Last Updated : 01 Jan, 2014 02:52 PM

 

Published : 01 Jan 2014 02:52 PM
Last Updated : 01 Jan 2014 02:52 PM

சென்னை ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் யூகி பாம்ப்ரி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

சர்வதேச தரவரிசையில் 195-வது இடத்தில் உள்ள பாம்ப்ரி 6-4, 6-3 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 64-வது இடத்தில் உள்ள ஸ்பெயினின் பாப்லோ கரீனோ பஸ்டாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.

19-வது ஏர்செல் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 2-வது நாளான செவ்வாய்க்கிழமை “மெயின் கோர்ட்”டில் நடைபெற்ற முதல் போட்டியில் வைல்ட்கார்ட் வீரரான யூகி பாம்ப்ரி, பாப்லோ கரீனோ பஸ்டாவை எதிர்கொண்டார். முதல் செட்டின் 3-வது கேமில் பஸ்டாவுக்கு கடும் சவால் அளித்தார் பாம்ப்ரி. டியூஸ் வரை சென்ற இந்த கேமில் பாம்ப்ரி “அட்வான்டேஜில் இருந்தபோது, டபுள் பால்ட் அடித்து தனது சர்வீஸை இழந்தார் பஸ்டா.

எனினும் உடனடியாக சரிவிலிருந்து மீண்ட புஸ்டா, அடுத்த கேமில் பாம்ப்ரியின் சர்வீஸை எளிதாக முறியடித்து பதிலடி கொடுத்தார். பாம்ப்ரி டபுள் பால்ட் தவறு செய்ததும் அவர் தனது சர்வீஸை கோட்டைவிட்டதற்கு ஒரு காரணம் ஆகும். இதன்பிறகு 8-வது கேம் வரை இருவரும் மாறி மாறி தங்களின் சர்வீஸை வசப்படுத்திக் கொண்டனர். 9-வது கேமில் 2-வது முறையாக பஸ்டாவின் சர்வீஸை முறியடித்த பாம்ப்ரி, 10-வது கேமோடு முதல் செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 6-4 என்ற கணக்கில் பாம்ப்ரி வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் 3-வது கேமில் பஸ்டாவின் சர்வீஸை முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற யூகி பாம்ப்ரி, 5-வது கேமிலும் பாம்ப்ரியின் சர்வீஸை முறியடிக்க முயன்றார். இருமுறை டியூஸ் வரை சென்ற இந்த கேமில் கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீஸை மீட்டார் பஸ்டா. இதன்பிறகு 7-வது கேமின் சர்வீஸ் போட்ட பஸ்டா சற்று தடுமாறியபோதும், பின்னர் ஒரு ஏஸ் சர்வீஸை அடித்து சரிவிலிருந்து மீண்டார். எனினும் 9-வது கேமில் கடுமையாகப் போராடியபோதும் பஸ்டாவால் தனது சர்வீஸை மீட்க முடியாமல் போனது. அவர் கடுமையாகப் போராடியபோதும் பாம்ப்ரியிடம் சர்வீஸை இழக்க, அந்த செட் 6-3 என்ற கணக்கில் பாம்ப்ரி வசமானது.

1 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பஸ்டா 3 ஏஸ் சர்வீஸ்களும், யூகி பாம்ப்ரி 2 ஏஸ் சர்வீஸ்களும் அடித்தனர். பாம்ப்ரியின் சர்வீஸில் வேகமில்லை. அவர் சராசரியாக மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தார்.

எனினும் சில நல்ல ஷாட்களை ஆடியது அவருக்கு பலம் சேர்ப்பதாக அமைந்தது. அதேநேரத்தில் பஸ்டா அதிகபட்சமாக மணிக்கு 202 கி.மீ. வேகத்தில் சர்வீஸ் அடித்தபோதிலும் அவரால் யூகிக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவோடு விளையாடிய யூகி பாம்ப்ரி, எளிதாக வெற்றியை ருசித்தார்.

யூகிக்கு 2-வது வெற்றி

தொடர்ந்து 4-வது ஆண்டாக சென்னை ஓபனில் பங்கேற்றுள்ள பாம்ப்ரி, ஒற்றையர் பிரிவில் 2-வது வெற்றியை ருசித்துள்ளார். முன்னதாக 2012 சென்னை ஓபனின் முதல் சுற்றில் , ஸ்லோவேகியாவின் கரோல் பெக்கை வீழ்த்தினார். எனினும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச்சிடம் தோல்வி கண்டார் யூகி பாம்ப்ரி. அதுதான் சென்னை ஓபனில் யூகி பெற்ற முதல் வெற்றி.

யூகி பாம்ப்ரி நெகிழ்ச்சி

போட்டி முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த யூகி பாம்ப்ரி, “இந்த வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. சர்வதேச தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் வீரர்களுக்கு எதிராக நான் பெற்ற சில வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்தப் போட்டியின் தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தேன். எனினும் ஒரு கட்டத்துக்குப் பிறகு நம்பிக்கை ஏற்பட்டது” என்றார்.

யூகி தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னியை சந்திக்கவுள்ளார். அந்த போட்டி குறித்துப் பேசிய அவர், “உலகின் முன்னணி வீரர்களுள் ஒருவரான ஃபாக்னியுடனான அடுத்த ஆட்டம் கடும் சவாலானதாக இருக்கும். எனினும் மிகுந்த நம்பிக்கையுடன் அவரை எதிர்கொள்வேன். என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்பேன்” என்றார்.

பௌதிஸ்டா அதிர்ச்சி தோல்வி

கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறிய ஸ்பெயினின் ராபர்ட்டோ பௌதிஸ்டா அகட் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி கண்டார். சர்வதேச தரவரிசையில் 58-வது இடத்தில் உள்ள பௌதிஸ்டா 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் சர்வதேச தரவரிசையில் 270-வது இடத்தில் உள்ள ரஷியாவின் அலெக்சாண்டர் குட்ரியாவ்சேவிடம் தோல்வி கண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x