Published : 17 Jan 2017 05:12 PM
Last Updated : 17 Jan 2017 05:12 PM

இந்தியாவில் ஷேன் வார்னே கூட திணறிய நிலையில் ஏன் இத்தனை ஸ்பின்னர்கள்? - ஜெஃப் லாசன் கேள்வி

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்காக இங்கு வரும் ஆஸ்திரேலிய அணியில் வழக்கத்துக்கு மாறாக 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நேதன் லயன், இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஓ’கீஃப், ஆஷ்டன் ஆகர், மற்றும் ரிஸ்ட் ஸ்பின்னர் ஸ்வெப்சன் ஆகிய ஸ்பின்னர்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களுடன் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இது அதிகமானது என்று விமர்சித்த முன்னாள் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஜெஃப் லாசன் மேலும் கூறியதாவது:

“இந்திய அணியை இந்தியாவில் வீழ்த்த ஆஸ்திரேலியாவுக்கு என்ன தேவை என்பதில் தேர்வுக்குழுவினர் சோடை போயுள்ளனர். அங்கு இந்தியா தான் வெல்ல என்ன செய்ய வேண்டுமோ அப்படி அணியை தேர்வு செய்கிறது, ஆனால் நாமோ நாம் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்யவில்லை. இந்திய பிட்ச்களில் இந்தியா என்ன செய்யுமோ அதனை நாமும் செய்ய முடியாது.

ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சில்தான் கவனம் செலுத்த வேண்டும். ஹேசில்வுட், ஸ்டார்க் என்று நம்மிடம் உலகத்தர வேகம் உள்ளது, இவர்கள் எங்கு வேண்டுமானாலும் சிறப்பாக வீசக் கூடியவர்கள். ரிவர்ஸ் ஸ்விங் வீசுவார்கள், இந்திய பேட்ஸ்மென்களுக்குச் சவால் அளிப்பார்கள்.

பெரிய அளவில் ஸ்பின் ஆகும் பிட்ச்களை இந்தியாவில் இடுவார்கள், அது அவர்கள் உரிமை. அவர்கள் அதில் ஆட முடியும். அதில் பேட், பவுல் செய்வது எப்படி என்பதில் அவர்கள் வல்லவர்கள். அங்கு அஸ்வின், ஜடேஜா ஆகியோரை ஏறக்குறைய ஆடவே முடியாது என்றே கூற வேண்டும்.

எனவே அந்தச் சூழலில் இந்தியாவை வீழ்த்த ஆஸ்திரேலிய வழிதான் சரிப்பட்டு வருமே தவிர இந்திய வழி சரிப்படாது. இந்தியாவுக்குச் செல்கிறோம் என்பதற்காக ஸ்பின்னர்களை தேர்வு செய்தல் கூடாது.

2004-ம் ஆண்டு இந்தியாவில் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்றது வேகப்பந்து வீச்சாளர்களாலேயே (மெக்ரா, கில்லஸ்பி, காஸ்பரோவிச்).

ஸ்வெப்சனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். இந்தியாவில் ஷேன் வார்ன் கூட திணறினார்.

இந்நிலையில் ஸ்வெப்சன் போன்றவரை விராட் கோலி படைக்கு எதிராக களமிறக்குவது உசிதமாகப் படவில்லை. கோலி தற்போது மிகவும் அனாயசமாக விளையாட்டுத் தனமாக ரன்களை குவித்து வருகிறார். எதிரணி ஸ்பின்னர்கள் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

இவ்வாறு கூறினார் ஜெஃப் லாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x