Published : 09 Jun 2017 10:20 AM
Last Updated : 09 Jun 2017 10:20 AM

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: நியூஸிலாந்து - வங்கதேசம் இன்று பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று வங்கதேச அணியுடன் நியூஸிலாந்து அணி மோதுகிறது. அரையிறுதி சுற்று வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் உள்ளன.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வலுவான அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட நியூஸிலாந்து அணி, முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் நிலையில் இருந்தது. ஆனால் துரதிருஷ்ட வசமாக இப்போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 87 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தோற்றது. இதன் காரணமாக நியூஸிலாந்து அணி, ‘ஏ’ பிரிவில் 1 புள்ளியை மட்டுமே பெற்று 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிச் சுற்று வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் இன்றைய போட்டியில் வங்க தேசத்தை வென்றாக வேண்டிய நிலையில் அது உள்ளது.

நியூஸிலாந்து அணியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் அது கேப்டன் வில்லியம்சனையே பெரிதும் நம்பியுள்ளது. இங்கிலாந் துக்கு எதிராக 87 ரன்களைக் குவித்த அவர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் விளாசினார். அதே போன்று இன்றைய போட்டியிலும் அவர் ரன்களைக் குவிக்க வேண்டும் என்று நியூஸிலாந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவருக்கு உதவியாக மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன், லூக் ரான்ஜி ஆகியோரும் சிறப்பாக ஆடினால் நியூஸிலாந்து அணி மிகச் சாதாரணமாக 300 ரன்களைக் கடந்துவிடும்.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை அது தமிம் இக்பாலையே மலை போல நம்பியுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த தமிம் இக்பால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 95 ரன்களைக் குவித்தார். ஆனால் அவருக்கு தோள் கொடுக்கும் வகையில் மற்ற வீரர்கள் ஆடாதது வங்கதேசத்தின் பேட்டிங்கை சோர்வடையச் செய்துள்ளது. மற்ற வீரர்களும் தமிம் இக்பாலுக்கு தோள் கொடுக்கும் வகையில் ஆடினால் வங்கதேசத்தால் நியூஸிலாந்து அணிக்கு சவால் விடுக்க முடியும்.

இரு அணிகளுக்கும் இடையே சமீபத்தில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் வங்கதேச அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றி ருந்தது. அந்த வெற்றி தந்த கூடுதல் நம்பிக்கையுடன் வங்கதேச அணி இன்று நியூஸிலாந்தை சந்திக்கிறது.

வங்கதேசம்:

மஷ்ரஃப் மோர்டாசா (கேப்டன்), இம்ருல் கெய்ஸ், மஹ்மதுல்லா, மெகதி ஹசன் மிராஜ், மோசடெக் ஹோசைன், முஸ்பிஹூர் ரகிம், முஸ்டாபிஸூர் ரஹ்மான், ரூபல் ஹோசைன், சன்ஜாமுல் இஸ்லாம், சபிர் ரஹ்மான், ஷபியுல் இஸ்லாம், ஷாகிப் அல்-ஹசன், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், தஸ்கின் அகமது.

நியூஸிலாந்து:

வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், ஜீத்தன் படேல், கோரே ஆண்டர்சன், டாம் லதாம், லூக் ரான்சி, டிரென்ட் போல்ட், மிட்செல் மெக்லீனகன், மிட்செல் சான்ட்னர், நீல் புரூம், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, காலின் டி கிராண்ட் ஹோம்.

நேரம்: மதியம் 3 | இடம்: கார்டிப் | நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x