Published : 19 Jun 2016 03:06 PM
Last Updated : 19 Jun 2016 03:06 PM

இந்திய பேட்டிங் குறித்த ஹர்பஜனின் ஜோக்: பகிர்ந்து கொண்ட முரளி கார்த்திக்

இந்திய அணியிலேயே மிகவும் நகைச்சுவை உணர்வு வாய்ந்தவர் ஹர்பஜன் சிங் என்று கூறப்படுவதுண்டு. சக வீரர்கள் பற்றியும் சில வேளைகளில் அணி பற்றியுமே அவர் தனது நகைச்சுவைக் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அதேபோல் அவர் மற்ற வீரர்கள் போல் அப்படியே மிமிக்ரி செய்வதிலும் வல்லவர் என்று கூறப்படுவதுண்டு.

2005ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் கங்குலி தலைமை இந்திய அணி, நியூஸிலாந்து, ஜிம்பாப்வே பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் நடந்தது. இதில் நியூஸிலாந்துக்கு எதிராக இந்தியா மோசமான தோல்வியைச் சந்தித்தது. நியூஸிலாந்து அணியை 215 ரன்களுக்கு மட்டுப்படுத்திய பிறகு இந்திய அணி 44 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து மோசமான ஒருநாள் தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலையில் அப்போது ஜே.பி.யாதவ் (69), இர்பான் பத்தான் (50) இணைந்து ஸ்கோரை 164 ரன்கள் வரை உயர்த்தி, தோற்றாலும் ஒரு கவுரவத்தை நிலைநாட்டினர்.

இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து இந்திய அணியினர் மகிழ்ச்சியைத் தொலைத்து முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு தங்கள் வருத்தத்தை காட்டியபடி இருந்துள்ளனர்.

இந்தப் போட்டியின் போது ஓய்வறையில் இருந்த முரளி கார்த்திக் அப்போது ஹர்பஜன் சிங் அடித்த ஜோக் ஒன்றை சமீபத்தில் முரளி கார்த்திக் விக்ரம் சாத்தேயின் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார்.

“நாங்கள் மோசமாக தோற்றதை நினைத்து வருந்திய முகத்துடன் அமர்ந்திருந்தோம். அப்போது ஹர்பஜன் சிங் திடீரென எழுந்து, அனைவரையும் பார்த்து நாங்கள் வைத்திருக்கும் பேட்களை எடுங்கள் என்றார் பிறகு அந்த மட்டைகளை எண்ணத் தொடங்கினார். நாங்கள் 15 பேர், மொத்தம் 110 பேட்கள் எங்களிடம் இருந்தது, அதனை எண்ணிய ஹர்பஜன் சிங், ‘நாம அடிச்ச ரன்களை விட நம்ம கிட்ட பேட்கள் அதிகமா இருக்கு’ என்றாரே பார்க்கலாம். உடனே ஓய்வறையில் அனைவருமே வாய்விட்டுச் சிரித்து விட்டனர். அந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு முன்னேறினோம் ஆனால் நியூஸிலாந்திடம் தோல்வியடைந்தோம்” என்றார் முரளி கார்த்திக்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x