Last Updated : 28 Oct, 2014 02:45 PM

 

Published : 28 Oct 2014 02:45 PM
Last Updated : 28 Oct 2014 02:45 PM

தொடரைக் கைவிடும் முடிவை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: மர்லன் சாமுயெல்ஸ்

இந்தியாவுக்கு எதிரான தொடரை பாதியிலேயே கைவிடும் முடிவுக்கு நான் ஆதரவளிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மென் மர்லன் சாமுயெல்ஸ் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அணி எந்த முடிவெடுத்தாலும் அதற்கு சாமுயெல்ஸ் கட்டுப்படுவதாக கேப்டன் பிராவோ தெரிவித்ததை சாமுயெல்ஸ் கடுமையாக மறுத்துள்ளார்.

"நான் அவ்வாறு கூறவில்லை, தொடரைக் கைவிடும் முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று நான் கூறவில்லை. ஏனெனில் ஒருவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, இந்த விவகாரத்தில் தனி நபர் எடுக்கும் முடிவுதான் இறுதியாக இருக்கும் என்பதுதானே சரியாக இருக்க முடியும்? ஓய்வறையில் இருந்த எந்த ஒரு வீரரும் கைவிடும் முடிவு குறித்து எதுவும் கூறவில்லை. நான் மட்டும்தான் கேள்வி கேட்டேன், அதற்கு எனக்குக் கிடைத்த பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை.

நான் திருப்தி அடைந்திருந்தால் நான் உடனே கைவிடும் முடிவு குறித்து ஆதரித்து முதலில் வெளிப்படையாக தெரிவித்திருப்பேன். ஏனெனில் எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது. பிராவோ கூறியது அனைத்தும் சரி, அதற்கு என் முழு ஆதரவு என்று கூறியிருப்பேன்.

இந்தியாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது நம் பிரச்சினை, ஆகவே முதலில் தொடரை முடித்து விடுவோம், பிறகு நாடு திரும்பி இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

இந்தியா போன்ற பெரிய அணியுடன் மே.இ.தீவுகள் ஆடியிருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்தியாவுடனான உறவு மிகப்பெரிய விஷயம், அது ஒரு பிரமாதமான உறவு.

இரு அணி வீரர்களும் மைதானத்தில் ஒருவரையொருவர் கடிந்து பேசிக்கொள்வதில்லை. ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா என்றால் இவ்வாறு இருக்காது. மேற்கிந்திய தீவுகளில் நிறைய இந்தியர்கள் இருக்கின்றனர். குடும்பம் போல்தான் நம் உறவு.

இந்த அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் வீரர்கள் சங்கத் தலைவர் வேவல் ஹைண்ட்ஸ், ஆனால். இங்கு ஒன்றைக் கூறிவிடுகிறேன், நான் வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவன் அல்ல” என்றார் மர்லன் சாமுயெல்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x