் ருமேனியா வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் அல்பேனியா வெற்றி பெற்றது. பெரிய தொடரில் அல்பேனியா பெற்ற முதல் வெற்றி யாக இது அமைந்தது. இந்த போட்டி யில் 62 சதவீத நேரம் ருமேனியா தான் பந்தை கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. ஆனாலும் அர்மான்ட் சடிகு அடித்த கோல் ருமேனியாவை வீழ்த்துவதற்கு போதுமானதாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு அல்பேனியா முன்னேறுவதற்கு சிறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. அல்பேனியா 3 ஆட்டத்தில் இரு தோல்வி, ஒரு வெற்றியுடன் 3 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் இருந்து பிரான்ஸ் 7 புள்ளிகளுடனும், சுவிட்சர்லாந்து 5 புள்ளிகளுடனும் முதல் இரு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை அடிப்படையில் அல்பேனியா நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு கிடைத்துள்ளது. நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற மற்ற பிரிவில் உள்ள அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்கிறது அல்பேனியா.

சுவிட்சர்லாந்து அசத்தல்

லில்லி நகரில் ஏ பிரிவில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் தொடரை நடத்தும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. பிரான்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களிலும் ருமேனியா, அல்பேனியா அணிகளை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றிருந்தது. சுவிட்சர்லாந்து அணி டிரா செய்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையில் இந்த ஆட்டத்தை சந்தித்தது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கோலின்றி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கோல் அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை பிரான்ஸ் வீணடித்தது. இருமுறை அந்த அணி வீரர்கள் அடித்த பந்து கோல்கம்பத்தின் கம்பியில் பட்டு வெளியே சென்றது. போக்பா அடித்த பந்தை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் தடுத்து நிறுத்தினார். அடுத்த முறை 25 யார்டு தூரத்தில் இருந்து அவர் அடித்த பந்து கோல் கம்பத்தின் மீது பட்டு வெளியே சென்று ஏமாற்றம் அளித்தது.

முதல் இரு ஆட்டங்களிலும் கோல் அடித்து அசத்திய பயெட், 63-வது நிமிடத்தில் மவுஸாவிடம் இருந்து பெற்ற பாஸை இலக்கை நோக்கி அடித்தார். ஆனால் பந்து கோல்கம்பத்துக்கு வெளியே சென்றது.

இந்த போட்டி டிரா ஆனதால் ஏ பிரிவில் 7 புள்ளிகளுடன் பிரான்ஸ் முதல் இடத்தையும், 5 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்து இரண்டாவது இடத்தையும் பிடித்து நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. யூரோ கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்து அணி முதல்முறையாக நாக் அவுட் சுற்றுக்கு தற்போது தான் முன்னேறி உள்ளது.

நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ் அணி சி, டி அல்லது இ பிரிவில் 3-வது இடம் பிடிக்கும் அணியுடன் மோதும். அதேவேளையில் சுவிட்சர்லாந்து அணி நாக் அவுட் சுற்றில் ஜெர்மனி, போலந்து அல்லது வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகளில் ஏதாவது ஒரு அணியை எதிர்கொள்ளும்.

இன்றைய ஆட்டங்கள்

வடக்கு அயர்லாந்து - ஜெர்மனி

நேரம்: இரவு 9.30

உக்ரைன் - போலந்து

நேரம்: இரவு 9.30

குரோஷியா - ஸ்பெயின்

நேரம்: நள்ளிரவு 12.30

செக்குடியரசு-துருக்கி

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x