Last Updated : 28 Feb, 2017 09:10 PM

 

Published : 28 Feb 2017 09:10 PM
Last Updated : 28 Feb 2017 09:10 PM

தொடரை வலுப்படுத்திக்கொள்ள விராட் கோலியை தொடர்ந்து விரைவில் வீழ்த்துவோம்: மிட்செல் ஸ்டார்க்

விராட் கோலி, பெரிய அளவில் வலிமையாக மீண்டு வருவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட்கள் சரிவுக்கான வேட்டையை தொடங்கி வைத்தவர் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்தான். அவர் ஒரே ஓவரில் புஜாரா (6), விராட் (0) கோலியை ஆட்டமிழக்க செய்தார்.

இதன் பின்னரே சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீவ் கீஃப் தனியொருவராக ஆட்டத்தை கையில் எடுக்க, இந்திய அணி வீழ்ச்சியை சந்தித்தது. முதல் இன்னிங்ஸில் 105, 2-வது 107 ரன்கள் மட்டுமே இந்திய அணியால் சேர்க்க முடிந்தது. ஸ்டீவ் கீஃப் 12 விக்கெட்கள் வீழ்த்த, ஆஸ்திரேலிய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியுடன் ஆட்டத்தை 3 நாட்களிலேயே முடித்தது.

சமீபகாலமாக உச்சக்கட்ட பார்மில் இருந்த விராட் கோலி, புனே டெஸ்ட்டில் எடுத்த ரன்கள் 0 மற்றும் 13 மட்டுமே. முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் ஆப் ஸ்டெம்புகளுக்கு வெளியே அகலமாக வீசிய பந்தை அடிக்க முயன்று முதல் சிலிப்பில் நின்ற ஹேண்ட்ஸ்கம்பிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அவர் வீழ்ந்த பிறகுதான் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் மற்ற வீரர்கள் விரைவிலேயே மூட்டை கட்டினர். இந்நிலையில் விராட் கோலி, பெரிய அளவில் வலிமையாக மீண்டு வருவார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

விராட் கோலியின் விக்கெட், தொடரின் எஞ்சிய ஆட்டங்களிலும் மிக முக்கியமானது என எங்களுக்கு தெரியும். நாங்கள் தொடரை வலுப்படுத்திக்கொள்ள, அவரை மேலும் 6 முறை விரைவிலேயே ஆட்டமிழக்க செய்ய வேண்டும்.

கோலி பெரிய அளவில் வலிமையாக மீண்டு வருவார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் மட்டுமில்லாது புஜாரா மீதும் கவனம் வைத்துள்ளோம். கோலி தரம்வாய்ந்த வீரர். இந்த ஆண்டில் அவர் மலைபோல் ரன்களை குவித்துள்ளார். அவர் மீண்டு வரும்போது நாங்கள் மிகுந்த எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.

நாங்கள் நினைத்தபடி முதல் டெஸ்ட் போட்டி அமைந்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிதான். ஆனால் ஒரு போட்டியில் கிடைத்த வெற்றி மட்டும் தொடரை வெல்வதற்கு போதாது என்பது எங்களுக்கு தெரியும். இன்னும் நடைபெற உள்ள 3 போட்டிகளுமே முக்கியமானது தான்.

இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் கூறினார்.

ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கோலியுடன், மிட்செல் ஸ்டார்க் இணைந்து விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x