Published : 17 Oct 2014 05:10 PM
Last Updated : 17 Oct 2014 05:10 PM

நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி

வீரர்கள் சம்பள விவகாரம் பூதாகாரமாக வெடிக்க, மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. தற்போது நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியே இந்தத் தொடரின் கடைசி போட்டி.

மேற்கிந்திய வீரர்கள் சங்கம், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட வீரர்கல் சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்தத் தகவலை மேற்கிந்திய அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று தெரிவித்தது.

இதனால் வேறொரு அணியை விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த அணி இலங்கையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் இது பற்றிக் கூறும்போது, “மேற்கிந்திய அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது. இது பற்றி அந்த அணியின் நிர்வாகி ரிச்சி ரிச்சர்ட்சனிடமிருந்து இ-மெயில் வரப்பெற்றோம்” என்றார்.

மேற்கிந்திய அணி வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரும், செயலதிகாரியுமாக இரட்டை பதவி வகிக்கும் வேவல் ஹிண்ட்ஸ், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் ஊதியத்தில் பெரும் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

அதாவது வீரர்களை ஆலோசிக்காமல் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு டிவைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வீரர்களின் தனிப்பட்ட ஸ்பான்சர்கள் விவகாரத்திலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

இதனை எதிர்த்து மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இருதரப்பினருக்கு இடையிலும் கசப்பான வசை மின்னஞ்சல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இதனையடுத்து தற்போதைய இந்திய தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்ப முடிவெடுத்துள்ளது மேற்கிந்திய அணி. இது குறித்து பிசிசிஐ அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்று தொடரைப் பாதியிலேயே நிறுத்துவதால் ஏற்படும் நஷ்டம் மற்றும் பல விவகாரங்கள் குறித்து ஐசிசி-யிடம் முறையீடு செய்யவுள்ளது பிசிசிஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x